திங்கள், 1 ஜனவரி, 2024

கூடலழகர் கோவில்

சிலப்பதிகாரம் இதனை ‘உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்’ என்று குறிப்பிடுகிறது. ( உவணச்சேவல் என்றால் கருடன். அதன் கொடியுடையவன் திருமால்!)( கோழிச்சேவல் கொடியோன் கோட்டம்‌ என்று முருகன் கோயிலைக் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்!)

 'இருந்தையூர் இருந்த செல்வ' என்று‌ பரிபாடல் இக்கோவிலைப் பேசுகிறது.

வியூக சுந்தரராஜன்‌ என்று போற்றப்படும் உற்சவர் மன்னர்கள்‌ போருக்குப் புறப்படும்‌ முன் வணங்கி செல்பவராக விளங்குகிறார்.

பாண்டியன் கிழியறுத்த பட்டர் பிரான் இந்தக் கோவில் பெருமாளைத்தான் பல்லாண்டு பல்லாண்டு பாடியுள்ளார்.

⁠மதுரை நகரமானது திருமாலின் உந்தியின் அலர்ந்த தாமரை மலரை ஒக்கும்.

⁠அந்த நகரத்துள்ள தெருக்கள் அம்மலரின் இதழ்களை ஒக்கும்.

⁠பாண்டிய மன்னனது அரண்மனை, அம்மலரின் நடுவில் உள்ள பொகுட்டை ஒக்கும்.

⁠அந்நகரில் வாழும் தமிழ்க் குடிமக்கள் அத்தாமரை மலரின் தாதுக்களை ஒப்பர்.

⁠அந்நகரைத் தேடி வரும் பரிசில் வாழ்நர் தாதுண்ண வரும் வண்டுகளை ஒப்பர். மதுரை நகர மாந்தர் மறை முழக்கத்தின் ஒலி கேட்டு நாள்தோறும் துயிலெழுவரே யன்றி மற்றைய வஞ்சி நகரத்தாரும், உறையூராரும் போலக் கோழி கூவுதலாலே விடிதலை உணர்ந்து துயிலெழுவதில்லை...!😊

"⁠மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் 
⁠பூவொடு புரையும் சீரூர்-பூவின் 
⁠இதழ்கத் தனைய தெருவம் இதழகத் 
⁠தரும் பொகுட் டணைத்தே அண்ணல் கோயில் 
⁠தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள் 
⁠தாதுண் பறவை அனையர் பரிசில் வாழ்நர் 
⁠பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த 
⁠நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப 
⁠ஏம இன்துயில் எழுதல் அல்லதை 
⁠வாழியும் வஞ்சியும் கோழியும் போலக் 
⁠கோழியின் எழாது எம்பேருள் துயிலே."
- பரிபாடல்

கூடல் மாநகர் என்ற மதுரையின் சிறப்புப் பெயரால் வதியும் கோவில்.

பெரியாழ்வார், திருமங்கை மன்னன்‌மங்களாசாசனம் செய்த கோவில்.

இவை எதுவும் அறிந்திருக்க வேண்டிய அவசியமின்றி....
தமிழும், தெலுங்கும், சௌராஷ்டிரமும், இந்தியும் ஒலிக்க குடும்பத்துடன் கூடி இருந்து வழிபடும் பல வெகு ஜனங்கள் தங்கள் வாழ்வின் ஆதார நம்பிக்கையாகக் கொண்ட இறைவன் உறையும் திருத்தலம்.

ஆங்கிலப் புத்தாண்டில் அத்துணை கூட்டம். கிராமத்து மனிதர்களும், நகரத்து    எளியோரும், சுற்றுலா பயணிகளும், குடும்பத்தோடு  பிறந்த வீட்டுக்கு வந்த திருமணமான‌ பெண்போல 
ஆசுவாசமாக அமர்ந்து அளவளாவும் காட்சிகள். 
அந்தணர் குழாம் திராவிட வேதம் ஓதுதல் ஒரு புறம். 

அனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவேறட்டும். அவர்தம் பல்லாயிரம் ஆண்டு மாறா நம்பிக்கை இந்த தேசத்தை வளப்படுத்தட்டும்.

கூடலழகர் இருக்க குறையொன்றுமில்லை!

வெள்ளி, 18 நவம்பர், 2022

நினைப்பும், மறப்பும்.

#கந்தர்_அனுபூதி

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
- வள்ளுவப்பெருந்தகை. 

ஒளி பொருந்திய கண்களை உடைய இவளின் குணத்தை நான் நினைப்பதே இல்லை...ஏனெனில் மறந்தும் கூட‌ மறப்பதில்லை...என்கிறான் தலைவன்.

கங்கை அமரன் இதையே எழுதுகிறார்..," மறந்தால் தானே நினைக்கணும் மாமா நினைவில் நீங்காமல் நீதானே..." என்று.

நினைப்பு, மறப்பென்னும் மனதின் ஆதாரமான இருசெயல்கள் ஒன்றை ஒன்று‌ சார்ந்துள்ளது. மனம்‌ என்பதே எண்ணங்களின்‌ தொகுப்பு தானே..? இவ்விரு‌ பைனரி நிலைகளும் மனித வாழ்வின் அலைகழிப்புக்கு ஆதார‌ காரணம்.

அதனால்தான் கவியரசர், "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா....!" என்று இறைஞ்சுகிறார்.
நினைப்பும் மறப்புமே மனத்தின் வரமும் அதுவே சாபமும் அதுவே!

நினைப்பும்‌ மறப்பும் கடந்து ஒரு நித்ய நிலை அடைவதே மனித தேடல்களின் உச்சமாக இருக்கும் போல.

"நின் போதத்தாலே நினைப்பும் மறப்புமென்றால் என்போதம் எங்கே இயம்பாய் பராபரமே..." - தாயுமானவ ஸ்வாமி. 
நினைப்பும்‌,மறப்பும் என் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிறார்.

"மறப்பும், நினைப்புமற்று மாண்டிருப்பது எக்காலம்..?" என்கிறது பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல்!

இதைத்தான் " ......பரமானந்தத்தில்
தேங்கார் நினைப்பும் மறப்பும் அற்றுத் தூங்கார் ஓங்காரத்துள்ளொளியில் ஒடுங்கார்...." என்றும் திருமறை பேசுகிறது.

"கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே."

என்று கந்தர் அனுபூதி பாடுகிறது.

கருதா மறவா நெறி என்பதை லௌகீகமாக தீயதைக் கருதா..அவனடியை மறவா நெறி என்று‌ கொள்ளலாம்.

நினைப்பு மறப்பென்னும் இருநிலை கடந்த ஓங்காரத்தொடுங்கும் உள்ளொளி நிலையாகவும் கொள்ளலாம்.

ஓம் முருகா!

புதன், 2 நவம்பர், 2022

கைம்மை சடங்கு‌ சம்பிரதாயம்

சடங்குகளும் சம்பிரதாயங்களும்.

நமது வாழ்வில் நாம் பிறந்து மனமாற சிந்திக்கத் துவங்கும் பால்ய வயதுக்கு முன்னதாகவே நம் குடும்பத்தினரைப் பார்த்து சில செயல்களை இமிடேட் செய்யத் துவங்குகிறோம்.

பள்ளி‌ப் பருவத்தில் விபூதி வைத்துக் கொள்வது, பேப்பரை மிதித்தால் கன்னத்தில் போட்டுக் கொள்வது, குடும்ப பெரியவர்களைப் பார்த்தால் காலில் விழுவது, வீட்டு விலக்கான‌ பெண்களிடம் மேலே பட்டுவிடாமல் நடப்பதும், காப்பி, தண்ணீரை வாயில் படாமல் குடிப்பது, கோழி சாப்பிட்டாலும் சேவல்கறி தின்னாதது, செவ்வாய், சனி சைவம், இறந்தோரை புதைப்பது, எரிப்பது அதில் பல வகை புதைப்பு, பலவகை எரிப்பு என.

இவற்றுக்கெல்லாம் காலப்போக்கில் நியாய, அநியாய காரணங்கள் உணர்ந்தாலும் அனிச்சையாய் சிலது( ரு)ம், பயத்தில் சிலது( ரு)ம், பெருமையாய் சிலது( ரு)ம், அடையாளத்துக்காக சிலது( ரு)ம், பின்பற்றுகின்றதை நாம்‌பார்க்கிறோம்.

பகுத்தறிவு முற்போக்கு பேசும் பலரே இறந்தால் எளிதாக எலக்ட்ரிக் இடுகாட்டில் எரிக்காமல் சம்பிரதாயத்திற்காக சமாதிகட்டுவதும், கட்சி/ அரசு இடத்தை ஆக்ரமிக்க புதைப்பதும் கண்கூடு.

ஓட்டுக்காகவும், குறுங்குழுவில் கெத்துகாட்டவும் முற்போக்கு நாத்திகம் பகுத்தறிவு பேசுவதும் சொந்த அக்கா செத்துவிட்டா படையல் போட்டு திருநீற்றுடன் சாவுவிருந்து சாப்பிடுவதும் நாம் கண்ட நடிப்புச் சுதேசிகள்.

குறிப்பிட்ட கோவிலுக்குள்‌சென்றால் ஆட்சி போய்விடும் என்று பட்டுக்கு தோஷம் தாக்காது என‌ அதிசயமாக பட்டு வேட்டி கட்டி கோவிலுக்கு போன பகுத்தறிவு பகலவன்கள் தான் ஊரை சனாதனி என்று சாடுவது.

காலமெல்லாம் பகுத்தறிவு எனப் பேசி கடைசி காலத்தில் தேவாரம்/ திருப்புகழ் பிரசங்கம் செய்த ராசா ராமர்கள் உண்டிங்கு.

ஒரு சமயத்தில் தொப்பி போட்டு கஞ்சி குடித்து உறவு பேணுவது இன்னொரு‌ சமயத்தில் திருநீறை‌ மறுப்பது என பகுத்தறிவு தளத்தில் இயங்கும் போலிகள் தான்‌ இங்கு சடங்குகள் பற்றி வாய்கிழிய பேசுகிறார்கள்.

சமாதிகளில் போய் தயிர் வடைகளும், ஜண்டை‌ மேளங்களும், பால் ஊற்றுதலும் தூள் பறக்க சாமானியனது நம்பிக்கையை ஏளனம் செய்து தகர்த்து ஆதாயம்‌ பார்ப்பார்கள்.

சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஒரு குடியின்‌, இனத்தின் , சமூகத்தின் அடையாளம். உணவைப் போல் மொழியைப் போல் மற்றொரு‌ அடையாளம்.

உடன்கட்டை ஏறுதல் இளகி கைம்மை நோன்பாகியது. கைம்மையும் எளிமைப்பட்டு தாலி, குங்குமம் தவிர்த்லாகியது. வரும் காலங்களில் அவசியமானால் மறுமணமும் ஏற்கப்படலாம்.

நாம் வாழும்‌ காலத்து துயரங்கள் கடந்த காலங்களில் சாதாரணமாகத் தோன்றியது போல இக்கால பிரச்னைகள் வருங்காலத்தில் பூதாகாரமானதாக உணரப் படலாம்.

"பழையன கழிதலும் புதியன‌ புகுதலும் வழுவல; காலவகையினானே!" என்று மரபை மாறுதலுக்குட்பட அனுமதிப்பதை எந்த நூலில் கூறியிருக்கிறார் தெரியுமா? கடுமையான‌ மரபை விளக்கும் இலக்கண நூலாகிய‌ நன்னூலில் என்பதே நம்‌முன்னோர்‌ வாழ்வைப் புரிந்து கொண்டதின் ஆச்சர்யமான அளவு கோல்!

சங்க காலத்திலேயே கணவனை இழந்து கைம்மை நோன்பு வாழும் பெண்களை தொடி கழி மகளிர், ஆளில் பெண்டிர், உயவல் பெண்டிர், கழிகலமகளிர், கழிகல முகடூ, பருத்திப்பெண்டிர், என்று குறிப்பிடுகிற நிலையும் வழக்கில் இருந்திருக்கின்றது.

புறநானூற்றிலேயே..வண்டிச் சக்கரத்தில் அமர்ந்த பல்லிபோல வாழ்க்கையை அவரே உலகமென கழித்துவிட்டேன். அவருடைய ஈமத்தாழியில் எனக்கும் இடம் இருக்குமாறு‌பெரிதாக வனைவாயாக.. கலம் செய் கோவே! என்ற பாடல் நெகிழ வைப்பது.


சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்
829 views
Subscribe 
Mani Manivannan's profile photo
Mani Manivannan
unread,
3/18/14
to tamilmanram


puthu.thinnai.comhttp://puthu.thinnai.com/?p=17458
சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள் | திண்ணை

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar...@gmail.com

கைம்பெண்

சங்ககாலப் பெண்கள் திருமணத்திற்குப்பின்  பிறந்த வீட்டில் பெற்றோருடன் உடனுறைந்து வாழவில்லை. கணவனுடன் இணைந்து இன்ப வாழ்வு வாழ்ந்தனர். பழங்காலத்தில் வாழ்ந்த பெண்கள் கணவரைப் பேணும் பண்புடையவர்களாக விளங்கினர்.  கணவனை இழந்த பெண்களைக் கைம்பெண்கள் என்று வழங்கினர். கணவன் இறந்த பின்னர் பெண்கள் கணவனுடன் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொண்டனர். அதைவிடப் பெண்கள் கைமை நோன்பு நோற்று தமது வாழ்க்கையைக் கழித்தனர் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

கைம்மைக் கோலம்

வளையல்களைக் களைதல்

பெண்களின் ஒப்பனை கணவன் இறந்த நிலையில் சிதைவு பெற்று கைம்மைக்குரிய தோற்றத்தை உருவாக்குகிறது. கணவனை இழந்து வாழும் பெண்கள் மங்கலப் பொருள்களை நீக்கி வாழ வேண்டும். வளையல் அணிதல் கூடாது என்று சமுதாயம் வலியுறுத்தியது. இதனை,

‘‘வாழைப் பூவின் வளைமுறி சிதற’’ (புறம்., 237.10-12)

‘‘தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடி’’ (புறம்.,238.5-7)

என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன. வெளிமான் என்ற மன்னன் இறக்க அவனுடைய உரிமை மகளிர் தங்கள் கைகளில் அணிந்திருந்த வளையல்களை உடைத்தெறிந்தனர். இதனால் அவர்களது கைகளின் கவின் குறைந்து பார்ப்பதற்கு வெறுமையாகக் காட்சியளித்தன என்று பெருஞ்சித்திரனார் குறிப்பிடுகின்றார்.

அணிகலன்களைக் களைதல்

கணவனுடன் வாழ்கின்ற பெண்களே பல்வேறு அணிகலன்களை அணிந்திருப்பர். கணவனை இழந்த பெண்கள் எந்தவிதமான அணிகலன்களையும் அணிதல் கூடாது. கரிகாற் பெருவளத்தான் மறைந்தான். அவனால் ஆதரிக்கப்பெற்ற அனைவரும் வருந்தினர். அவனது உரிமை மகளிர் தாங்கள் அணிந்திருந்த அனைத்து அணிகலன்களையும் களைந்து பெருந் துயருற்றனர். இதனை அவனது இறப்பினைக் கண்டு கலங்கிய கருங்குழலாதனார் எனும் புலவர்,

‘‘பூ வாட் கோவலர் பூவுடன் உதிரக்

கொய்து கட்டுஅழித்த வேங்கையின்

மெல்லியல் மகளிரும் இழை களைந்தனரே’’’ (புறம்.,224,15-17)

என்று துயருற்றுப் பாடுகின்றார்.

கூந்தல் களைதல்

பெண்களுக்கு அழகு தருவது கூந்தல். அக்கூந்தலிலேதான் பெண்கள் மலரணிந்து மகிழ்ந்தனர். கணவன் இறந்து படவே தமக்கு அழகு தந்த கூந்தலைப் பெண்கள் களைந்தார்கள். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியபோது,

‘‘மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல்

ஒள்நுதல் மகளிர் கைம்மைகூர

அவிர் அறல் கடுக்கும் அம்மென்

குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே’’ (புறம்.25:10-14)

என்று பாடுகின்றார். நெடுஞ்செழியனே நீ படையெடுத்துப் பகைவரை அழிப்பதால், பகைவர்களது மனைவியர் கைம்மையை மேற்கொள்ள வேண்டி விளங்கித் தோன்றும் ஆற்றின் கரிய தலைமுடியினைக் களைந்தார்கள் என்று கைம்பெண்கள் கூந்தலைக் களைந்ததை எடுத்துரைக்கின்றார்.

கைம்பெண்களின் உணவும் அவர்களது நிலையும்

கணவனை இழந்த பெண்கள் மிகவும் துன்பச் சூழலில் வாழ்ந்தனர். அவர்கள் தங்களை அழகுறுத்திக் கொள்வதும் நல்லுணவு உண்பதும் சமுதாயத்தால் மறுக்கப்பட்டது. அவர்கள் மிகுந்த இழிந்த வாழ்வு வாழ்ந்தனர். தமது கணவன் இருந்தபோது மகிழ்வுடன் வாழ்ந்த மகளிர் கணவன் இறந்த பின்னர் அனைத்து இன்பங்களையும் துறந்து வாழ்ந்தனர். இதனை,

‘‘குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்

இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்

கண்ணீர்த் தடுத்த தண்நறும் பந்தர்

கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி

அல்லி உணவின் மனவைியொடு இனியே

புல்லென்றனையால் வளம் கெழுதிருநகர்

வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்

முனிந்தலைப் புதல்வர் தந்தை

தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே’’ (புறம்.250:3-4)

என்ற தாயங்கண்ணியாரின் பாடல் தெளிவுறுத்துகின்றது.

தலைவனை இழந்து, பொலிவிழந்து காணப்பட்ட இல்லத்தைப் பார்த்த புலவர், மாளிகையே, புதல்வருடைய தந்தை தனியிடத்தையுடைய புறங்காட்டை அடைந்தான். தாளிக்கும் ஓசை மிகுந்த திரண்ட துவையலுடன் கூடிய உணவு இரவலரை மேற்செல்லாது தடுத்துத் தன்னிடம் வருமாறு செய்யும் வாயிலினையும் தன்னால் காக்கப்பெறுவோரின் கண்ணீரைத் தடுத்து மாற்றிய குளிர்ந்த மணமுடைய பந்தலையும் உடையதாய் முன் விளங்கினை. அத்தகைய இடத்தில் மயிரைக் களைந்தும் சிறிய வளையலை நீக்கியும் அல்லியரிசியாகிய உணவுண்ணும் மனயைிவியுடன் நீ இருந்து பொலிவழிந்தாய் என்று வருந்திப் பாடுகின்றார். இதில் கைம்பெண்களின் நிலைசித்திரிக்கப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

கைம்பெண்களின் அழகிழந்த நிலை

கணவனை இழந்த பெண்கள் கூந்தல், வளையல், அணிகள் ஆகியவற்றை இழந்து பொலிவிழந்து காணப்பட்டனர். அவர்களின் அழகற்ற நிலையானது அழகற்ற இல்லம்போன்று காணப்பட்டன. இத்தகைய கைம்பெண்களின் அவல நிலையை,

‘‘நிரை இவன் தந்து, நடுகல் ஆகிய

வென்வேல் விடலை இன்மையின் புலம்பி

கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய

கழிகல மகடூஉப் போலப்

புல்லென்றனையால் பல்லணி இழந்தே’’(புறம். 262)

என்று வாள்போரில் வீழ்ந்தவனைப் பார்த்து யாழ்ப்பாணர் வருந்தி ஆவூர் மூலங்கிழார் பாடுகின்றார். இப்பாடல் கைம்பெண்களின் வாழ்க்கைநிலையை தெளிவுறுத்தும் பாடலாக அமைந்துள்ளது.

கைம்மைத் துயர்

பூதப்பாண்டியன் இறந்தான். அவனது மனைவி பெருங்கோப்பெண்டு பெருந்துயருற்றாள். தன் கணவன் இறந்த பின்னர் உயிர்வாழ்வதா? என்று கருதி தீப்பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள். அப்போது கைம்மைத் துயர் எத்தன்மையது என்பதை,

//‘‘அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட

காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது

அடைஇடைக் கிடந்த கைபிழி பண்டம்

வெள்எட் சாந்தொடு புளிப்பெய்து அட்ட

வேளை வெந்தை வல்சி ஆக

பரற் பெய்பள்ளிப் பாய்இன்று வதியும்

உயவல் பெண்டிரேம் அல்லேம்மாதோ

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்

நுமக்கு அரிதாகுகதில்ல. எமக்கு எம்

பெருந்தோட் கணவன் மாய்ந்தென’’ (புறம்.,246)

என்று எடுத்துரைக்கின்றாள்.//

உயிர்களுக்கு மட்டுமல்ல சடங்கு சம்பிரதாயங்களுக்கும் ஃபிட்டஸ்ட் ஆஃப் தி ஸர்வைவல் பொருந்தும்.









சனி, 29 அக்டோபர், 2022

கவிதை: மழை

உலர்ந்த மண்ணுக்கும் 
உணர்ந்த மனசுக்கும்
ஒத்தடமாய் இறங்கியது மழை.

கவிதை: பகுத்தறிவு

தமிழ்ச் சூழலில்.... பகுத்தறிவு பேசுவோர் வேறு, பகுத்தறிவுடன் வாழ்வோர் வேறு!

வெள்ளி, 28 அக்டோபர், 2022

ஒரு‌மகள் தன்னை உடையேன்....

ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான்

பெருமக ளாய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை

மருமக ளைக்கண்டு கந்து மணாட்டுப்பு றம்செய்யுங் கொலோ.
- பெரியாழ்வார் பாசுரம். (300)

ஒத்தைக்கொரு பெண்ணாக பெற்றேன். அவளை உலகமே புகழும் வண்ணம் இலக்குமி போல வளர்த்தேன்.

செங்கண்மால் ஆகிய பெருமாள் கொண்டு போய் விட்டான்.

இது பெற்றவளின் கவலை. அடுத்து போன இடத்துல மாமியார்க்காரி என்ன செய்வாளோ என்பது கவலையின் தொடர்ச்சி. மாமியாரை மகிழ்விக்க அவளை முதலில் பாராட்டி விட வேண்டுமல்லவா? பெண்ணைக் கொடுத்த பெற்றோரெல்லாம் சம்மந்தியம்மாவை கொஞ்சம் அதிகமாகப் புகழ்வது உண்டே!

"பெருமகளாய்க் குடி வாழ்ந்து....."

அதாவது பெருமகளாய் + குடி‌வாழ்ந்து எனப் பிரித்தால் 
முதன்மையான தலைவியாக குடியில் வாழ்ந்தவள்..என்றும்,

 பெரு மகள்+ ஆய்க்குடி வாழ்ந்து எனப் பிரித்தால் இடைச்சேரிக்குத் தலைவியாக  வாழ்ந்த யசோதை என்றும் பொருள்‌படும்.

இத்தகு யசோதை... பெரும் பிள்ளை பெற்றவள்...தன் மருமகளைக் கண்டு..
ஏற்பாளோ..? சீர் செய்வாளோ? 
( மருமகளுக்கு மாமியார்‌ செய்யும் சீருக்கு மணாட்டுப்புறம் என்ற‌ பெயரோ!)
எனகவலை கொள்கிறார்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இங்கொரு நயவுரை எழுதுகிறார்.

என்மகளை எவ்வாறு கொண்டு போகலாம் எனத்திட்டமிட்டே இரவெல்லாம் கண்விழித்து அவன் 'செங்கண்மால்' ஆகிவிட்டான் என ஆழ்வார் குறிப்பிடுவதாக!

சும்மாவா சொல்லி வைத்தார்கள்...
"திவ்ய" பிரபந்தம் என!

சனி, 8 அக்டோபர், 2022

கழைதின்‌யானையார் - ஈகை

கழைதின்‌ யானையாரும்...
கார் ஏசியும்.

பல லட்சம் பெறுமதியுள்ள காரில் அமர்ந்து, நிறுத்திய காரிலும் ஏசி போட்டு வெயில் தாக்காதபடி செல் பேசிக் கொண்டிருந்தேன்.

வெளியில், வெயிலில் ஒரு பேரிளம் பெண், அவர்தம் பெண்,பேத்தி என்று அனுமானிக்கத் தக்க நான்கு உழைக்கும் வர்கப் பெண்கள் கார் கண்ணாடியைத் தட்டி கையேந்தினர்.

கோவையில் சில ஆண்டுகள் முன்பு வரை இவ்வளவு இரப்போரைக் காண முடியாது.

திருநங்கையர், ஊனமுற்றோர் என ஓரிருவர் எதிர்படுவர். சில ஆண்டுகளாக வடநாட்டு ஏழைப் பெண்டிர் குழந்தைகளுடன் இரத்தல் வழமையான‌ நடப்பாக இருக்கிறது.

ஆனால் தமிழ் முகத்துடன் கூடிய உழைக்கும் வர்கத்தவர் கையேந்த கொரானா காரணமா?!

கோவிட் பாதுகாப்பால், டிமோ காரணத்தால் காசு பணம் கையில் வைத்திருப்பது அரிதாகி விட்டது.

எதற்கும் ஜிபே தான்! கார்டு தான்!

நாள் முழுதும் வெயிலில் நின்று கார் எடுக்கும்‌ போது ரிவர்ஸ் பார்க்கும் ஓட்டல், பார்க்கிங் செக்யூரிட்டி நபர்களுக்கு கூட ஐந்து ரூ, பத்து ரூ தருவதும் சமயங்களில் சில்லறை இல்லாததால் வெட்கி விரைதலும் நடக்கும்.

ஆனால் ஒரு குடும்பமே கையேந்தும்‌ போது சுத்தமாக சில்லரை இல்லாத தர்மசங்கடம்.

கூலிவேலை முடிந்து வீடுசெல்லும் சில நகர்ப்புற ஏழைமக்கள் உபரிக்காக இவ்வாறு இரந்தாலும் சரி...,
உண்மையாகவே வருமானமின்றி உணவுக்காக இரந்தாலும் சரி,
பாக்கட்டில் உள்ள பணத்தில் மிகக்குறைந்த டினாமினேசனோ ரூ.50/-🙄

இப்போது இருதலைக் கொள்ளி எறும்பாக நான்.😟

ஹாம்லட் போல டுகிவ்? ஆர் நாட் டுகிவ்?! என்று ஷேக்ஸ்பியர்‌ லெவல் குழப்பம்.

அதை உணர்ந்தது போலவே அந்த நான்கு பேரும் காருக்கு வெளியே கையேந்தியபடி.

ஏசியில் கூட எனக்கோ கூச்சத்திலும், குழப்பத்திலும் வியர்த்தது.

அம்பது ரூபாய் பிச்சை போட நான் மைடியர்‌ மார்த்தாண்டன் பிரபு அல்லவே..?!

முடிவு எடுக்காமல் இருப்பதும் ஒரு‌ முடிவுதான் என்று‌ PV.Narasimha Rao பாணியில் அமைதி காத்தேன்.

 There Is No Alternative  என்ற TINA factor அவர்களுக்குத் தெரிந்திருக்கும் போலும்.
Stand on the deck என்ற‌ கட்டளைக்கு கீழ்ப்‌படிந்து எரியும் கப்பலில் நின்ற casabianca போல அசையாமல் எரியும் வெயிலில் நின்றார்கள்.

நானும் கண்ணை அவர்கள் பக்கம் திருப்பாமல் டஃப் குடுக்க முயன்றேன்.

மண்டையில் 'ணங்' என்று அடிவிழும் ஒலி.

"ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று ..."

என்ற வரிகள் மனதில் மின்னலிட்டது.

வறுமையால் பொருளை இரப்பது இழிவு தான்...ஆனால் அதைவிடவும் வறியோருக்குத் தன்னிடமுள்ள‌ பொருளைத் தரமாட்டேன் என்று மறுப்பது அதைவிட இழிவு!

உடனே சட்டைப் பையிலிருந்த ஐம்பது ரூபாயை கண்ணாடியைக் கீழிறக்கி நீட்டிவிட்டேன்.

"இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்" என்று பிற்கால ஔவையார் சொற்கான உந்துதலாக..

புறநானூறு 204ம் பாடலில்...
புலவர் "கழைதின்‌ யானையார்" எழுதுகிறார்....

ஈ என இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே
ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச்
சேற்றொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர் பல ஆகும்
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர்ப் பழியலர் அதனால்
புலவேன் வாழிய ஓரி விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே.

கொல்லியாண்ட வல்வில் ஓரியிடம் பாடிப் பரிசில் பெற்றாரோ தெரியாது
இப்பாடல் தமிழர்களுக்கு தாத்தன்  கழைதின் யானையார் தந்த பரிசில் மட்டுமல்ல பூர்விகச் சொத்து.

இந்த‌வரிகளைப் பாருங்கள்....!

//தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே
ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச்
சேற்றொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர் பல ஆகும்//

கடலில் தெளிவான நீர் மிகுதியாக இருந்தாலும் தாகம் உள்ளவர் அதனை உண்பதில்லை. ஆனிரைகளும் அவற்றைக் கொன்று தின்னும் விலங்கினங்களும் சென்று உண்ணும் கலங்கிய நீராயினும் அதனை உண்ணச் செல்வோரின் எண்ணிக்கை மிகுதியாதலால் அதற்கு அமைந்த நடைபாதைகள் பல.

இவ்வரிகளில் சூசகமாக ஓரியை குறுநில மன்னனாக இருப்பினும் நன்னீர் நிலை என்கிறார்.

இவ்வரிகளில் அவர்‌காட்டும் சித்திரம்   அனிமல் பிளனட்‌ போன்ற சானல்களில் ஆப்பிரிக்க பாலை/காடுகளில் கலங்கிய நீர் நிலைகளை சுற்றி சுற்றி வரும் விலங்கினங்களை படம்‌பிடித்தது போல உள்ளது.

ஐம்பது ரூபாய் யாசித்துப் பெற்றும் எனக்கு 2500 ஆண்டு மூத்த "கழைதின் யானையார்‌" பாடலை அசைபோட வைத்த அப்பெண்களுக்கு நன்றி.