புதன், 16 ஜூன், 2021

APPA...❤️❤️❤️

நீ எனக்குச் செய்த உதவிகள் 
நீள் பட்டியல், 
நான் உனக்கு செய்ததோ வெற்றுத்தாள்.

உழைப்பின் அருமை தெரிந்த உனக்கு உலக நடை தெரியவில்லை. 

உணவு, உடை, பகட்டெனத் தெரிவு இல்லை..உனக்கு - அது 
பஞ்சாங்கமல்ல பரமஞானம் எனத் 
தெளிவு இல்லை எமக்கு.

பணக்கார அப்பா இல்லையென வருந்தியுள்ளேன் பால்யத்தில்,
பால்யத்தில் அப்பா இருப்பவனே பணக்காரன் என இன்றுணர்ந்தேன்.

நிழலின் அருமை வெயிலில் உணர்ந்தால் மீண்டும் நிழல் நாடலாம்..
அப்பாவின் அருமை அந்திமத்தில் உணர்ந்தால்....?

சொல்லித் தந்தது என்னவோ குறைவுதான்..
சொல்லாமல் தந்தது கணக்கில..

மாடி வீடு, சொத்து, பணம் தரவில்லை.. மரபணு வழி எமக்கு ஒரு நூலகம் தந்தாய்!

நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இட்ட முகம்- எம் 
வெற்றியிலும் தோல்வியிலும் மாறவில்லை.

ஒருமுறை தான் உன்னிடம் அறை வாங்கியுள்ளேன் - இன்னும் 
சிலமுறை வாங்கியிருந்தால் சிறந்திருப்பேனோ?!

அவையத்து முந்தியிருக்கச் செய்தாய்,
என் நோற்றான் கொல்? என செவியுற்றாயா?

என் கண்ணாடியில் சில நேரம் நீ தெரிகிறாய், இந்தக் கவிதை உனக்கா?
உணர்ந்த எனக்கா தெரியவில்லை!

இருக்கும் வரை உன் குறைகள் பற்றி பேசியுள்ளேன்..இப்ப 
நீ இல்லாத குறை ஒன்றே பெரிதெமக்கு!

இன்னும் அதிகமாக உன்னிடம் கற்றிருக்கலாமோ..
இன்னமும் சற்றே உன்னைக் கவனித்திருக்கலாமோ....
என்றுருகும் பலகோடிப் பிள்ளைகள் போல் நானும் ஒருவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக