#யவனராணியும்_கம்யூனிஸ்டு_சீனாவும்
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.( குறள்-500)
வேல் ஏந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும். ( மு.வ)
"சீனத்தராய் விடுவாரோ..?! பிற தேசத்தர் போல் பல தீமை செய்வாரோ...?!" என்று கூறிய தீர்க்க தரிசி பாரதி.
இப்போது நேபாளை நேக்காக தூண்டியும் தாவாங்கில் தாவாக்கட்டையை தாங்கியும் பிரச்னை செய்யும் சீனம், தனக்கு வசதியான பான்காங் ஏரிப்பிரதேசத்தில் இந்தியாவை இடறிட முயல்கிறது.
நம் முப்பாட்டன் கரிகாலன் தன்னை விட வலிமையான, கோட்டைக்குள் வீற்றிருந்து கொடிபறக்க ஆண்ட 'இருங்கோவேளை' அவன் துணையான சேரன், பண்டியன் வேளிர் ஐவரோடு
' மருங்கு சாய' வென்றது இன்றைய சூழலுக்கு இந்தியாவுக்கான பாடம்.
வலிமையான எதிரியை அவனது வலிய இடத்தில் போரில் எதிர் கொள்ளாதே.
அவனை அவன் பாதுகாப்பிலிருந்து வெளிக்கொணர். போரை எதிரிக்கு வலிமை உள்ள இடத்திலிருந்து நகர்த்தி அவனுக்கு பலவீனம் உள்ள இடத்திவ் போரை நிகழ்த்து.
கரிகாலன் இருங்கோவேளை வென்ற வெண்ணிப் போர் நடந்த முறை பற்றி பட்டினப்பாலை பாடல்கள் பின்வருமாறு கூறுகின்றன.
"தலைதவச் சென்று தண்பனை யெடுப்பி
வெண்பூக் கரும்பொரு செந்நெல் நீடி
மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக்
கராஅங் கலித்த கண்ணகன் பொய்கை
பொழுங்காற் புதவமொடு செருநதி நீடிச்
செருவும் வாவியும் மயங்கி நீரற்று… (239-244)
வடவர் வாட, குடவர் கூம்ப,
தென்னவன் திறல்கெட, சீறி, மன்னர்
மன் எயில் கதுவும் மதனுடை நோன் தாள்,
மாத் தானை மற மொய்ம்பின்,
செங் கண்ணால் செயிர்த்து நோக்கி,
புன் பொதுவர் வழி பொன்ற
இருங்கோ வேள் மருங்கு சாய… (276-282)"
எதிரிகளின் அரண்களை நோக்கிச் சென்று மருத நிலத்திலுள்ள குடிகளைக் ஓட்டி விட்டு, கரும்பு தோட்டங்களையும் பயிர்களையும் அழித்து, ஏரி குளம் குட்டை முதலிய நீர் நிலைகளை தூர்த்து பின்பு படையெடுக்கிறான். மருத நில மக்கள் இன்னலுக்காளானதை பொறுக்காமல் மன்னன் கோட்டையிலிருந்து மருத நிலம் காக்க வருகிறான்.
இருங்கோவேளுடன் இருந்த வட நாட்டு வீரர்களையும், குடதிசை (மேல்திசை) கோமகனான சேரனையும், தென்னவனான பாண்டியனையும் சமர் புரிந்து தோற்கடித்து, இருங்கோவேளை கொன்று வெண்ணிப்போரை முடிக்கின்றான். பிறகு தலைவன் இல்லாத தலைநகரான உறையூரை எளிதாக கைப்பற்றுகிறான்.
( தஞ்சை - நாகை வழியில் உள்ள கோவில் வெண்ணியே கரிகாலன் சோழ சாம்ராஜ்யம் ஸ்தாபிக்க அடிப்படை வெற்றியைத் தந்ததாக வரலாற்றில் குறிக்கப்படும் ' வெண்ணிப்பரந்தலை')
இதனை யவனராணியில் சாண்டில்யன் அழகாக விவரித்திருப்பார்.
இப்போது நம் இந்தியா, சீனனை வெளியே வரவைக்க அவனுடைய ' மருதநிலம்' ஆன இந்திய, தென்சீனக்கடல் பகுதியில் போரை ஆரம்பிக்க ஆயத்தம் செய்ய வேண்டும்.
எங்க அடிச்சா வலிக்கும் என்று அவனுக்கு புரியும். சீனக்கப்பல்கள்/ கண்டைனர்கள் போக்குவரத்து பாதிக்கப்படும் என்ற பயம் வந்தால் மட்டுமே சீனன் கட்டுப்படுவான்.
தமிழக மதிய உணவுக்கு இலவச கோதுமை வழங்க கேர் நிறுவனம் தயாராக இருந்த போதும் அனுமதிக்க மறுத்தது அமெரிக்க அரசு.
காமராஜர் தன் அதிகாரிகளிடம் கேட்டாராம்," அமரிக்கா காரன் கடை இங்க என்னலாம் இருக்குன்னேன்?!"
புரிந்து கொண்ட அமரிக்க வணிக நிறுவனங்கள் அமரிக்க அரசை நிர்பந்தித்து அனுமதி தர வைத்தது.
திருக்குறள் எழுதப்படும் முன்னரே வெண்ணிப்போர்.
வெண்ணிப்போர், திருக்குறளின் இடனறிதல் ஆகியன படிக்காதவரே காமராஜர்.
ஆனால் இங்கே அந்த அறிவு பாரம்பரியமாக தமிழனிடம் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக