சிலப்பதிகாரம் இதனை ‘உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்’ என்று குறிப்பிடுகிறது. ( உவணச்சேவல் என்றால் கருடன். அதன் கொடியுடையவன் திருமால்!)( கோழிச்சேவல் கொடியோன் கோட்டம் என்று முருகன் கோயிலைக் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்!)
'இருந்தையூர் இருந்த செல்வ' என்று பரிபாடல் இக்கோவிலைப் பேசுகிறது.
வியூக சுந்தரராஜன் என்று போற்றப்படும் உற்சவர் மன்னர்கள் போருக்குப் புறப்படும் முன் வணங்கி செல்பவராக விளங்குகிறார்.
பாண்டியன் கிழியறுத்த பட்டர் பிரான் இந்தக் கோவில் பெருமாளைத்தான் பல்லாண்டு பல்லாண்டு பாடியுள்ளார்.
மதுரை நகரமானது திருமாலின் உந்தியின் அலர்ந்த தாமரை மலரை ஒக்கும்.
அந்த நகரத்துள்ள தெருக்கள் அம்மலரின் இதழ்களை ஒக்கும்.
பாண்டிய மன்னனது அரண்மனை, அம்மலரின் நடுவில் உள்ள பொகுட்டை ஒக்கும்.
அந்நகரில் வாழும் தமிழ்க் குடிமக்கள் அத்தாமரை மலரின் தாதுக்களை ஒப்பர்.
அந்நகரைத் தேடி வரும் பரிசில் வாழ்நர் தாதுண்ண வரும் வண்டுகளை ஒப்பர். மதுரை நகர மாந்தர் மறை முழக்கத்தின் ஒலி கேட்டு நாள்தோறும் துயிலெழுவரே யன்றி மற்றைய வஞ்சி நகரத்தாரும், உறையூராரும் போலக் கோழி கூவுதலாலே விடிதலை உணர்ந்து துயிலெழுவதில்லை...!😊
"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்-பூவின்
இதழ்கத் தனைய தெருவம் இதழகத்
தரும் பொகுட் டணைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்
தாதுண் பறவை அனையர் பரிசில் வாழ்நர்
பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம இன்துயில் எழுதல் அல்லதை
வாழியும் வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது எம்பேருள் துயிலே."
- பரிபாடல்
கூடல் மாநகர் என்ற மதுரையின் சிறப்புப் பெயரால் வதியும் கோவில்.
பெரியாழ்வார், திருமங்கை மன்னன்மங்களாசாசனம் செய்த கோவில்.
இவை எதுவும் அறிந்திருக்க வேண்டிய அவசியமின்றி....
தமிழும், தெலுங்கும், சௌராஷ்டிரமும், இந்தியும் ஒலிக்க குடும்பத்துடன் கூடி இருந்து வழிபடும் பல வெகு ஜனங்கள் தங்கள் வாழ்வின் ஆதார நம்பிக்கையாகக் கொண்ட இறைவன் உறையும் திருத்தலம்.
ஆங்கிலப் புத்தாண்டில் அத்துணை கூட்டம். கிராமத்து மனிதர்களும், நகரத்து எளியோரும், சுற்றுலா பயணிகளும், குடும்பத்தோடு பிறந்த வீட்டுக்கு வந்த திருமணமான பெண்போல
ஆசுவாசமாக அமர்ந்து அளவளாவும் காட்சிகள்.
அந்தணர் குழாம் திராவிட வேதம் ஓதுதல் ஒரு புறம்.
அனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவேறட்டும். அவர்தம் பல்லாயிரம் ஆண்டு மாறா நம்பிக்கை இந்த தேசத்தை வளப்படுத்தட்டும்.
கூடலழகர் இருக்க குறையொன்றுமில்லை!