வெள்ளி, 29 அக்டோபர், 2021

சங்கராபரணம்.

சங்கராபரணம் என்றால் எஞ்சோட்டு ஆட்களுக்கு மெகா ஹிட் அடித்த தெலுங்கு சினிமா தான் தெரியும். அது ஒரு மேளகர்த்தா ராகத்தின் பெயர் என்று  நீங்கள் சொன்னால்
 'எனக்குத் தெரியாது, நான் வெளியூரூங்க" என்று சொல்வோம்.

அதற்கு முன்பு வரை தெலுங்குப் படம் என்றால் இடுப்பைக் காட்டியபடி ஜெயமாலினி டான்ஸ் ஆடும், குட்டிப் பேய் காமடி பண்ணும் விட்டலாச்சாரியா படம் தான் என்று  எங்க ஊரில் ஐதீகம். டப்பிங் என்றாலே தெலுங்கு டப்பிங் என்று தமிழ் கூறு நல்லுலகம் நம்பிய‌காலமது. (கோனார் என்றால் நோட்ஸ் என்று நம்பியது போல)

இன்றும் நன்கு நினைவு இருக்கிறது விகடன் விமரிசனத்தில் 'இப்படத்திற்கு காமிரா நம்மூர் பாலுமகேந்திரா' என்று சிலாகித்திருந்தார்கள்.

சோமயாஜுலுவுக்கு திருச்சி கலையரங்கத்தில் கட் அவுட் இருந்ததைப் பார்த்த ஞாபகம்.

ஜனம் ஓஹோ என்று‌ புகழ்கிறதே என்று பார்த்தால் எனக்கு அந்த வயதில் ஸ்ரீப்ரியா நடித்து வந்த தெலுங்கு டப்பிங் படமான தாசரி நாராயணராவ் இயக்கிய நட்சத்திரம் மிகப் பிடித்தது என்று சொல்ல நான் வெக்கப்படல, வேதனைப்படல, வருத்தப் படறேண்டா கண்ணா..!
வருத்தப் படறேன்!

ஆனால் சிறுவயதில் கர்நாடக சங்கீதம் கற்காமல் அதைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் மாமாக்கள் எல்லாம் புரோசேவாரெவருரா...என்று ஆலாபனை செய்து கொண்டு கெத்து காட்டிக் கொண்டிருந்தார்கள்.

எனக்கோ ப்ரோ..சே..வா..ரெவருரா..சச்சச்சச்சா
நினுவினா..சச்சச்சச்சா..
ரகுவரா..சச்சச்சச்சா..என்று‌ பாடுவதே பிடித்தமாய்‌ இருந்தது.

"எப்படியோ பாடு சுண்டல் வேணும்னா‌ பாடணும்' என்ற நவராத்திரி கொலு 
இக்கட்டுக்கு இந்த 'சச்சச்சச்சா' தான் கை கொடுத்தது..ஸாரி சுண்டல் கொடுத்தது. 

இது பக்திப் பாடல் என்றால்
பக்கத்து வீட்டு சேட்டு சந்தேகமாக ..ஸச்? என்றார்..
நான் ஜுட் விட்டேன்!

இந்தப் பட தெலுங்கு கீர்த்தனைப் பாடல் எவ்வளவு தரை லோக்கலாக ஃபேமஸ் என்றால்.....
ஒரு‌முறை என் அண்ணன் என்னிடம்,
" டேய் மோகா..முதலியார் வீட்டு  குணாவிடம் ஒரு‌பாட்டு மட்டும் பாடாதே..உன்னை தர்ம அடி போட்ருவான்!"

என்ன‌பாட்டு?

'தொர குணா'...இதுவன்டி‌சேவா...!

இன்று வரை குணாவைப்‌ பார்க்கையில் சங்கராபரணத்தின் காலம் கடந்த தன்மையை உணர்கிறேன்.

உள்ளபடியே தென்னிந்திய‌சினிமாக்களை இந்து பாரம்பரிய உயர்வை விழுமியஙக்ளை நோக்கித் திருப்பியதில் சங்கராபரணத்திற்கும்
கே.விஸ்வநாத்திற்கும் பெரும் பங்கு உண்டு.

தமிழ் திரையலகில், ஒரு கிராமத்துக்கு ஒரு வாத்யார், டாக்டர், என டவுன்காரர் வருவார் என்ற‌ ஃபார்முலாவை மாற்றி ஹீரோ ஒரு‌ சங்கீத கலைஞர்ங்க என்று கதை சொல்லிகளை கட்சி மாற்றிய பெருமை சங்கரா‌பரணத்திற்கு உரியது.

இந்தப் படத்தில் எஸ்.பி.பி செய்திருப்பது அதகளம். ஷெங்கரா....நாத சரீராபரா...என்று அவருக்கு ஒரு மாஸ்டர்‌பீஸ் பாடலும்,
ஓம்கார‌நாதானு சந்தான...என்றும்.
ஸாமஜவரகமனா..என்று எஸ்.ஜானகி      அசால்ட்டாகப் பாடிய பாடலை சமீபத்தில் எஸ்.பி.ஷைலஜா ஒரு‌மேடையில் பாடுகையில் மூச்சு கண்ட்ரோல் பண்ண அதீத முயற்சி எடுப்பது கண்டு ஜானகி அம்மாவை பிரமித்தேன். இந்தப்படத்தில் எஸ்.பி.பி க்கும் வாணி அம்மாவிற்கும் தேசீய விருது👍

தமிழ் நாட்டில் புகழேந்தி என்ற‌பெயரில் யாரைத் தெரியும் என்றால் நள‌வெண்பா எழுதியவர் என்று சிலரும், எதாவது இளம் சினிமா டைரக்டரா என்றுசிலரும் கேடகலாம்.
ஆனால் இன்றும் ஆந்திராவில் சினிமா‌ ரசிகர்களுக்கு அறிமுகமானபுகழேந்தி என்னும் பெயருக்கு உரியவர் கே.வி
மகா தேவனின் உதவியாளர் டி.கே.புகழேந்தி  தான்.
தன்னை சங்கராபரணம்‌ போன்ற‌ கர்நாடக சங்கீத சினிமாவில் பாடல்களைப் பாட இழுத்து வந்தவர் டி.கே.புகழேந்தி என்று பலமுறை எஸ்.பி.பி கூறியுள்ளார்.

கே.விஸ்வநாத் - கே.வி.எம்
கே.விஸ்வநாத் - இளையராஜா 
எது பெஸ்ட் என்ற‌கேள்விக்கு பின்னாளில் அரசு‌ பதில் முதல் ஜோடிதான் என்று தீர்ப்பு வழங்கியது.

மாமன்‌ வூடு மச்சி‌வூடு பரிசம் போட்டது குச்சி வூடு ...என்ற‌ இளையராஜா இசைத்த அன்றைய கானா பாடலில் "சங்கராபரணம்‌ மார்ரீ ரீஜன்ட்டா..அடிங்கடா.." என்று குப்பத்து கமல் வசனம்‌ பேசுவார்.

அந்த அளவு அடித்தட்டு வரை தமிழகத்திலும் சங்கராபரணம் ரீச் ஆகியிருந்தது.

சங்கராபரணம் பாட்டுப்புத்தகம் வாங்கி தெலுங்கு வரிகளை மனப்பாடம்‌ செய்தேன். ( ஷோலே பாட்டு புத்தகம் வாங்கி இந்தியைக் கொலை பண்ணான்‌ இப்ப தெலுங்குக்கு போறாத வேளை - என் அம்மாவின் இந்தக் குரல் இன்னும் காதுகளில்)

ஒரு கலைப்படைப்பை பாமர‌ மக்கள் வரை கொண்டு சென்ற நுட்பம் கே.விஸ்வநாத் அவர்களுக்கே உரியது. மேற்குலக கதைக்களத்தை அடியொற்றிப் பயணித்த தென்னிந்திய‌ சினிமாவை இந்திய வேர்களில் சிலகாலமேனும் நிற்கச் செய்த பெருமை சங்கராபரணம் திரைப்படத்திற்கு நிச்சயம் உண்டு.

https://youtu.be/RzpY7yMWwyI

வெள்ளி, 15 அக்டோபர், 2021

கவிதை: பூ..

பூசைக்குப் பூப்பறிக்கப் போனேன்
சூரியனுடனும், காற்றுடனும் சுவாரசியமாய்க் கதைத்துக் கொண்டிருந்தது.

என்னைப் பாரத்ததும் முகம்‌ சுளித்தது,
 ' என்னோடு வா! உன்னை இறைவன் திருவடியில் சேர்க்கிறேன், என்றேன்.

' அவ்வளவு பெரிய ஆளா‌ நீ ?' என்றது.

யோசித்துக் கொண்டே திரும்பி விட்டேன்.

"உங்ககிட்ட ஒரு‌வேலை சொன்னா..இப்பிடித்தான்...."

ஒரு கவிஞன், கணவனான தருணம்!🙄

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

ஜெயங்கொண்டார் கண்ணதாசன்‌ பாலு

ஆரம்ப 70களின் பாலு குரல் என்னை எனது பால்யத்துக்கு டைம்‌மெஷினில் அழைத்துச்‌ செல்லும். அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றான " ராதா காதல் வராதா..." பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

முதல் கோரஸ்...
"கோகுல பாலா...கோமகள்‌ ராதா... ஆயர்கள்‌ பாலா..ஆனந்த ராதா.... " முடிந்ததும்,

 ஹே..ராதா.....ஆ..ஆ...ஆஆ....என்று ஒரு ஹிந்துஸ்தானி ஸ்டைலில் உச்ச ஸ்தாயியில் எடுப்பார். அதைக்கேட்கும் போது ஆறேழு வயது சிறுவனாக சின்னக்கடைத் தெருவில் 
விளையாடிக் கொண்டிருந்த காலத்திற்கு டைம் டிராவல் போய்விடுவேன்❤️

"செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாளை தாலாட்டும்
புல்லாங்குழல்......" 

இந்த வரி‌முடிவில் அந்த 'ல்...' என்ற எழுத்தில் ஒரு லாங் சிக்ஸர் அடிப்பார்.

செந்தூர நதி
ஓடும் செவ்வாயின்
இதழோரம் கண்ணா
உன் காதல் கடல்....அப்படியே நெகிழ்த்தி மயக்கி வருடுவார்...

இடையணி இருக்க 
உடை மட்டும் நழுவும்...
இடையணி இருக்க 
உடை மட்டும் நழுவும்...

சுகம் என்ன
சொல்லடி ராதா ராதா
சுகம் என்ன சொல்லடி
ராதா....என்று சற்றே தயங்கிப்‌ பின்‌ கல கலவெனச்‌ சிரிக்கும் சிறுமி‌ போல....அணையுடைத்து வரிகள்‌ வரும் அழகே தனி...

இவை எல்லாவற்றையும் சிருஷ்டித்த எம்எஸ்வி இருக்குற எடம் தெரியாமல்   ஒவ்வொரு சங்கதியிலும் கண் சிமிட்டுவார்.❤️🙏🙏

மறுபடி அந்த ....
'செம்மாந்த மலர்சூடும் பொன்னார்ந்த குழலாளை..'என்னும்‌ வரிகளைப் பாடிப் பாருங்கள்..!

சொற்சுவை பொருட்சுவை என்று திருவிளையாடலில் சிவாஜி அடுக்குவாரே....அந்த இரண்டும்‌ போட்டியிட்டு புரண்டோடும்‌ வரிகள்!

இந்த பல் உடைக்கும் 'நாமுறுக்கிகளை'( டங் ட்விஸ்டர்ஸ்😁) அனாயாசமாக பாடுவது பாலுவுக்கு ஒரு வீரவிளையாட்டு.

இப்பாடலின்‌ அடுத்த வரிகளான..

"இடையணி இருக்க உடை‌மட்டும்‌ நழுவும்..." என்ற‌வரிகள் எங்கோ பொறி தட்டியது.

அட! ஆமாமுல்ல?❤️ என்று மனம் பொங்கித் ததும்பியது.

❤️கலிங்கத்துப்பரணி:-❤️

காஞ்சி இருக்கக் கலிங்கங் குலைந்த
        கலவி மடவீர் கழற்சென்னி
காஞ்சி இருக்கக் கலிங்கங் குலைந்த
   களப்போர் பாடத் திறமினோ"

இது கலிங்கத்துப் பரணியில்  #செயங்கொண்டார் கடைத்திறப்பு என்ற பகுதியில் அமைத்த பாடலின் வரிகள்.

குலோத்துங்க‌ சோழன் காஞ்சியில் இருக்க ( அவனது தளபதி கருணாகரப் பல்லவனால்) கலிங்கம் குலைந்தது.....என்று ஒரு‌ பொருளிலும்,

 பெண்கள் இடையில் அணியும் காஞ்சி என்னும் அணிகலன் இருக்க கலிங்கம்‌ என்ற ஆடை குலைந்த கதையை என்று இன்னொரு பொருளில் குறும்பாகக் கூறுகிறார்.

இப்படியான ரத்தினங்களைப்‌ படித்தவர்கள் இதை எப்படி வெளிப்படுத்தாமல் எப்படி ஆவலை அடக்க முடியும். 

சினிமாவுக்கேற்ப...
" இடையணி‌இருக்க‌ உடை‌மட்டும்‌ நெகிழும் சுகம் என்ன‌ சொல்லடி‌ ராதா..." என்று தெளித்து விட்டார் கவியரசர்.

பரணிக்கோர் செயங்கொண்டார் எனில் திரைப்பாட்டுக்கோர் கவியரசர்.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

கன்றும் உண்ணாது கலத்திலும் படாது..

எனக்குப் பிடித்தமான அகத்திக்கீரை வாங்கிவந்தேன்.

'இன்று அமாவாசை எனவே பசுவிற்கு தந்துவிடுங்கள்!' என மனைவியார் உத்திரவு.
( சோணமுத்தா போச்சா..!)

சரி சாசனத்தை செயல் படுத்துவோம் என்று அகத்திக் கீரையை கையில் எடுத்துக் கொண்டு தருமமிகு கோவையில் 'ஆகாத்தோம்பி ஆப்பயன் அளிக்கும்' கோவளர்ப்போர் வீடு சென்று தந்தால், 'இதெல்லாம் தர்ரதில்லீங்..எஸ்கேஎம் தீவனம் தானுங்..' என அன்புடன் மறுத்து விட்டனர்.

இப்ப இந்த அகத்திக்கீரை என்னிடம்...
வெள்ளிவீதியார் குறுந்தொகையில் சொல்வது போல," கன்றுமுண்ணாது, கலத்திலும் படாது..."
இப்ப இந்த அகத்திக் கீரைய என்ன செய்யலாம் பிரண்ட்ச்?!

இது வரை நான்...
இனி பாடலும், உரைகளும்.

27.பாலை – தலைவி கூற்று

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

[வெள்ளிவீதியார்]

 

யாருக்கும் பயனில்லை

கன்றும் உண்ணாமல் கறக்வும் கறக்காமல்
நிலத்தில் வழியும் பசுவின் பால் போல
எனக்கும் இல்லாமல்
என் தலைவனுக்கும் உதவாமல்
என் அழகு வீணாகிறது.

 

நன்றி : எழுத்தாளர் சுஜாதா (Book : 401 காதல் கவிதைகள் -குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்,உயிர்மை பதிப்பகம்)

 

 

எனது சுதந்திர மொழி பெயர்ப்பின் வழியே,

 

கன்றும் உண்ணாமல், கலத்திலும் சேராமல் ,

நற்பசுவின் தீம்பாலை  [ கன்று ஈன்ற உடனே, பசு உகுக்கும் முதல் பாலை என் ஊரில் தீம்பால், அல்லது சீம்பால் என்கின்றனர்]  நிலம் உண்பது போல,

எனக்கும் ஆகாமல், என் ஐ க்கும் உதவாமல்,

பசலை உண்டு அழிக்கிறது,

திதலை அல்குல் கொண்ட என் மேனி எழிலை.
கடலூர் சீனு.

செவ்வாய், 27 ஜூலை, 2021

வேதாந்த வாகயேஷு....

பாலு மகனிடம் கேட்டான், படிப்பு மேல மரியாதை வேணும். கிளாஸ்க்கு சட்டயை மட்டும்‌ மாத்திகிட்டு குளிக்காம போய் உக்காருவியா..?
ஏன்‌ அது ஆன்லைன் கிளாஸ்தானே..?

இருக்கட்டுமே. இதுவே உனக்கு பழக்கமா தொத்திக்கும். அப்புறம் விட‌முடியாது.இது என்ன அடம்?

கொரானா முடிஞ்சப்புறம் பழகிடுச்சி அதுனால ஆன்லைன்ல தான்‌ படிப்பேன் அப்பிடின்னு அடம் புடிப்பேனா..? அதுமாதிரி குளிக்காமல் கிளாஸ்க்கு போற பழக்கமும் விட்டுடுவேன்.

ஐ நோ வாட் ஐம்‌டூயிங்.

( ஷட் அப் அன்டு‌ மைண்ட் யுவர்‌ பிஸினஸ்!) இது அவன்‌ மைண்டு வாய்ஸ்.

கர்மயோகம் பேசுகிறது...(சுலோ.12,13,19)

"தன் பொருட்டு செயல் செய்யும்‌ மனிதர் அந்தச் செயலின் வினைப்பயனால் கட்டுண்டவராகிறார். பொது நலனுக்காக செயல் புரிபவர் அதன் வினைப்பயனால் பாதிக்கப் படுவதில்லை."

இதனால் தான் உணவு சமைத்தலைக்கூட இறைவனுக்கான நைவேத்தியமாக வைத்தும், அதிதிகளுக்கான, காக்கை, குருவிகளுக்காக வைத்தும் பகிர்ந்து உண்கிறார்‌ நம்‌மக்கள்.
அதில் கூட வினைப் பயன்‌ பந்தப்‌படுத்தி விட‌லாகாது என்று.

இதை என்‌மனதில் வாலிப காலத்திலேயே திண்டுக்கல்லில் கல்வெட்டாகச் செதுக்கிய‌ சிற்பி... தவத்திரு.ஸ்வாமி தத்வானந்த சரஸ்வதி அவர்கள்.

அதெப்படி‌ ஸ்வாமிஜி சுயநலனுக்காக செய்யும் கர்மபலன் நம்மை பீடிக்கும்...பொது நலனுக்காக செய்யப்படும்‌கர்ம‌பலன்‌நம்மை பீடிக்காது..? இதுக்கு என்ன ப்ரூஃப்?

மை டியர்..! பல்பீர் சிங் என்பவர் இந்திய‌ ராணுவத்துல 18 வயசுல வேலைக்குச் சேர்ந்தார்..டிரைனிங் முடிந்து காஷ்மீர் எல்லைல போஸ்டிங்..தினம் ரோந்து போனார் எதிரியை கண்ணில் பட்டபோது சுட்டார். டூட்டி‌ முடிந்து டென்டுக்கு வந்தால் குளிர்‌போக அசதிக்காக கொஞ்சம்‌ மது அருந்தினார். 
இப்படியாக பல வருடங்கள் சிறப்பாகப் பணி புரிந்தார். 
அவர் ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்தவுடன்..." எனக்கு ராணுவத்துல இருக்கும்‌போது பழகிப்போச்சுங்க" என்று தினம் துப்பாக்கியை எடுத்து கிட்டு பழனி‌ரோடுல போய் பத்து பேரைச்‌ சுடுவதில்லை. 
ஆனால் ராணுவத்துல இருக்கும் போது பழகிப்‌போச்சுங்க என்று தினம் மாலை மது அருந்துகிறார்.

ஏனெனில் துப்பாக்கியால் சுடுவது பொது நலனுக்காக செய்தது..மதுப்பழக்கம் சுய வசதிக்கா பழகியது.

இது போலத்தான்....ஆன்லைன் கிளாஸ்/ ஒர்க் ப்ரம் ஹோம் எல்லாம்‌பொது நலனுக்கான செயல். குளிக்காம கிளாஸ்ல உக்காருவது, பல் விளக்காம லாகின்‌ பண்ணுவது எல்லாம் சுயவசதிக்கான‌ செயல். முன்னது கர்ம‌பந்தம் ஏற்படுத்தாது. பின்னது ஒட்டிகிட்டால் விடாது.

ஹரி ஓம்.

திங்கள், 26 ஜூலை, 2021

துணுக்கு சிந்தனை@ மர்பிஸ் லா!

1.பசி என்பது சாப்பிடாததால் 
வயிற்றில் ஏற்படும் இம்சை அல்ல.
அடுத்த வேளை சாப்பிட வழியில்லாததால் மனதில் ஏற்படும் இம்சை!

2.பொதுவாக ஆன்மிகம்  என்பது 
மனம் தொடர்பானது ,
மதம் என்பது பணம் தொடர்பானது!

3.நாம் தேடும்போது கண்ணில் படாமல் மறைந்துகொள்வதில் தேடப்படும் பொருளுக்கு உள்ள திறமை அளப்பரியது!

- எப்டி நம்ம மர்பிஸ் லா?!

ஞாயிறு, 25 ஜூலை, 2021

திட்டு இலக்கியம்

வைதாலும் வைகைத் தமிழ்
கடிந்தாலும் காவிரித்தமிழ்
திட்டினாலும் தாமிரபரணித்தமிழ்.

திமுகவிலிருந்து மனக்கசப்போடு வெளியேறிய‌ கண்ணதாசன் அண்ணாத்துரை‌‌ மேல் தான் கொண்ட கோபத்தை 'படித்தால் மட்டும்‌போதுமா?' படத்தில் ஒரு வாய்ப்பு வந்த போது தீர்த்துக் கொண்டார்..

அண்ணன் காட்டிய வழியம்மா - இது
அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா - என்
கையே என்னை அடித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்
அண்ணன் காட்டிய வழியம்மா

அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்துவிட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகளை முறித்து விட்டான்
அண்ணன் காட்டிய வழியம்மா

அவனை நினைத்தே நானிருந்தேன் - அவன்
தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்
இன்னும் அவனை மறக்கவில்லை - அவன்
இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை  ..........( அண்ணன்)                                                                                          

உடனே 'சிலர்' இந்தப் பாடலை அண்ணாத்துரை அவர்களிடம் காட்டி 
வத்தி வைத்தனராம்

" திட்டினாலும் நல்ல தமிழில் தானடா திட்டியிருக்கிறான்‌ தம்பி" என்று கூறினாராம் அண்ணா.

இதைப்போல தமிழ் இலக்கியங்களில் 
திட்டு இலக்கியம் என்றே வகைப் படுத்தத்தக்க அளவில் பல பாடல்கள்‌ உண்டு.

வைணவ இலக்கியங்களில் வல்லுநர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்! 

அஷ்ட பிரபந்தங்களான திருவரங்கத்தந்தாதி, திருவரங்கத்துமாலை, திவரங்கக்கலம்பகம், திருவரங்கநாதர் ஊசல் திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி நூற்றியெட்டுத் திருப்பதி அந்தாதி எனும் பாசுரங்களைத் தமிழுக்கு அளித்தவர். 

திருவரங்கநாதன் மேல் தீராத பக்தி கொண்டவர். பாடியே திட்டினாலும் தித்திக்கும் செந்தமிழ்ப்பாடல்கள் இவை:

திரு அரங்கநாதரின் ஆசியால் அவதரித்த மறவர் குலத்தில் பெண் கேட்டு ஓர் அரசன் “திருமுகம்’ (தூதுஓலை) அனுப்புகிறான். 

வந்த தூதுவனிடம் “என்ன துணிச்சல் இருந்தால், எம் குல மங்கையைப் பெண் கேட்டுத் திருமுகம் (ஓலை) அனுப்புவான்?’ என வெகுண்டு....

"கொற்றவன் தன் திருமுகத்தைக் கொணர்ந்த தூதா!
குறை உடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்!
(அற்றவர்சேர் திருஅரங்கப் பெருமாள் தோழன்அவதரித்த திருக்குலம் என்றறியாய் போலும்!)
மற்றதுதான் திருமுகமே ஆனால் அந்தவாய், செவி, கண், மூக்கு எங்கே? மன்னர் மன்னன் பெற்ற இளவரசு ஆனால் ஆலின் கொம்பைப் பிறந்த குலத்தினுக்கு ஏற்பப் பேசுவாயே!

பொருள்:
தூதுவனே! கொற்றவனின் “திருமுகம்’ இங்கே கொண்டு வந்துவிட்டாயே! மீதியுள்ளது குறையுடல்தானே?தலையில்லாத முண்டம்தானே அங்கே இருக்கும்? அதற்கா மறக்குலக் கொம்பைப் பெண் கேட்டு வந்துள்ளாய்? 

 ஆசையற்றவர் சென்று சேரும் திருவரங்கப் பெருமாளின் தோழன் அவதரித்த குலம் இது. 
 இதை நீ அறியவில்லை போலும்.

சரி! சரி வந்துட்டே! இது இளவரசன் திருமுகம் என்றால் முகத்திலிருக்க வேண்டிய உறுப்புகளான வாயைச் செவிகளைக் கண்களை, மூக்கு எதையும் காணோமே! ஆனாலும் மன்னாதி மன்னன் பெற்ற இளவரசுதான்! ஆனால் அரசுக்கேற்றபடி ஆலமரத்தின் கொம்பைத் குலக்கொழுந்தைப் பெண் கேட்கப்போ! என அலட்சியமாகப் பதில் கூறுவதாகப் பாடல்! 

அரசும் ஆலும் கோவில்களில் இருக்குமல்லவா? அது போல என்றார். 

அரங்கபக்தனுக்கு அரசன் தூசி போன்றவன்.
விட்டாரா தூதர்? துறவிக்கு வேந்தன் துரும்பு! என்பது பழமொழியன்றோ? திருமணத் தூதராக வருவோர் சாமர்த்தியசாலிகளாகவே இருப்பதுண்டு. காரியம் ஆகணுமே! அப்படியே நின்றார்! வந்த வேளை சரியில்லையோ? நொந்த நெஞ்சோடு திரும்பலாமோ? கெஞ்சுவதுபோலத் தன் பார்வையைச் செலுத்தினார். 

“என்ன நிற்கிறாய்! வா! வா! வந்து பார்த்துச் செல்! பார்த்ததை உங்கள் அரசனிடம் சேர்த்துச் சொல்! எங்கள் குலக்கொழுந்தைப் பெண் கேட்டு வந்தவங்க நிலைமையினை மாளிகை முழுவதிலும் வந்து பார்த்துச் செல்!’ என அழைத்துக் கூறிய காட்சி:

பேசவந்த தூத! செல்லரித்த ஓலை செல்லுமோ?
பெருவரங்கள் அருள்அரங்கர் பிள்ளைகேள்வர் தாளியே
பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம்வைத்து முன்னமே
பட்டமன்னர் பட்டதெங்கள் பதிபுகுந்து பாரடா!
வாசலுக்கு இடும்படல் கவித்து வந்த கவிகையே!
மகுடகோடி தினை அளக்க வைத்த காலும்நாழியும்
வீசுசாமரம் குடில் தொடுத்த கற்றை சுற்றிலும்
வேலிஇட்டது அவர்கள்இட்ட வில்லும் வாளும் வேலுமே!

பொருள்: திருமணம் பேச வந்துள்ள தூதுவனே! ஓலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதுவது அஞ்சல்! அது செல்லரித்து போல் புள்ளிப்புள்ளியாகத் தோன்றும்! கேலி பேசுவது போல இந்த செல்லரித்த ஓலையைக் கொண்டு வந்திருக்கிறாயே? இது செல்லுமோ? செல்லாத ஓலையாச்சுதேயடா? பெரிய பெரிய வரங்களை எல்லாம் வழங்கி அருள் தரும் திரு அரங்கநாதர் மேல் பக்தி மிகுந்த பாசம் கொண்ட குலப் பெண்ணை விரும்பி முன்பு வந்து பெண்கேட்ட பட்டத்து இளவரசர்கள், பட்டபாட்டை எங்கள் மாளிகையில் புகுந்து வந்த பாரடா! அங்கே நுழைவாசலுக்குப் படல்வேலியாக இட்டிருப்பது வந்தவர்களின் மகுடங்களே! நாட்டுப்புறங்களில் வேலிகளில் பானைகளைக் கவிழ்த்து வைப்பதுண்டு! அது போலவே நாங்கள் மகுடங்களைக் கவிழ்த்து வைத்துள்ளோம் அவர்கள் சூடியிருந்த கிரீடங்களை, விளைந்து வந்துள்ள தினைகளை அளக்க உதவும் மரக்கால்களாகவும், நாழியாகவும் பயன்படுத்துகிறோம். அவர்களின் கிரீடங்களில் சூடி இருந்த கற்றை முடிகளைக் கைப்பற்றி எங்களின் சாமரமாக்கியுள்ளோம், விசிறிபோல் வீசுவதற்கு! மாளிகையைச் சுற்றிலும் வேலிபோல ஊன்றி வைத்திருப்பது அவர்கள் கொண்டு வந்து வில்லும், வாளும் வேலும்தான்! ஆழ்ந்த பக்தியால் அடைந்த வீரம் இது!

திட்டினாலும் தித்திக்கின்றதல்லவா? அதுதான் தமிழ் இலக்கியங்களின் பெருமை!

பி.கு: கடிதத்துக்கு வடமொழியில் ஸ்ரீமுகம் என்பர். அது தற்பவமாக திருமுகம்‌ என்று தமிழில் வரும்.

இந்தப்பாடல் எனக்கு எட்டாம் வகுப்பு தமிழில் செய்யுள்‌பகுதியில் வரும். ஆனால் மேலே அடைப்பபுக்குள் இருக்கும் வரிகள் ஏனோ பாட‌ புத்தகத்தில்  வெட்டியிருந்தார்கள்.

சனி, 24 ஜூலை, 2021

பின்தொடரும் குறளின்‌ நிழல்

பின்தொடரும் குறளின்‌ நிழல்.

ஒரு இலக்கியக் கட்டுரை எழுதலாமே..!என்று நண்பர் இரமணி‌ முருகேஷ் தூண்டினார்.
நான்‌ கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை ரகம். ஆதலால் சற்றே மிரண்டேன்.
சரி! ஆபத் பாந்தவன் ஐயன்‌ திருவள்ளுவர் துணை என்று ஆரம்பித்துவிட்டேன்.
சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக‌ என்று‌ பொருளுரைக்கிறார்‌ திரு.சாலமன் பாப்பையா.
என்னை வழி நடத்தும்  ஆச்சர்யகரமான சில திருக்குறள்களை இங்கு பகிர்கிறேன்.

எங்காவது பேருந்தில், வணிக இதழ்களில், கதைகளில், கட்டுரைகளின் ஊடே படித்த குறள்கள் தான் சிந்தையில் சிலாசாஸனமாக அமர்ந்து விடுகிறது. அதற்கு அந்தந்த தருணங்களின் வாழ்வியல் நெருக்கடிகளே காரணம்.

1.அகலாது அணுகாது தீக்காய்வார்‌ போல்க இகல் வேந்தர் சேர்ந்தொழுகுவார்.
ஆச்சர்ய‌கரமான திருக்குறள் என்று சுஜாதா இக்குறளை ஒரு‌முறை சிலாகித்துள்ளார். மன்னரைச் சேர்ந்து ஒழுகுபவருக்குக் கூறப்பட்டதாயினும் நம்முடைய பணக்கார உறவினர், அலுவலக உயரதிகாரி, உள்ளூர் அரசியல்வாதி எ‌ன்று‌ பலரிடம் பழகுவதற்கும் இந்தக் குறள் தான் கை விளக்கு.
காமத்துப்பாலில் கூட இதே ஜாடையில் இன்னொரு‌ குறளை எழுதியுள்ளார்.

நீங்கின் தெறூஉம்! குறுகுங்கால் தண்ணெனும்!
தீ யாண்டுப் பெற்றாள் இவள்?
(புணர்ச்சி மகிழ்தல்: 1104)
“இவளை நீங்கினால் சுடும் நெருங்கினால் தண்ணென்று குளிரும், இத்தகைய தீயை எங்கே பெற்றாள் இவள்?” என்று வழக்கமான தீக்கு எதிர்மாறாக இருக்கும் காதல்தீயைப் பற்றி கூறுகிறார்.
இங்கும் அகலாது அணுகாது தீக்காய வேண்டுமல்லவா?!
2. நாஞ்சில் நாடன் அவர்களின் ஒரு படைப்பில் திடுமென ஒரு குறள் முகிழ்த்தது. அந்த காலகட்டத்தில் நான் வியாபார‌ சிக்கல்களில் திணறி சமூகத்தின் கண்களில் தோல்வியுற்ற மனிதனாக அறியப்பட்டுக் குமைந்திருந்தேன்.
இருவேறு உலகத்தியற்கை திருவேறு தெள்ளியராதல் வேறு.
இந்த அபார வரிகளைப் படித்ததும் புத்தகத்தை மூடி வைத்து கண்மூடிய நான் மனதில் கற்றளியாய் உறுதியுற்றேன்.
3.இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக்கடை 
வாழ்வின் சுக,துக்கங்களில் தயக்க,மயக்கங்களில், குழப்பம், விழுப்பங்களில் காற்றுப் போய்விடாமல் ஆணை காத்து உடன் நிற்கும் யாதுமாகி நின்ற மனைவியின்  மாண்பை விளக்கும் இக்குறளே தான், "என்‌ வேரென‌ நீயிருந்தாய் அதில் நான்‌ வீழ்ந்து விடாதிருந்தேன்..." என்று‌ கண்ணதாசன்‌ வேறு‌‌ வரியில் பாடியது .
3.வாழ்வின் உற்சாக இளமைகளில் உலகை விலைபேசி, உயர் மலைச் சிகரத்தை அடைய வேண்டி, உழைப்பையும் ஆசையையும் காலத்தையும் ஹவிஸாக இட்டு அணுகும் போது அடி சறுக்கி அடி வயிற்றிலிருந்து, "ஏன்‌ எனக்கு மட்டும்?" என்று அரற்றுவோமே.. அப்போது தலை வருடி ஆறுதல் சொல்வார்..
 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி நூல் தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
4. மீண்டெழுந்து தவறுகளில் பாடம் கற்று, கவனம் கூடி, பலவீனம்‌ அறிந்து 
'வல்லான் அறிந்துளன்' என்றுணர்ந்து வழியறிந்து முயலும் போது செவியருகில் வந்து அறிவுறுத்துவார்..
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை
இன்றைய நிர்வாகவியலின் தாரகமந்திரமே..இது தான்.
5. எதிரதாக் காக்கும் அறிவினோர்க்கில்லை அதிர வருவதோர் நோய். தொழிற்சாலைகளில் , preventive maintenance  என்ற உத்தியை கடந்த 200 ஆண்டுகளாகத்தான் சொல்கிறோம்‌.
Prevention is better than cure என்ற வரிகளும் தராத அதிர்ச்சி‌ மதிப்பை 2000 வருட பழைய‌குரல் ஒன்று‌ ஒலிக்கையில்..சும்மா..அதிருதுல்ல!

6.நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிருந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகிவிடும்.
தன் எல்லை அறிதல் ( understanding limitation) என்பது நடுவயதில் நமக்குத் தேவையான ஒரு தெளிவு. நம் திறன், சூழல், எதிர்காலம் என்று எல்லாவற்றின் எல்லையும் இந்நேரம் அனுபவத்தில் பிடிபட்டிருக்கும். இந்நிலையில் நாம்‌ அடுத்த கட்ட‌ முயற்சியை ஆய்ந்து துவங்க வேண்டும் என்பதையே நுனிக்கொம்பில் ஏறியவர் அங்கிருந்து மேலும் ஏற.முயற்சித்தால் உயிர்க்கு இறுதி ஆகிவிடும்‌ என்று‌ வள்ளுவப் பெருந்தகை எச்சரிக்கிறார்.

7.எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு.
வாழ்வின் இன்பம், லட்சியம் பணம் எல்லாம் அவரவர் தகுதி, வினைப்பயன் படி அடைந்து தெளிந்த காலை உடன் வாழும் சுற்றத்தார்,பிறர்‌ எல்லாம் எவ்வது உறைகிறார்களோ அவ்வது நாமும் உறைதல் ( மிகினும்‌ குறையினும்‌ நோய்‌ செய்யும் ) வாழ்க்கையை உற்றம் உறவோடு உரசலின்றி அமைதியாக வாழ வழிதரும்.
8.யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இல
உதடுகள் ஒட்டாத திருக்குறள் என்பதனால் பள்ளி காலத்தில் இக்குறள் மீது ஆர்வமானேன். ஆனால் என்ன அற்புதம்‌ பாருங்கள்! தகாத பொருள் மீது பற்று என்பது உதட்டளவில் கூட‌ இருக்கக் கூடாது என்று நிறைமொழியாக எழுதி தமிழ் மறை ஆகி நின்ற குறள் இது.
9.கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
சினிமாக் கொட்டகையில் கூட்டம் ஒவ்வொருவராக மெல்லச் சேரும் ஆனால் படம்‌ முடிந்ததும் மொத்த கூட்டமும் உடனடியாக கலைந்து போகும். அதுபோல் தான்‌ செல்வமும் என்கிறார் பாருங்கள். அதனால் தான்‌  செல்வம், "நாம் செல்வம்"  ( தன்மை பன்மை வினை‌‌ முற்று) என்று‌ போய் விடுகிறதோ..?? 

10.சினத்தைப் பொருள் எனக்கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கை பிழையாதற்று
இந்த அற்புதமான‌ உவமை பயின்ற குறளை பயின்றிருந்தால் ( படித்திருந்தால் அல்ல) கோபம்‌‌ வரும் போது காப்பாகச் செயல் பட்டு பாரிய‌ இழப்புகளைத் தவிர்க்கலாம்.
ஜெய‌மோகன் விளக்க உரை எழுதியுள்ளார்‌ இவ்வாறு.
‘சினத்தை தன் வலிமை என்று எண்ணுபவன் நிலத்தில் கையால் அறைந்துகொள்பவன் போன்றவன்’ பாறையின் முட்டிக்கொள்பவன் என்று நம் நாட்டார் வாய்மொழி. எளிமையால் ஒரு பழமொழியின் கவித்துவத்தை அடையும் இக்குறளுக்கு மேலதிக நுண்பொருள் ஒன்றும் உண்டு. நிலம் என்பது பொறுமையின் அடையாளமாகச் சொல்லப்படுவது. அகழ்வாரையும் தாங்குவது, தன்னை அறைபவனையும் கூடத்தான்! சினத்தின் பொறுமையின்மைக்கு எதிராக பொறுமையின் அலகிலா வல்லமையை நிறுத்துகிறது இக்குறள். 
பதினெண் கவனகர் ஐயா கனக சுப்பு‌ரத்தினம் கூறுவார்‌, 'ஒவ்வொரு‌ குறளிலும் வெளிப்படையான‌ ஒரு‌ பொருளும், இலக்கிய‌த் தளத்தில் ஒரு‌ பொருளும், ஆன்மீகத் தளத்தில் ஒரு‌ பொருளும்‌ ஆக மூன்று‌ விதமாகப் பொருள் கொள்ள இடம் உள்ளது'என்று.

11.பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார் மற் றாதல் அரிது.
நம்பிக்கையின் உச்ச பட்ச பலத்தை அளித்து இழப்பாலோ, ஆசையாலோ, வறுமையாலோ தவறான பாதைக்குச்‌‌ செல்லாமல் தடுத்தாட் கொள்ளும்‌ குறள். "அருளற்றார்‌ அற்றார்", என்று‌ சொல்வதோடு நிறுத்தி விட வில்லை..மற்றாதல் அரிது ( மீண்டு‌ எழுவது இயலாது) என்கிறார்.
நம்‌ தொலைக் காட்சி சோப்பு விளம்பரங்களில், "அழுக்கைப்‌ போக்கும்‌ மீண்டும் வராமல் தடுக்கும்" என்று‌ அழுத்தந் திருத்தமாக‌ சொல்லப்படுவது போல மனதில் பதிய வைக்கும் உத்தி! "அருளற்றார்‌ அற்றார், மற்றாதல் அரிது" 

12.தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
நம் வாழ்க்கைக்கு பின்னர் மட்டுமல்ல  செய்த பணி ஓய்வின்‌ பின்னும் எழுதிய‌ கட்டுரையினைப் படித்து முடித்த பின்னும்!

சனி, 3 ஜூலை, 2021

துன்பம்‌ துய்த்தல்

" இப்போது எனக்கிருக்கும் துன்பங்களை எல்லாம் நீக்கிவிடு; இனி‌ நான் என்வாழ்வை சரியாக அமைத்துக் கொள்கிறேன்‌" என்பதே பலரின்‌ பிரார்த்தனையாக இருக்கிறது என்பார்‌ சுந்தர ராமசாமி.

" இன்பமும் துன்பமும் பூமியின்‌ மிசை‌ யார்க்கும்‌ வருவது கண்டனம்..." என்ற‌ பாரதி தான்.."துன்பக் கேணி" என்ற ஒரு சொல்லை தமிழுக்குத் தந்தவன்.

" துன்பம்‌ நேர்கையில யாழெடுத்து நீ
 இன்பம்‌ சேர்க்க மாட்டாயா....." என்று‌ இறைஞ்சுகிறார்‌ பாரதி தாசன்.

"துன்புளதெனின் அன்றோ சுகமுளது?"
என்று‌ கம்பநாட்டாழ்வார் கேட்கிறார்..

"கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது" என்றார்‌ வள்ளுவப் பெருந்தகை.

அதுபோல மனம் கலங்க வைக்கும்  துன்பம் வாழ்க்கையில் செம்பாகம் அன்று பெரிது...என்று உணர்கிறோம்‌ நாம்.
துன்பங்கள்‌ வாழ்வின் ஒரு செம்பாதி.

நிகழ் காலத்தை யாருமே பொற்காலம் என்று சொல்வதில்லை..
இது வரலாற்றுக் காலத்திற்கும் முந்திய உண்மை.

" நாம சந்தோஷமா இருக்கும்‌போது அது நமக்குத் தெரியறதில்லை.." என்று விருமாண்டியில் ஒரு வசனம் வரும்.

யோசித்தால் நாம் சந்தோஷமாக இருந்த தருணங்களை நினைவில் வைக்கத் தவறி விடுகிறோம்.

அதனால் தான்‌ பலர் வாழ்வில் பெரும் கஷ்டங்கள் வந்த போது முன்பு மகிழ்ச்சியாக வாழ்ந்த வீட்டிற்கோ..ஊருக்கோ..தெருவுக்கோ திரும்பக் குடி‌போகிறார்கள்.

ஆனால் அதன் பயனின்மையை பிறகு உணர்கிறார்கள்.
டைவர்ஸ் செய்த இணையுடன் திரும்ப இணைந்து கொள்வதும் பல இடங்களில் நடக்கிறது.

ஆசையே துன்பத்திறாகு காரணம் என்பதெல்லாம் சரிதான்..
" ஆசை பற்றி அறையலுற்ற..' தால் தான்‌ ஒரு‌ கம்ப ராமாயணம் தமிழுக்கு அணிகலனாகக் கிடைத்தது.

மகிழ்வின்‌போது 'மனம்' அங்கு இருப்பதில்லை..
துயரத்தில் மனம் அவ்விடத்தை விட்டு விலகுவதில்லை.

நரகம்‌ என்றால் என்ன ? என்று‌கேட்டதற்கு ஒரு‌ ஞானி‌ கூறினாராம்....
" துன்பம்‌, முடிந்து விடுவது போல போக்கு காட்டி விட்டுத் தொடர்வது..." என்று.

ஒரு‌ முறை‌ நான் மிகுந்த வியாபார, வழக்கு, பண கஷ்டங்களில் இருந்த போது..தினம் தினம் புதுப்புது பிரச்னைகளாக வரும்.

ஆவை எதுவும் புதியது அல்ல முன்பே நிகழ்ந்த பிரச்னைகள் வெளி‌வரும். இந்த துன்பத்தினை துய்த்து கர்மாவைக் கரைப்போம் என்று‌ மனதுக்கு ஊக்கம்‌ சொல்லித் தாஜா செய்து நாட்களை கடத்தி வந்தேன்.
துன்பங்கள்‌ நேர்வது மலையிலிருந்து பாறை உருண்டு கீழே விழுவது போல. அதனை சரி செய்வது விழுந்த பாறையை மீண்டும் மலைக்கு ஏற்றுவது போல.

இந்த அனுபவங்களில் நான்‌ கற்ற பாடம்.

எல்லா துன்பங்களும் ஒரே நாளில்/ முயற்சியில்  தீராது.
எல்லா துன்பங்களும் முற்றாகத் தீராது.
தொடர்‌ முயற்சி பிரார்த்தனை தேவை.

இந்த கஷ்டங்கள் துயரங்கள் இல்லாத மனிதனே இல்லை என்று உணர்.
ஏனெனில்,

நெஞ்சே.... துன்பத்தின் தாயல்லவா.. ?
( அதை விட்டு எங்கும் தப்பிக்க முடியாது.)
(கவியரசர்.)

வெள்ளி, 2 ஜூலை, 2021

சீன‌யுத்தம்- காமடி

எங்கள் தாத்தா அனுமார் ஸ்லோகம் சொன்னபோது கிணற்றில் சரசர வென்று 
இறங்கிய பேய்களும், 
நள்ளிரவில் போகும் நபர்களிடம் சுண்ணாம்பு கேட்ட 
பனையடி கருப்பும்,
சைக்கிள் பின்னால் ஏறி 
கனத்தை அதிகரித்து 
ரத்தம் கக்கப் பண்ணும் 
வாய்க்கால் முனியும்,
எருக்கம் புதரினின்று வெளிப்பட்டு 
இரத்தம் கேட்கும்
காட்டேரியும்,
மரம் வெட்டி,மேடுறுத்தி 
துண்டம் போட்ட சைட்டை விட்டு ...
பஞ்சம் பிழைக்க எங்கே போச்சோ?

கவிதை

எங்கள் தாத்தா அனுமார் ஸ்லோகம் சொன்னபோது கிணற்றில் சரசர வென்று 
இறங்கிய பேய்களும், 
நள்ளிரவில் போகும் நபர்களிடம் சுண்ணாம்பு கேட்ட 
பனையடி கருப்பும்,
சைக்கிள் பின்னால் ஏறி 
கனத்தை அதிகரித்து 
ரத்தம் கக்கப் பண்ணும் 
வாய்க்கால் முனியும்,
எருக்கம் புதரினின்று வெளிப்பட்டு 
இரத்தம் கேட்கும்
காட்டேரியும்,
மரம் வெட்டி,மேடுறுத்தி 
துண்டம் போட்ட சைட்டை விட்டு ...
பஞ்சம் பிழைக்க எங்கே போச்சோ?

புதன், 30 ஜூன், 2021

ஹிந்தூ

ஹிந்து என்ற‌சொல் சிந்து நதியோரமும்‌ அதைக் கடந்தும்‌ வாழ்ந்த மக்களை குறிக்க பாரசீகர், அரேபியர், கிரேக்கர்‌ பயன்‌படுத்திய‌ சொல்.
அதனை இன்றைய‌ பாக், ஆப்கன்‌ சீன மக்களும் பயன்‌ படுத்துகிறார்கள்.

மிகமிகப் பிற்காலத்திலேயே ஆங்கிலேயர்களால் இங்கு வழங்கிய‌ மதங்களுக்கு ஆகுபெயராகியது.

இந்து என்ற‌சொல் ஆங்கிலேயர் புகுத்தியது என்கிறார்கள். 
இது முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாக துணைக்கண்டத்தில் வாழ்ந்த மக்களை குறிக்கப் பயன்‌பட்டது.

பின்னர் அயல் மதங்கள் வந்ததும் இங்குள்ள நம்பிக்கைககளைக் குறிக்க இந்து என்பதை மதப்பெயராக சூட்டினர்.

 முஸ்லீம் அல்லாதவரைக் குறிக்க முகலாயர் ஆண்ட வரை காபிர்‌ என்ற‌ சொல்லே போதுமானதாக இருந்திருக்கலாம். 

பிறகு ஆங்கிலேயர் நிர்வாக வசதிக்காக‌ வலிமையான‌ இரு குழுக்கள்‌ தமக்குக் கீழ் மோதிக் கொள்வது அவசியமாகக் கருதி இருக்கலாம்.

இந்து மதம் ஒரு தொகை மதம் என்கிறார்ஜெ.மோ. 

இங்கு நடைபெற்றது பிற நம்பிக்கைகளை அழித்தொழிப்பு அல்ல அரவணைப்பு. எனவே வேற்றுமைகள் தகர்த்து நிரவப் படாமல் அங்கீகரிக்கப்பட்டன. குலசாமி, வட்டார வழமைகள் அழிக்கப்படாமல் அகம் படுத்தப்பட்டன. 

Integration/inclusion rather than eradication of identity was the guiding principle.

காலப்போக்கில் அறியாமையாலோ அல்லது உள் நோக்கத்துடனோ இவற்றை வேற்றுமைகள் என்று கூறுகின்றனர்.

சீனாவுக்கு இந்தியர்கள்‌ யார் போனாலும் இந்து என்றே‌ பேச்சு வழக்கில் குறிப்பிடப்படுவர். 

பாகிஸ்தானிலும் பேச்சுவழக்கில் இந்தியர்களை இந்து என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்த மரபில் தான் ஷாருக்,அமீர்‌ எல்லாம்‌ ஹிந்துஸ்தானி என்று முழங்குகின்றனர்.

யூதர்களின் நூல்களிலும், பழைய‌ ஏற்பாட்டிலும்‌‌ ஹீப்ரு‌‌ மொழியில் இந்தியாவை ஹொட்டு என்கின்றனர்.( Hodu).

9ம்‌ நூற்றாண்டு‌ பாக்தாத் வரலாற்று அறிஞரான அல் மஸூதி என்பவர் இந்தியாவை Al-hind என்கிறார்.

16 ம்‌ நூற்றாண்டில் வாழ்ந்த அக்பர் நாமா, அயினி‌அக்பரி எழுதிய அபுல்ஃபசல்‌இந்த நாட்டை ஹிந்துஸ்தான் என்றே குறிப்பிடுகிறார்.

பலவடிவங்களில் இறைவனைக்காணும் பக்குவமே இந்துமதம்‌ என‌ திலகர் கூறியுள்ளார்.

"ஒரு‌நாமம் ஓருருவம்‌ஏதுமிலார்க்கு ஓராயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம்‌ கொட்டேமோ" என்று திருவாசகம் கூறும்.

பின் அரசியல் காரணங்களுக்காக அது மக்கள் கூட்டத்துக்கான ‌காரணியாயிற்று.

("தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது."

இந்த திரிகடுகப்‌பாடல் தாளாளன்‌ என்பவன்‌ கடன்‌படாமல் வாழ்பவன்‌ என்கிறது..ஆனால் நாம் கோடிக்கணக்கில் கடன் பட்டு பள்ளிகல்லூரிகட்டியவர்களைத் தாளாளர்‌ என்கிறோம்.

வேளாளன் என்பவனை ஒரு சாதிப் பெயர்ஆக்கி விட்டோம்..

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:212 ) 

தாள்-முயற்சி; ஆற்றி-செய்து; தந்த-ஈட்டிய; பொருள்-சொத்து; எல்லாம்-அனைத்தும்; தக்கார்க்கு-தகுதியுடையவர்க்கு; வேளாண்மை-உதவி; செய்தற்பொருட்டு-செய்வதற்காக.

இங்கு தாளாளன்‌என்பது சுய‌முயற்சியாளன்‌ என்ற‌பொருளிலும்,  வேளாண்மை‌என்பது பயன் கருதா உதவி என்ற வருகிறது.

இது போலத் தமிழிலேயே காலத்துக்காலம் சொற்கள் பாவிக்கப்படும்‌ நோக்கம்/ பொருள் மாறுகிறது.)

இந்து என்பது ஒரு மதமல்ல..வெள்ளையன் உருவாக்கினான்..என்று பேசுவதற்கு சிந்தனையாளர்கள் உடன்பட மாட்டார்கள்.

1.இஸ்லாமிய வரலாற்றிலும் அதற்கு முன்னரும்‌ ஹிந்த் என்ற‌சொல் உள்ளது.

2.சீனர்களும்‌ இன்றுவரை இந்தியர்களை இந்தூ என்றே குறிக்கிறார்கள்.

3. இந்தியர்கள் எல்லோரும் இந்நாள்/ முன்னாள் இந்து என்ற வாதத்தை நான் வரவேற்கவில்லை. ஆனால் ஜெய்‌ஹிந்து என்பது‌ மதரீதியான‌ கோஷம் என்பது அறியாதார்‌ வாதம்..

4.கஜினி‌ முகமதுவின் அரசிலிருந்த வரலாற்று அறிஞரான அல்பரூனி எழுதிய‌ இந்திய வரலாற்று நூலின்‌ பெயர் "கிதாப் உல் ஹிந்த்".

வட மதுரையில் முழங்கினாலும் தென்‌ மதுரையில் முழங்கினாலும்

அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்.

மனக்கவலை

பார்: என்ன பிரச்னை?
வடி: மனக்கவலை ங்க..

பார்: நான் போக்கட்டுமா?
வடி: பண்ணுப்பா..
பண்ணுப்பா..பண்ணுப்பா..உனக்கு புண்ணியமாப் போவும்.

பார்: கவலைங்கறதே மனசுல வர்றது தானே..
வடி: ஆமாப்பா..

பார்: அப்பறம் மனக் கவலைனு ஏன் எழுதற? வெறும கவலைனு எழுதினாப் போதுமே...

வடி: சரிப்பா..சரிப்பா..மனசை அழிச்சிடறேன்ப்பா..
பார்: அது!

பார்: சரி..கவலை எங்க வரும்...?
வடி: இதென்னப்பா கேள்வி? பச்சப்புள்ளைக்கு கூட தெரியுமே..மனசுல தாம்பா..!

பார்: மனசத் தான் இப்பஅழிச்சிட்டியே ..இப்ப கவலை எங்கடா  வரும்? 

வடி:: ஆமால்லே?!
இது தெரியாம அஞ்சாறு நாளா. கவலைப் பட்டுக்கிருக்கேம்பா..!

பார்: வரதுக்கு இடமில்லில்ல..?

வடி: இடமில்லப்பா.. ஆனா..

பார்: அப்ப அந்தகவலையையும் அழி!

புதன், 23 ஜூன், 2021

(சு) மாராத்தான்..!

'கொன்னுடுவேன்' னு ஒரு விரலைக் காமிச்சேன்..ஒரு பணத்துக்கு ஏலம் கேக்கறதா நெனச்சி இவள எனக்கு வித்துட்டான்! அப்படினு நாகேஷ் ஆயிரத்தில் ஒருவன்ல சொல்வார்.

அது மாதிரி புதுசா கேன்வாஸ், ட்ராக் பேண்ட்லாம் வாங்கி வாக்கிங் போவச் சொல்ல, என்னாடா கும்பல்னு வேடிக்கை பாத்தக் குத்தத்துக்கு "மராத்தான் ஓட்டம், கோவையே ஓடு!" அப்படினு ஒரு செஸ்ட் நம்பர் ஸ்டிக்கர் தந்து என் மொபைல் நம்பர் வாங்கிட்டானுங்க.( மதுர மல்லி, மதுர மல்லி..மொமண்ட்!)

நான் ரெண்டு நாளாதான்யா வாக்கிங்கே ஆரம்பிச்சிருக்கேன் அதுக்குள்ள மாராத்தானா?
நான் சுமாராத்தான் நடக்கவே செய்வேன்..?!

எப்படியோ 'நல்லவன்னு சொல்லிட்டாங்க' மோடுல மாராத்தானுக்கு பேர் தந்துட்டு நானும் ரௌடிதான் னு வீட்ல வந்து பில்ட்அப் தந்தா...... 'என்ன..? மிலிடரில சேர்ந்து கமாண்டோ ஆகப் போறீங்களா? ன்ற ரேஞ்சில வீட்டம்மா பார்வை!

ஒரு சாதனையாளன என்கரேஜ் பண்றதுல இந்த சம்முவம் எவ்வளவு பிற்போக்கா இருக்கு பாருங்க பிரண்ட்ச்?

எப்டியாச்சும் சின்னப் பகவதி தெரியுமானு கேக்ற.மாதிரி நாம்ப சின்ன Shan Karuppusamy ஆயிடலாம்னு பாத்தா.. ஒரு அவசர வேலையா மும்பை போக வேண்டி வந்துருச்சு...
ஒரு வருங்கால மராத்தான் வீரரை தமிழகம் இழக்குதேன்ற வருத்தத்தோட 
மும்பை போயாச்! 

இப்ப என்னடான்னா...நீயில்லாத மராத்தானில் நிம்மதி இல்லை னு 
இப்பிடி எஸ்.எம்.எஸ். அனுப்புறான்.

'Thanks for participating in the asian paints C10K coimbatore marathon and making it is a successful marathon. Incase if your not collected your certificate, please bring your chest number to get the same. Venue:Nehru stadium. Date 25/06/2018 to 03/07/2018. Time : 4pm to 7pm. Thanks asian paints limited.

இப்ப ஊருக்குப் போனதும் ( வீட்டுக்காரம்மா எடைக்குப் போடாம இருந்தா..) பழைய பேப்பர் நடுல இருக்குற செஸ்ட் நம்பர் கார்ட எடுத்துக்கிட்டு ஓடிப் போய் ( இப்ப மட்டும் ஓடுவியே..) 10 கி.மீ மார(டிக்க)த்தான்ஓடுனதா சர்டிபிகேட் வாங்கி இன்னொரு போஸ்ட் போடவாழ்த்துங்க பிரண்ட்ச்!

சனி, 19 ஜூன், 2021

அப்பாவின் கிச்சன்.

அப்பாவின் கிச்சன்.

அப்பாக்களின் சமையல் என்பதே குழந்தைகளுக்கு என்றும் அலர்ஜியாக இருக்கும்.
ஏதோ ஒரு காரணத்தால் அம்மா வீட்டில் இல்லை என்றால்..அன்றைய‌ போது விடியாமல் இருந்திருக்லாம் என்று தோன்றும்.

அம்மா வீட்டில் இல்லாத ஜிஎஸ்டிக்கு  சர்சார்ஜாக அப்பா சமையல் செய்வதையும் சாப்பிட வேண்டும்.

அலுவலகம் போகும் அவசரத்தில் திடீரென‌ வந்த அடிஷனல் சார்ஜ் தரும் பணி அழுத்தத்திலும் அவர் இயல்பைவிட அதிக கடுமையாக இருப்பதாகப் படும்.
பிள்ளைகளின் மார்னிங் சிக்னஸை அப்பா என்றுமே உணர்வதில்லை.
அதனை அஃபீஷியலாக டீல் செய்வதில் பிள்ளைகள் மேலும் மனச்சோர்வு அடையும்.

அம்மா வீட்டில் இல்லாததே பள்ளிக்கு லீவு போட போதுமான‌ காரணமாயிருக்கும். "அடிபட்டதோடு அவமானமும் பட்டது போல" அன்றையதினம் வகுப்பில் தேர்வும்‌ இருந்தால்..?  சுத்தம்!

இந்த இரட்டை பளுவைத் தன்னிடமிருந்து மிருதுவாகத் தாங்கும் மனநிலையில் அப்பா இருக்க மாட்டார்.
கலியாண வீட்டிலேயே கதறி அழுபவன் எழவு வீட்டுக்கு வந்தால்...கதையாக, அம்மாவின் அருமையான‌ சமையலையே அழுது கொண்டு சாப்பிடும் குழந்தைகள் அப்பாவின்‌ சமையலை..?
பீமனும்‌ நளனும் 
பெண்களைப்‌ போலே 
சமையல் செய்து பேரெடுத்தார்.. பானையும் பிடித்து 
வாளையும் பிடிக்கும்‌ 
சாதிக்கு இணையோ பெண்குலத்தார்?
என்று எம்ஜிஆர் பாடிட்டு‌ போய்விட்டார்.
இங்கு பானையை வாள்போலப் பிடித்தால் ரசத்தில் ரத்தம் தான்‌ வரும்.
ஒரு வழியாக கிளம்பி பள்ளிக்கு சென்றுவிட்டு அங்கு மதியம் டிபன்பாக்ஸை மறைத்து மறைத்து திறந்தாலும் கருகிப் போன‌ கத்தரிக்காய் பொரியல் படக்கூடாத எனிமியின்‌ கண்ணில் கரெக்டாகப் பட்டு மானமே போய்விடும்.
(அப்பாவுக்கும் சட்டையில் மஞ்சள் தூள கறை‌பட்டு அலுவலகத்தில்  கிண்டல்கள் தாங்கியிருப்பார் )
மாலை வீடு திரும்பும்‌ போதாவது அம்மா இருப்பார் அருமையான‌காப்பி கிடைக்கும் என்று வந்தால் ஏமாற்றமே.
அம்மா ஊரிலிருந்து வந்திருக்க‌ மாட்டார்.
கோபமும்‌ அழுகையும் கலந்து வரும்.
ஆனால் அம்மா எதற்காக வெளியூர்‌ போனார்..அது எந்த அளவு அவருக்கு அத்தியாவசியமான பயணம் என்பதைப் பற்றி அன்று கவலை இருந்ததில்லை. நமது வசதிக் குறைவே பிரச்னையாகத் தெரிந்தது.
அதனை அன்பு‌என்று தவறாக புரிந்து கொண்டோம் ..இரு தரப்பிலும்.!
அம்மா வந்து சமைத்தவுடன்‌ அப்பாடா! இப்பதான் ரசம் சாப்பிடற‌ மாதிரி‌ இருக்கு என்று அப்பாவை கலாய்ப்பதில் சின்னப் புன்னகையுடன்  அம்மாவும்‌ இணைந்து குழந்தைகளை விட்டுவிட்டு வெளியூர்‌‌ போய் வந்த பதற்றத்தையும் குறைத்துக் கொள்வார்.

பின்பொரு காலம் ஹாஸ்டல்களில் மெஸ்களில் ஓட்டல்களில் (சுய சமையலும் தான்) சாப்பிடும்‌ போது அப்பாவின் சமையலை வெறுத்த பாவம்தான் அனுபவிக்கிறேன் என்று எண்ணினேன்.( அந்த உருளை‌ காரப் பொறியல், தோசை வெங்காய‌ சட்னி)

இன்று என்றாவது அதிசயமாய்‌  சமையல் கட்டில் நான் பணிபுரிந்தால் 
மகளோ மனைவியோ அந்த கிச்சனை சுத்தம் செய்ய பயந்து கொண்டே என்னை நாடு கடத்தி விடுகிறார்கள்.
எவ்வளவு சுத்தமாக வைத்துவிட‌ முயற்சித்தாலும் ஒரு தேர்ந்த ஃபாரன்சிக் டெக்னீஷியனுக்கே உரிய 
நுண்ணறிவுடன் பால் பொங்கி வழிந்ததையோ, கொத்தவரங்காய் அடிப்பிடித்தையோ.., இட்லி குக்கருக்கு விசில் போட்டு விட்டதையோ கண்டுபிடித்து விடுகிறார்கள்.

ஒரு நாள் வெஜிடபிள் ரைஸ் செய்ய குக்கரில் எல்லா காய்களையும் வெட்டிப்‌ போட்டேன். ஆனால் சாதம் என்னவோ அம்மன் கோயில் கூழ் வடிவில் வந்தது. காரணம் அதில் நான்‌போட்ட சிலபல வெண்டைக்காய்கள்!
வெஜிடபில் ரைஸ்ல வெண்டைக்காய் போடக்கூடாதாமே..?!
அன்று தொடக்கம் போனவாரம் வரை 'தலையாலங்கானத்து செரு வென்ற‌ பாண்டிய‌ நெடுஞ்செழியன்‌' ரேஞ்சுக்கு 'வெண்டைக்காயை வெஜிடபில் ரைஸில் போட்ட சத்தியநாராயணன்‌ ராமசாமி' என்று எங்கள்‌‌ குடும்பத்தில் புகழப் பெற்றேன்.

போன வாரம்தான் ஹரன்‌பிரசன்னா ஒரு‌ பதிவில் அவியலில் வெண்டைக்காய்‌ போடுவது நாரோயில், குமரி மாவட்டப் பழக்கம் என்று‌ எழுதி இருந்தார். அப்பாடா..ஃபிரைடு ரைசில் வெண்டைக்காய்‌ போடுவது தெரும்பிரி மாவட்டப் பழக்கம் என்று சொல்லிவிட‌ வேண்டியது தான்.
ஆகையால் மக்களே... 
அப்பாக்களின் அவதியை ஆயிரம்‌ நாவுகள்‌ கொண்ட அந்த ஆதிசேஷனால் கூட சொல்லிவிட‌ முடியாதென்றால் கேவலம்..நானென்ன கூறிவிடமுடியும்.
-- தந்தையர் தின‌ போஸ்ட் போன்டு போஸ்டு.

புதன், 16 ஜூன், 2021

Because ill😅😅😅😅

இப்படித்தான் ஒரு முறை 
தலைவரிடம் ஒரு 
வெளி நாட்டு பல்கலை மாணவர்கள் நான்கு பிக்காஸில் வருமாறு பேசச்சொன்னார்கள்.

பிக் காஸில் வாழ்பவனும் (big castle)
பிக் காசில்லாதவனும் (big money)
பிக்காஸில் சாப்பிடுவான் (becosule)
பிகாஸ் இல் என்றார். ( Becaus ill)

வெள்ளையர்
பிக்-ஆஸில் சிரித்தனர்.

APPA...❤️❤️❤️

நீ எனக்குச் செய்த உதவிகள் 
நீள் பட்டியல், 
நான் உனக்கு செய்ததோ வெற்றுத்தாள்.

உழைப்பின் அருமை தெரிந்த உனக்கு உலக நடை தெரியவில்லை. 

உணவு, உடை, பகட்டெனத் தெரிவு இல்லை..உனக்கு - அது 
பஞ்சாங்கமல்ல பரமஞானம் எனத் 
தெளிவு இல்லை எமக்கு.

பணக்கார அப்பா இல்லையென வருந்தியுள்ளேன் பால்யத்தில்,
பால்யத்தில் அப்பா இருப்பவனே பணக்காரன் என இன்றுணர்ந்தேன்.

நிழலின் அருமை வெயிலில் உணர்ந்தால் மீண்டும் நிழல் நாடலாம்..
அப்பாவின் அருமை அந்திமத்தில் உணர்ந்தால்....?

சொல்லித் தந்தது என்னவோ குறைவுதான்..
சொல்லாமல் தந்தது கணக்கில..

மாடி வீடு, சொத்து, பணம் தரவில்லை.. மரபணு வழி எமக்கு ஒரு நூலகம் தந்தாய்!

நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இட்ட முகம்- எம் 
வெற்றியிலும் தோல்வியிலும் மாறவில்லை.

ஒருமுறை தான் உன்னிடம் அறை வாங்கியுள்ளேன் - இன்னும் 
சிலமுறை வாங்கியிருந்தால் சிறந்திருப்பேனோ?!

அவையத்து முந்தியிருக்கச் செய்தாய்,
என் நோற்றான் கொல்? என செவியுற்றாயா?

என் கண்ணாடியில் சில நேரம் நீ தெரிகிறாய், இந்தக் கவிதை உனக்கா?
உணர்ந்த எனக்கா தெரியவில்லை!

இருக்கும் வரை உன் குறைகள் பற்றி பேசியுள்ளேன்..இப்ப 
நீ இல்லாத குறை ஒன்றே பெரிதெமக்கு!

இன்னும் அதிகமாக உன்னிடம் கற்றிருக்கலாமோ..
இன்னமும் சற்றே உன்னைக் கவனித்திருக்கலாமோ....
என்றுருகும் பலகோடிப் பிள்ளைகள் போல் நானும் ஒருவன்.

வியாழன், 10 ஜூன், 2021

அகமதியா ஆறுமுகம் பிள்ளை.

ஒரு நண்பர்..அவர் பெயர் ஆறுமுகம். திருநெல்வேலி சைவ வேளாளர் (சாதி). ஆனால் இஸ்லாமியர்!
அதாவது அகமதியா பிரிவு. 

(கிரேஸி மோகன் பாஷைல சொன்னா 
"எனக்கு தெரிஞ்சது ஒரே ஒரு முஸ்லீம் ஃபிரண்டு தான் ஆனா அவரும் முஸ்லீம் இல்லை!" மொமண்ட்!)

நிற்க. இது காமடி பதிவோ, நக்கல் பதிவோ இல்லை. அனுபவ பதிவு.

அவருடன் பேசும் போது ஒரு முறை சொன்னார்..
" ஒரு‌ முஸ்லீம் பொய் பேசக்கூடாது.."

'ஏன்?'

"அல்லாவை நம்பாமல் பொய்தான் காப்பாத்தும் என நம்புறாமாதிரி ஆயுடுமுல்லா?!"

" அப்போம் பிஸ்னஸ் எப்பிடி செய்யுதீக?
அசலுக்கே கட்டாதுன்னு பேரம்‌பேசினா பொய்தானே?"

" அப்புடி சொல்லமாட்டம்ல..எனக்கு இந்த வெல ஒத்துகிடாது ம்பேன்"

இறையை மீறி பொய் காக்குமா?
பொய்யை விட இறை காக்குமா?

வள்ளுவரும் இது மாதிரி பல விதமாக பொய்யாமை பற்றி கூறுகிறார்.
படித்துள்ளேன்.
தன்னெஞ்சறிவது பொய்யற்க...என்றும் 
பொய்யாமை ஆற்றின் அறம் பிற‌செய்யாமை நன்று என்றும் சொல்கிறார்.

சத்யம் பேசு, 
இனியதைப் பேசு, 
சத்யமேனும் இன்னாததைப் பேசாதே..
இனியதெனினும் அசத்தியத்தைப் பேசாதே..
என‌சமஸ்கிருத சுபாஷிதங்களில் வருகிறது.

12 ஆண்டுகளுக்கு முன் பேசியது நெஞ்சில் நிலைத்து விட்டது.

" பொய் காக்கும் என்று எண்ணுவது அல்லாவை விட பொய் சக்தி வாய்ந்தது என்று நம்புவது போல!"

ஜனாப் ஆறுமுகம் வாழ்க நீ எம்மான்.
பற்றுக அப்பற்றை!

செவ்வாய், 1 ஜூன், 2021

சோம்பல்-- கவிதை

"சோம்பலில் தொலைத்த 
மணித் துளியை , 
ஆக்சிலேட்டரில் தேடுகிறோம்,"

யவனராணியும்_கம்யூனிஸ்டு_சீனாவும்

#யவனராணியும்_கம்யூனிஸ்டு_சீனாவும்

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா 
வேலாள் முகத்த களிறு.( குறள்-500)

வேல் ஏந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும். ( மு.வ)

"சீனத்தராய் விடுவாரோ..?! பிற தேசத்தர் போல் பல தீமை செய்வாரோ...?!" என்று கூறிய‌ தீர்க்க தரிசி பாரதி.

இப்போது நேபாளை நேக்காக தூண்டியும் தாவாங்கில் தாவாக்கட்டையை தாங்கியும் பிரச்னை‌ செய்யும்‌ சீனம், தனக்கு வசதியான பான்காங் ஏரிப்பிரதேசத்தில் இந்தியாவை இடறிட முயல்கிறது.

நம் முப்பாட்டன் கரிகாலன் தன்னை விட வலிமையான, கோட்டைக்குள் வீற்றிருந்து கொடிபறக்க ஆண்ட 'இருங்கோவேளை' அவன் துணையான சேரன், பண்டியன் வேளிர் ஐவரோடு
 ' மருங்கு சாய'  வென்றது இன்றைய சூழலுக்கு இந்தியாவுக்கான‌ பாடம்.

வலிமையான எதிரியை அவனது வலிய இடத்தில் போரில் எதிர் கொள்ளாதே.
அவனை அவன் பாதுகாப்பிலிருந்து வெளிக்கொணர். போரை எதிரிக்கு வலிமை உள்ள இடத்திலிருந்து நகர்த்தி அவனுக்கு பலவீனம் உள்ள இடத்திவ் போரை நிகழ்த்து.

கரிகாலன் இருங்கோவேளை வென்ற வெண்ணிப் போர் நடந்த முறை பற்றி பட்டினப்பாலை பாடல்கள் பின்வருமாறு கூறுகின்றன.

"தலைதவச் சென்று தண்பனை யெடுப்பி
வெண்பூக் கரும்பொரு செந்நெல் நீடி
மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக்
கராஅங் கலித்த கண்ணகன் பொய்கை
பொழுங்காற் புதவமொடு செருநதி நீடிச்
செருவும் வாவியும் மயங்கி நீரற்று… (239-244)

வடவர் வாட, குடவர் கூம்ப,
தென்னவன் திறல்கெட, சீறி, மன்னர்
மன் எயில் கதுவும் மதனுடை நோன் தாள்,
மாத் தானை மற மொய்ம்பின்,
செங் கண்ணால் செயிர்த்து நோக்கி,
புன் பொதுவர் வழி பொன்ற
இருங்கோ வேள் மருங்கு சாய… (276-282)" 

எதிரிகளின் அரண்களை நோக்கிச் சென்று மருத நிலத்திலுள்ள குடிகளைக் ஓட்டி விட்டு, கரும்பு தோட்டங்களையும் பயிர்களையும் அழித்து, ஏரி குளம் குட்டை முதலிய நீர் நிலைகளை தூர்த்து பின்பு படையெடுக்கிறான். மருத நில மக்கள் இன்னலுக்காளானதை பொறுக்காமல் மன்னன் கோட்டையிலிருந்து மருத நிலம் காக்க வருகிறான்.

இருங்கோவேளுடன் இருந்த வட நாட்டு வீரர்களையும், குடதிசை (மேல்திசை) கோமகனான சேரனையும், தென்னவனான பாண்டியனையும் சமர் புரிந்து தோற்கடித்து, இருங்கோவேளை கொன்று வெண்ணிப்போரை முடிக்கின்றான். பிறகு தலைவன் இல்லாத தலைநகரான‌ உறையூரை எளிதாக கைப்பற்றுகிறான்.

( தஞ்சை - நாகை வழியில் உள்ள‌ கோவில் வெண்ணியே கரிகாலன் சோழ சாம்ராஜ்யம் ஸ்தாபிக்க அடிப்படை வெற்றியைத் தந்ததாக வரலாற்றில் குறிக்கப்படும் ' வெண்ணிப்‌பரந்தலை')

இதனை யவனராணியில் சாண்டில்யன் அழகாக விவரித்திருப்பார்.

இப்போது நம் இந்தியா, சீனனை வெளியே வரவைக்க அவனுடைய                ' மருதநிலம்' ஆன இந்திய, தென்சீனக்கடல் பகுதியில் போரை ஆரம்பிக்க ஆயத்தம் செய்ய வேண்டும்.

எங்க அடிச்சா வலிக்கும்‌ என்று அவனுக்கு புரியும். சீனக்கப்பல்கள்/ கண்டைனர்கள் போக்குவரத்து பாதிக்கப்படும்‌ என்ற‌ பயம்‌ வந்தால் மட்டுமே சீனன் கட்டுப்‌படுவான்.

தமிழக மதிய உணவுக்கு இலவச கோதுமை வழங்க கேர் நிறுவனம் தயாராக இருந்த போதும் அனுமதிக்க மறுத்தது அமெரிக்க அரசு.

காமராஜர் தன் அதிகாரிகளிடம் கேட்டாராம்," அமரிக்கா காரன்‌ கடை இங்க என்னலாம் இருக்குன்னேன்?!"

புரிந்து கொண்ட அமரிக்க வணிக நிறுவனங்கள் அமரிக்க அரசை நிர்பந்தித்து அனுமதி தர வைத்தது.

திருக்குறள் எழுதப்படும் முன்னரே வெண்ணிப்போர்.
வெண்ணிப்போர், திருக்குறளின்‌ இடனறிதல் ஆகியன படிக்காதவரே காமராஜர்.

ஆனால் இங்கே அந்த அறிவு பாரம்பரியமாக தமிழனிடம் உள்ளது.

ஜெய்சங்கர்‌ இரண்டையும் படிக்க‌ வாய்ப்பிருந்த தமிழர்.

இந்தியா..இந்தியா வா? எதை விலக்குகிறீர்..?

பெரும்பான்மையான தமிழர்கள் இந்தி படிப்பதால்....என்ன விளைவு ஏற்படும்?
1. தமிழ் அழியாது.
2. இந்திப்படங்கள் இங்கு பரவலாக ஓடும்.
3. இந்தி சீரியல்கள் டப்பாமலேயே ஓடும்
4. இந்தி விளம்பரங்கள் இங்கு வரும். தமிழிலே தனியாக தேவையில்லை.
5. இந்தி பத்திரிகைகள் இங்கு பரவும்.
6. இந்தி ஸ்டார்கள் தமிழனுக்கு நெருக்கமாவார்கள்.

இதனால் தமிழ், கலைஞர்கள், எழுத்தாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், வசனகர்த்தா, போன்றவர்க்கு வாய்ப்பு குறையும்.

ஆரம்பத் தேக்கங்கள் இருந்தாலும் நாளடைவில்..
தமிழ் சானல்கள் கடும்‌போட்டி எதிர்த்து தரம் உயரும்.

புத்திசாலி தமிழர்கள் மலையாளிகள் போல அகில இந்திய சானல், பாலிவுட் வட இந்திய மீடியாக்களில் முன்னிலை பெறுவர்.

பெட்டிக்கடை ஓனராக இருப்பதை விட சூப்பர் மார்க்கட் பங்கு தாரர் ஆகமுடியும்.

மராத்திய, மலையாள, கன்னட உலகிலகருந்து மிகச் சிறந்த இலக்கியங்கள் வந்துள்ளன. அவை இந்தியை எதிரியாகப் பார்க்காத‌ மாநில மொழிகள்.

300 ஆண்டு களப்பிறர்‌ ஆட்சி
100 ஆண்டு மராத்தியர் ஆட்சி
100 ஆண்டு இஸ்லாமியர்‌ ஆட்சி
300 ஆண்டு தெலுங்கர் ஆட்சி
200 ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி 
இவற்றில் எல்லாம் தலை நிமிர்ந்து நின்ற‌தமிழ் அழியும் எனப் பயங்காட்டுவதே அரசியல் லாபத்திற்காகத்தான்.

இந்தி திணிப்பு அராஜகம் எனில்
இந்தி எதிர்ப்பு ஆதாய‌ அரசியல்!

இந்தியை வந்திக்கவோ, நிந்திக்கவோ வேண்டாம்..சிந்திக்க பயனுண்டேல் முந்திக்க!

வியாழன், 27 மே, 2021

செவிடன்

முரளி உண்மையில் வாயடைத்து அசந்து தான் போனான்.. ! 

பொதுவாக சென்னையிலேயே பிறந்து வளர்ந்த சென்னைக் காரர்களுக்கு பிற மாவட்டங்களில் அறிவாளிகள்‌ இருப்பார்கள்‌ என்பதையே நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும்.

 அதிலும் தர்மபுரி‌ மாவட்டத்தில், அரூரில் காது கேட்காத, சட்டையே போட்டறியாத ஒரு நிரட்சரகுட்சியிடம்‌ இத்தனை திறமைகள்‌ இருப்பது சென்னைக்கார முரளியை வாய்விட்டு அதிசயிக்க‌ செய்தது.

முரளி, சுரேஷின்‌ நண்பன். ஒரு எம்.என்.சி யில் எப்.எம்.சி.ஜி பொருட்களை விற்பதில் தன்‌ பேச்சுத் திறத்தைக் காண்பித்து லிஃப்ட், லிஃப்டாக பதவி உயர்வு பெற்ற ( மெதுவா முன்னேறினால் தான் படிப்படியாக...)
நடிகர் மாதவனைப் போல சார்மிங் பர்ஸனாலிட்டி.
( நாங்களும் அதுக்கு கம்மி இல்லை என்பது வேறு விஷயம்!)
சுரேஷ் டெல்லியில்(அப்போது) மத்திய அரசுப்‌பணியில் இருக்கும் என்‌ கஸின்.
பின்னே ஞானும். கூடவே செவிடனும்!

அந்த வாதாம்‌ மரத்தடியில் உட்கார்ந்திருந்தோம்.

ஒரு இளமையான மேடி, 
இளம் அமீர்கான், 
மெலிந்த அமிதாப் (நான்தான் 😂) மற்றும்  காமடியன்‌ ஜார்ஜ் (கைதி படத்துல பயந்த போலீஸா நடிப்பாரே..?!) போன்ற உருவமுள்ள ஒருவர் எ‌ன நால்வரையும் 
பார்த்தவர்கள் என்ன நினைப்பார்களோ தெரியாது; ஆனால் பேச்சைக் கேட்டவர்கள், கறுத்த அந்த மனிதனை கதாநாயகனாக உணர்வார்கள்.

 தெர்ம்பிரி ஸ்லாங்கில் காது கேளாத ஒருவரின் பேச்சு. ஆனால் மூக்கின்‌மேல் விரலை வைக்கச் செய்யும்!

செவிடன் என்று எங்களால் அழைக்கப்படும் அந்த நான்காம் நபர் எங்கள் மூவருக்கும் 'சோஸ்யம்' பார்த்துக் கொண்டிருந்தார். 

காடு..ஊடு..ரோடு..மூணுல ஒண்ணு சொல்லு!
முரளி சொன்னான்,
உடனே அதற்கு ஒரு பலன்‌ சொல்லப்பட்டது.

கல், மரம், கொட்டை ஒண்ணத் தொடு.
தொட்டதும்..சுரேஷுக்கு ஒரு‌பலன்.

வானம், பூமி, காத்து...ஒண்ணு சொல்லு..!
சொன்னதும் எனக்கு ஒரு‌பலன்!

இதெல்லாம் தமாஷாக இருந்தாலும் அதில் எளிய‌ மனிதர்களின் ஒரு லாஜிக் இருந்தது.

செவிடன் என்று எங்கள் குடும்பங்களால் அழைக்கப்பட்ட அம்மனிதர் காது கேளாமல், ஒண்ணரைக் கண்ணாக இருந்தாலும் நாற்பதுக்கு மேல்  உடலில் வயது ஏறாத உழைப்பாளியாக இருந்தார். புளியங்கொட்டை போன்ற‌ நிறம்..மினுமினுப்பு ( வியர்வை)

பூதத்துக்கு வேலை தருவது போல வேலைகளைத் தந்து கொண்டே இருக்க‌வேண்டும். கூலி பேசி விட்டுத்தான்‌ வேலை செய்வார்.

இடையில் சாப்பாடு போடு..என்று‌ இரண்டு வேளை சாப்பிடுவார்.

சோமம் குடு! என்று‌ பழைய வேட்டியை கேட்டு வாங்கிச் செல்வார்.

ஆனால் பேசிய காசில் நாலணா கூட குறையக்கூடாது.

ஏம்பா..அதான் ரெண்டு‌ நேரம்‌ சாப்பிட்ட..?
வேட்டி‌ வேற‌ வாங்கிருக்க? என்று வீட்டுப் பெரியவர்கள் கேட்டால்...,
" அது தருமம்..இது கூலி!"
டாண் என்று‌ பதில் வரும்!

பிறகு இடைவெளி இருந்தால் சிறுவர்களுடன் பேசி‌க் கதை சொல்லி பொழுது போக்குவார்.

நான்‌ கேட்ட‌ ஆரம்ப கால  ராமாயணம் அவர்‌ சொன்னது தான். பிறகு தான் சக்ரவர்த்தி திருமகன் படித்ததெல்லாம்!

...அப்போ ராமர்..நீலத்துல பார்த்தார்...
( நீலம்னா..ஞான திருஷ்டி!) சீதா தேவி கண்ணீரா ஊத்துறா...!

...லப்பணன் ( லக்ஷ்மணன்) கோவமாயி..அம்புவிட்டான்..
கும்பன் அத்தையெல்லாம் பெருமூச்சு விட்டே முறிச்சான்.....

"ஆரு‌ மனிதா காவலாள்...? நான் ராமசாமி ஏவலாள்..." என்று இலங்கை கோட்டைக் காவலனிடம் அனுமாராய்ப்‌ பேசுவார்!

இப்படியே நீண்டு இரண்டு மூன்று‌ நாட்கள்‌ தொடரும்‌ கதை.

கையில் பெருமாள்‌ என்று‌ பச்சை குத்தியிருப்பார். அதுதான்‌ தன்‌ பெயர் என்று சிரிப்புடன்‌ சொல்வார்.
நாங்கள் எல்லாரும் கூட செவிடன்‌ என்றே குறிப்பிடுவோம். அது தெரிந்தாலும் பொருட் படுத்துவதில்லை. 

...ஆரு செத்துட்டாங்க...?

இந்திரா காந்தி என்றோம்..
புரியவில்லை.பிரதமர் என்றோம் விளங்கவில்லை. பிறகு பத்திரிக்கையில் வந்த புகைப்படத்தை காட்டியதும்...
"அட்டடோ! நேரு மக!" என்றார்.

சற்று அமைதியாகச் சில கணங்கள் இருந்தவர்,' ஒர்ரூவான்னா அது பத்துபைசாக்கு சமம். அதுக்கு மேல கெடயாதுன்னிட்டா!' அதான் கொன்னுட்டாங்க!' என்று பண மதிப்பு வீழ்ச்சி‌ பற்றி ஒரு‌பொருளாதாரக் கருத்தை வெளியிட்டார்.

காலிஸ்தான்‌ பிரச்னையைப்‌ பற்றி விளக்க வழி தெரியாமல் நாங்கள் அமைதி காத்தோம்.

ஒரு நாள் இரண்டு வாழை இலையை எடுத்து அதை  நடு நடுவே சன்னல் போல் கீறி ஒன்றுள் ஒன்று சொருகி விட்டார்.
இலையைக் கிழிக்காமல் பிரிக்கச் சொன்னார். அந்தப் பந்தயத்தில் நாங்கள்‌ தோற்றோம். அவர் மறைத்து வைத்து இரு இலைகளையும்‌ பிரித்தார்.

எனக்கு சொல்லித்தரக் கேட்டபோது..
'ஒர்ரூவா குடு' என்றார். என்னிடம் அப்ப பணமில்லாமல் மிஸ்ஸாயிடுச்சி.
இப்ப நூறு‌ரூவா தரவும் நான்‌ரெடி..ஆனா வாய்ப்பில்ல ராசா...வாய்ப்பே இல்ல!

இப்ப அது தெரிந்தால் யூட்யூப்ல போட்டு வ்யூவ்ஸ் அள்ளலாம். யாரிடம்‌கேட்பது.?

விறகு வெட்டுவது, மண் வெட்டுவது, கூரை மேய்வது, காய்கறிச்‌செடி பாத்தி கட்டுவது போன்ற‌ கடின‌ வேலைகளை செய்வார்.

நாங்கள் எல்லாம்‌ சுரைக்காய்‌ புருடையை  இடுப்பில் கட்டிக் கொண்டு நீச்சல் கற்கப் போன போது எதிர்வீட்டு கமால் தீனையும் அவன் அண்ணன் சேட்டுவையும் இரண்டு வடக்கயிறில் கட்டி இரண்டு கையில் பிடித்துக் கொண்டு (பம்பு செட்) கிணற்றில் குதிக்கச் சொல்லி நீச்சல் கற்றுத் தந்தார். 

இரண்டு‌ பையனும் ஆளுக்கு ஒருபுறம் தண்ணீருக்குள் இழுக்க கரையில் காஸாபியாங்கா மாதிரி உறுதியாக நின்று நீச்சல் கற்றுத் தந்தார்.

ஒரு‌ முறை வெட்கச் சிரிப்புடன்‌ தனக்கு இரு‌ மனைவிகள் என்றார். காஸாபியாங்காவா? காஸனோவா வா? என்று அதிசயித்தேன்!

சுளுக்கு ஏற்பட்டால் பாடம் போடுதல், எண்ணை வைத்து நீவுதல் என்று ஆபத் பாந்தவனாய் கை வைத்தியம் பார்க்கவும் தெரியும்.

இன்னும் நானறியாத ரகசியம்‌ பலவும் இருக்குமோ என்னவோ?!

பெருமாள் என்ற‌ பெயர் பொருத்தமானதே. பெரும் ஆள்தான் அவர். நாங்கள் கூட அப்படியே அழைத்திருக்கலாமோ..?!

மெல்ல ஆரோக்யம் குன்ற, உடல் நிலை சரியில்லை என்று அடிக்கடி வந்த போது சொல்வார். வருகை குறைந்து நின்றே போனது.
அவர் நினைவும் மனதில் நிரந்தரமாக நின்று போனது.

ஒவ்வொரு முதியவரோடும் ஒரு லைப்ரரி மறைகிறது!
எதையெதையோ சிறுவயதில் மனப்பாடம்‌ செய்தேன்..அந்த செவிடரின்  ராமாயணத்தை மனப்பாடம் செய்யாமல் விட்டுவிட்டதை இன்றைக்கும் பெரு இழப்பாகவே  உணர்கிறேன்.!

கீழே..காமடியன் திரு.ஜார்ஜ்!

Forest gump

'பாரீஸைப்‌ பார்க்காமல் செத்துப் போகாதே' என்பது ஐரோப்பிய ‌பழமொழி. ஃபாரஸ்ட்‌கம்ப் பார்க்காமல் லாக்டவுன் முடிக்காதே என்பது சினாமா ‌ரசிகர்களுக்கு என் டிப்ஸ் எனலாம். 

சிறகில் இருந்து உதிர்ந்த 
இறகு ஒன்று‌ 
காற்றின்‌தீராத பக்கங்களில் ஒரு‌பறவையின்‌ வாழ்வை 
எழுதிச் செல்கிறது.

என்ற‌ பிரமிளின் கவிதை உலகப் புகழ் பெற்றது. இப்படத்தின் முதல் காட்சியே இந்தக் கவிதையை படம் பிடித்து உள்ளதாக உணர்ந்தேன்.

டாம் ஹாங்க்ஸ் கதாநாயகன். ஒரு காட்சியில் கூட அவரை விட்டு கண் அகலாதபடி பார்ப்பவரை பிடித்து ஈர்த்து விடுகிறார்.

 அந்தப் பேச்சு, நடை, ஆயாசம், வெகுளித்தனம், பயம், உடல்மொழி, வசனம் என்று அவர் ஸ்கோர் பண்ணாத செக்மண்ட் இல்லை.

சற்றே பிசிகினாலும் ஒரு நகைச்சுவை பாத்திரமாக செயற்கையாக சறுக்கிவிடும் அபாயம் உள்ள பாத்திரம்.
அதை கையாண்ட லாகவம்..பிரமாதம்.

தன் அதிகாரியைப் பார்க்கும் போது காட்டும் பவ்யம், நேசம் ‌இரண்டும்‌ கலந்த நடிப்பு.

தன்‌குழந்தை என்று தெரியும் போது காட்டும் குழந்தைத்தனமான பயம், பாசம்.
சினேகிதியின் வார்த்தைக்கு அடிபணியும் கேள்வி கேட்காத சின்சியரிட்டி.
மனைவியின் ‌கல்லறையில் அழும் காட்சி...
அத்தனை சக சோல்ஜர்ஸையும் காப்பாற்றும் அப்பாவித்தனம்,
ஜனாதிபதியிடம் அடிபட்ட பின்பக்கத்தைக் காட்டும்‌ வெகுளித்தனம்...

கலாட்டா கல்யாண சிவாஜி,
தெய்வமகன் ‌சிவாஜி,
மூன்றாம்‌பிறை‌ கமல், தெய்வத்திருமகள் விக்ரம்
சந்திரபாபு என்று ‌பலர் பல காட்சிகளில் கண்ணில் வந்து போகிறார்கள்.

பொருத்தமான வசனங்கள்.
"ஐ விஷ் ஐ வாஸ்  தேர் வித் யு..ஃபாரஸ்ட்" என காதலி சொல்ல...
"யு வேர் தேர் ( வித்  மீ)" என்று பதில் தரும் காட்சி ஒரு‌கவிதை.
சும்மா ஒன்றும் ஆஸ்கர்‌ தந்து விடவில்லை.

கமர்ஷியலாக அமரிக்க சென்டி‌மெண்ட் விஷயங்களான
வியட்நாம், ஃபுட்‌பால், கென்னடி அஸாஸினேஷன் என்ற ‌மசாலாக்களை இதமாகத் தூவி
டைரக்டர், திரைக்கதாசிரியர் இருவரும் அகாடமி விருதுகளை பெற்றனர்.
இப்படி ஒரு சுறுசுறுப்பான படம் 4 அகாடமி அவார்டு வாங்கியது சிறப்பே.

வழக்கம்‌போல இரண்டு ஆண்டுகளாக எனக்கு இப்படத்தை ரெக்கமண்ட் பண்ணி‌பார்க்க வைத்த‌ மகருக்கு நன்றி.

https://images.app.goo.gl/N5KpjZ9398YuQ2Uz7



தத்ஸ் பித்ஸ்

நான் போடும் பெரும்பாலான நாடகங்கள் என்னை நம்பவைக்கத்தான் என எப்போது உணர்வேனோ?!

காப்பிய‌ மௌனம்

காப்பிய மௌனம்...

ஒரு பெரும் எழுத்தாளர் ( யாரென நினைவில்லை..) காப்பிய மௌனம் பற்றி ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். ராமாயணத்தில் வரும் ஊர்மிளாவைப் பற்றியது. ராமனையும்,இலக்குவனையும் விதந்தோதும் காப்பியம் இலக்குவன் மனைவி ஊர்மிளையின் இடியோசை மௌனத்தை பதிவு செய்யவில்லை. 
14 ஆண்டுகள் காட்டுக்குப் போவதென முடிவு செய்த இளையோன் தன் மனைவி ஊர்மிளாவின் கருத்தை அறிய நினைக்கவில்லை. பின் அயோத்தி திரும்ப வந்து 14 ஆண்டுகள் சேர்த்து வைத்து தூங்கினான் என்றும் அப்போதும் ஊர்மிளா தனிமையில் வாடினாள் எனவும் கூறுவர்.

இங்கு ஊர்மிளாவின் பெருமை காப்பியத்தில் மௌனமாக ஜ்வலிக்கிறது.

நடைமுறை வாழ்வில் கூட இது போல் மௌனங்கள் உள்ளதை உணர்கிறோம்.

1.சகாயம் ஐ.ஏ.எஸ்:

தன் ஐஏஎஸ் நேர்காணலில் ஏன் இந்தி தெரியாதா என்று கேட்கப்பட்டதற்கு அதைவிட சிறப்பான தமிழ் தெரியும் என்றாராம். இத்தகைய பதிலால் உங்களை தேர்ந்தெடுப்பது தடைபடும் என்ற பயம் இல்லையா என்று கேட்கப்பட்ட போது...ஐஏஎஸ் என்பதை விட தமிழன் என சொல்லிக் கொள்வதே பெருமை என்றாராம். 
 
இதற்கு கை தட்டிப் பெருமைப் படுகையில் இத்தகு பதிலுக்காக சுணங்காமல் அவரை தேர்வு செய்த அந்த இந்திஅதிகாரி மௌனமாக ஜொலிக்கிறார்.

2. ஜெ : கருணா.

கருணாநிதி முதல் வராக இருந்த ஒரு நாளில் திடும் என வாராது வந்தது போல் ஜெ சட்டசபையில் பிரசன்னமானார். திமுக அரசை எதிர்த்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக நெடு நேரம் வாசித்தார், பதிலுக்குக்கூட காத்திராமல் வெளியறினார். அதிமுக உறுப்பினர்கள் மேசைகளை தெறிக்க விட்டனர். இன்று வரை ர.ரக்கள் இதனை சிலாகித்துப் பேசுவார்கள். 

ஆனால் அவ்வாறு சடசடவென குற்றச்சாட்டைப் பேச அனுமதித்து அவரை எதிர்க்கட்சித்தலைவராக ஸ்கோர் செய்யவிட்ட திமுக/ கருணாநிதியின் மௌனம் ஜொலிக்கிறது.

3. பாகப்பிரிவினை படத்தில் கோவிலுக்குச் செல்லும் கைவிளங்காத சிவாஜியைப் பார்த்து இப்படிப் போய் எப்பிடி சாமி கும்பிடுவ? சல்யூட் அடிப்பியா என எம்.ஆர்.ராதா கேட்டு கைதட்டு பெறுவார். இங்கு சிவாஜியை கிண்டல் செய்து ராதா ஸ்கோர் பண்ணினாலும், காட்சியின் சிறப்பு கருதி சிவாஜி மௌனம் காத்தார்.

உயர் விழுமியங்களைக் காக்க மனித குல மாண்பை, சட்டத்தை, மரபை, நீதியைக் காக்க தன் அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு மௌனம் காப்பவன் காப்பியத்தில்/ காலத்தால் போற்றப் படுகிறான்.

நண்பர்களுக்கும் தெரிந்த உதாரணங்கள் கூறினால் நன்றியுடையவனாவேன்.

Jokes

நான்: இன்னிக்கு என்ன‌ டிபன்?

மனைவியார்: உப்புமா! 

நான்: நான் வெளில போய் சாப்பிட்டுக்கிறேன்.

மகள்/மகர்: அதை இங்க வச்சே சாப்பிடு, ஏன் அக்கம்‌பக்கத்துல எங்க மானத்தை வாங்குற?!

நான்‌: அவ்வ்வ்......!