செவ்வாய், 27 ஜூலை, 2021

வேதாந்த வாகயேஷு....

பாலு மகனிடம் கேட்டான், படிப்பு மேல மரியாதை வேணும். கிளாஸ்க்கு சட்டயை மட்டும்‌ மாத்திகிட்டு குளிக்காம போய் உக்காருவியா..?
ஏன்‌ அது ஆன்லைன் கிளாஸ்தானே..?

இருக்கட்டுமே. இதுவே உனக்கு பழக்கமா தொத்திக்கும். அப்புறம் விட‌முடியாது.இது என்ன அடம்?

கொரானா முடிஞ்சப்புறம் பழகிடுச்சி அதுனால ஆன்லைன்ல தான்‌ படிப்பேன் அப்பிடின்னு அடம் புடிப்பேனா..? அதுமாதிரி குளிக்காமல் கிளாஸ்க்கு போற பழக்கமும் விட்டுடுவேன்.

ஐ நோ வாட் ஐம்‌டூயிங்.

( ஷட் அப் அன்டு‌ மைண்ட் யுவர்‌ பிஸினஸ்!) இது அவன்‌ மைண்டு வாய்ஸ்.

கர்மயோகம் பேசுகிறது...(சுலோ.12,13,19)

"தன் பொருட்டு செயல் செய்யும்‌ மனிதர் அந்தச் செயலின் வினைப்பயனால் கட்டுண்டவராகிறார். பொது நலனுக்காக செயல் புரிபவர் அதன் வினைப்பயனால் பாதிக்கப் படுவதில்லை."

இதனால் தான் உணவு சமைத்தலைக்கூட இறைவனுக்கான நைவேத்தியமாக வைத்தும், அதிதிகளுக்கான, காக்கை, குருவிகளுக்காக வைத்தும் பகிர்ந்து உண்கிறார்‌ நம்‌மக்கள்.
அதில் கூட வினைப் பயன்‌ பந்தப்‌படுத்தி விட‌லாகாது என்று.

இதை என்‌மனதில் வாலிப காலத்திலேயே திண்டுக்கல்லில் கல்வெட்டாகச் செதுக்கிய‌ சிற்பி... தவத்திரு.ஸ்வாமி தத்வானந்த சரஸ்வதி அவர்கள்.

அதெப்படி‌ ஸ்வாமிஜி சுயநலனுக்காக செய்யும் கர்மபலன் நம்மை பீடிக்கும்...பொது நலனுக்காக செய்யப்படும்‌கர்ம‌பலன்‌நம்மை பீடிக்காது..? இதுக்கு என்ன ப்ரூஃப்?

மை டியர்..! பல்பீர் சிங் என்பவர் இந்திய‌ ராணுவத்துல 18 வயசுல வேலைக்குச் சேர்ந்தார்..டிரைனிங் முடிந்து காஷ்மீர் எல்லைல போஸ்டிங்..தினம் ரோந்து போனார் எதிரியை கண்ணில் பட்டபோது சுட்டார். டூட்டி‌ முடிந்து டென்டுக்கு வந்தால் குளிர்‌போக அசதிக்காக கொஞ்சம்‌ மது அருந்தினார். 
இப்படியாக பல வருடங்கள் சிறப்பாகப் பணி புரிந்தார். 
அவர் ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்தவுடன்..." எனக்கு ராணுவத்துல இருக்கும்‌போது பழகிப்போச்சுங்க" என்று தினம் துப்பாக்கியை எடுத்து கிட்டு பழனி‌ரோடுல போய் பத்து பேரைச்‌ சுடுவதில்லை. 
ஆனால் ராணுவத்துல இருக்கும் போது பழகிப்‌போச்சுங்க என்று தினம் மாலை மது அருந்துகிறார்.

ஏனெனில் துப்பாக்கியால் சுடுவது பொது நலனுக்காக செய்தது..மதுப்பழக்கம் சுய வசதிக்கா பழகியது.

இது போலத்தான்....ஆன்லைன் கிளாஸ்/ ஒர்க் ப்ரம் ஹோம் எல்லாம்‌பொது நலனுக்கான செயல். குளிக்காம கிளாஸ்ல உக்காருவது, பல் விளக்காம லாகின்‌ பண்ணுவது எல்லாம் சுயவசதிக்கான‌ செயல். முன்னது கர்ம‌பந்தம் ஏற்படுத்தாது. பின்னது ஒட்டிகிட்டால் விடாது.

ஹரி ஓம்.

திங்கள், 26 ஜூலை, 2021

துணுக்கு சிந்தனை@ மர்பிஸ் லா!

1.பசி என்பது சாப்பிடாததால் 
வயிற்றில் ஏற்படும் இம்சை அல்ல.
அடுத்த வேளை சாப்பிட வழியில்லாததால் மனதில் ஏற்படும் இம்சை!

2.பொதுவாக ஆன்மிகம்  என்பது 
மனம் தொடர்பானது ,
மதம் என்பது பணம் தொடர்பானது!

3.நாம் தேடும்போது கண்ணில் படாமல் மறைந்துகொள்வதில் தேடப்படும் பொருளுக்கு உள்ள திறமை அளப்பரியது!

- எப்டி நம்ம மர்பிஸ் லா?!

ஞாயிறு, 25 ஜூலை, 2021

திட்டு இலக்கியம்

வைதாலும் வைகைத் தமிழ்
கடிந்தாலும் காவிரித்தமிழ்
திட்டினாலும் தாமிரபரணித்தமிழ்.

திமுகவிலிருந்து மனக்கசப்போடு வெளியேறிய‌ கண்ணதாசன் அண்ணாத்துரை‌‌ மேல் தான் கொண்ட கோபத்தை 'படித்தால் மட்டும்‌போதுமா?' படத்தில் ஒரு வாய்ப்பு வந்த போது தீர்த்துக் கொண்டார்..

அண்ணன் காட்டிய வழியம்மா - இது
அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா - என்
கையே என்னை அடித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்
அண்ணன் காட்டிய வழியம்மா

அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்துவிட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகளை முறித்து விட்டான்
அண்ணன் காட்டிய வழியம்மா

அவனை நினைத்தே நானிருந்தேன் - அவன்
தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்
இன்னும் அவனை மறக்கவில்லை - அவன்
இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை  ..........( அண்ணன்)                                                                                          

உடனே 'சிலர்' இந்தப் பாடலை அண்ணாத்துரை அவர்களிடம் காட்டி 
வத்தி வைத்தனராம்

" திட்டினாலும் நல்ல தமிழில் தானடா திட்டியிருக்கிறான்‌ தம்பி" என்று கூறினாராம் அண்ணா.

இதைப்போல தமிழ் இலக்கியங்களில் 
திட்டு இலக்கியம் என்றே வகைப் படுத்தத்தக்க அளவில் பல பாடல்கள்‌ உண்டு.

வைணவ இலக்கியங்களில் வல்லுநர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்! 

அஷ்ட பிரபந்தங்களான திருவரங்கத்தந்தாதி, திருவரங்கத்துமாலை, திவரங்கக்கலம்பகம், திருவரங்கநாதர் ஊசல் திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி நூற்றியெட்டுத் திருப்பதி அந்தாதி எனும் பாசுரங்களைத் தமிழுக்கு அளித்தவர். 

திருவரங்கநாதன் மேல் தீராத பக்தி கொண்டவர். பாடியே திட்டினாலும் தித்திக்கும் செந்தமிழ்ப்பாடல்கள் இவை:

திரு அரங்கநாதரின் ஆசியால் அவதரித்த மறவர் குலத்தில் பெண் கேட்டு ஓர் அரசன் “திருமுகம்’ (தூதுஓலை) அனுப்புகிறான். 

வந்த தூதுவனிடம் “என்ன துணிச்சல் இருந்தால், எம் குல மங்கையைப் பெண் கேட்டுத் திருமுகம் (ஓலை) அனுப்புவான்?’ என வெகுண்டு....

"கொற்றவன் தன் திருமுகத்தைக் கொணர்ந்த தூதா!
குறை உடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்!
(அற்றவர்சேர் திருஅரங்கப் பெருமாள் தோழன்அவதரித்த திருக்குலம் என்றறியாய் போலும்!)
மற்றதுதான் திருமுகமே ஆனால் அந்தவாய், செவி, கண், மூக்கு எங்கே? மன்னர் மன்னன் பெற்ற இளவரசு ஆனால் ஆலின் கொம்பைப் பிறந்த குலத்தினுக்கு ஏற்பப் பேசுவாயே!

பொருள்:
தூதுவனே! கொற்றவனின் “திருமுகம்’ இங்கே கொண்டு வந்துவிட்டாயே! மீதியுள்ளது குறையுடல்தானே?தலையில்லாத முண்டம்தானே அங்கே இருக்கும்? அதற்கா மறக்குலக் கொம்பைப் பெண் கேட்டு வந்துள்ளாய்? 

 ஆசையற்றவர் சென்று சேரும் திருவரங்கப் பெருமாளின் தோழன் அவதரித்த குலம் இது. 
 இதை நீ அறியவில்லை போலும்.

சரி! சரி வந்துட்டே! இது இளவரசன் திருமுகம் என்றால் முகத்திலிருக்க வேண்டிய உறுப்புகளான வாயைச் செவிகளைக் கண்களை, மூக்கு எதையும் காணோமே! ஆனாலும் மன்னாதி மன்னன் பெற்ற இளவரசுதான்! ஆனால் அரசுக்கேற்றபடி ஆலமரத்தின் கொம்பைத் குலக்கொழுந்தைப் பெண் கேட்கப்போ! என அலட்சியமாகப் பதில் கூறுவதாகப் பாடல்! 

அரசும் ஆலும் கோவில்களில் இருக்குமல்லவா? அது போல என்றார். 

அரங்கபக்தனுக்கு அரசன் தூசி போன்றவன்.
விட்டாரா தூதர்? துறவிக்கு வேந்தன் துரும்பு! என்பது பழமொழியன்றோ? திருமணத் தூதராக வருவோர் சாமர்த்தியசாலிகளாகவே இருப்பதுண்டு. காரியம் ஆகணுமே! அப்படியே நின்றார்! வந்த வேளை சரியில்லையோ? நொந்த நெஞ்சோடு திரும்பலாமோ? கெஞ்சுவதுபோலத் தன் பார்வையைச் செலுத்தினார். 

“என்ன நிற்கிறாய்! வா! வா! வந்து பார்த்துச் செல்! பார்த்ததை உங்கள் அரசனிடம் சேர்த்துச் சொல்! எங்கள் குலக்கொழுந்தைப் பெண் கேட்டு வந்தவங்க நிலைமையினை மாளிகை முழுவதிலும் வந்து பார்த்துச் செல்!’ என அழைத்துக் கூறிய காட்சி:

பேசவந்த தூத! செல்லரித்த ஓலை செல்லுமோ?
பெருவரங்கள் அருள்அரங்கர் பிள்ளைகேள்வர் தாளியே
பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம்வைத்து முன்னமே
பட்டமன்னர் பட்டதெங்கள் பதிபுகுந்து பாரடா!
வாசலுக்கு இடும்படல் கவித்து வந்த கவிகையே!
மகுடகோடி தினை அளக்க வைத்த காலும்நாழியும்
வீசுசாமரம் குடில் தொடுத்த கற்றை சுற்றிலும்
வேலிஇட்டது அவர்கள்இட்ட வில்லும் வாளும் வேலுமே!

பொருள்: திருமணம் பேச வந்துள்ள தூதுவனே! ஓலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதுவது அஞ்சல்! அது செல்லரித்து போல் புள்ளிப்புள்ளியாகத் தோன்றும்! கேலி பேசுவது போல இந்த செல்லரித்த ஓலையைக் கொண்டு வந்திருக்கிறாயே? இது செல்லுமோ? செல்லாத ஓலையாச்சுதேயடா? பெரிய பெரிய வரங்களை எல்லாம் வழங்கி அருள் தரும் திரு அரங்கநாதர் மேல் பக்தி மிகுந்த பாசம் கொண்ட குலப் பெண்ணை விரும்பி முன்பு வந்து பெண்கேட்ட பட்டத்து இளவரசர்கள், பட்டபாட்டை எங்கள் மாளிகையில் புகுந்து வந்த பாரடா! அங்கே நுழைவாசலுக்குப் படல்வேலியாக இட்டிருப்பது வந்தவர்களின் மகுடங்களே! நாட்டுப்புறங்களில் வேலிகளில் பானைகளைக் கவிழ்த்து வைப்பதுண்டு! அது போலவே நாங்கள் மகுடங்களைக் கவிழ்த்து வைத்துள்ளோம் அவர்கள் சூடியிருந்த கிரீடங்களை, விளைந்து வந்துள்ள தினைகளை அளக்க உதவும் மரக்கால்களாகவும், நாழியாகவும் பயன்படுத்துகிறோம். அவர்களின் கிரீடங்களில் சூடி இருந்த கற்றை முடிகளைக் கைப்பற்றி எங்களின் சாமரமாக்கியுள்ளோம், விசிறிபோல் வீசுவதற்கு! மாளிகையைச் சுற்றிலும் வேலிபோல ஊன்றி வைத்திருப்பது அவர்கள் கொண்டு வந்து வில்லும், வாளும் வேலும்தான்! ஆழ்ந்த பக்தியால் அடைந்த வீரம் இது!

திட்டினாலும் தித்திக்கின்றதல்லவா? அதுதான் தமிழ் இலக்கியங்களின் பெருமை!

பி.கு: கடிதத்துக்கு வடமொழியில் ஸ்ரீமுகம் என்பர். அது தற்பவமாக திருமுகம்‌ என்று தமிழில் வரும்.

இந்தப்பாடல் எனக்கு எட்டாம் வகுப்பு தமிழில் செய்யுள்‌பகுதியில் வரும். ஆனால் மேலே அடைப்பபுக்குள் இருக்கும் வரிகள் ஏனோ பாட‌ புத்தகத்தில்  வெட்டியிருந்தார்கள்.

சனி, 24 ஜூலை, 2021

பின்தொடரும் குறளின்‌ நிழல்

பின்தொடரும் குறளின்‌ நிழல்.

ஒரு இலக்கியக் கட்டுரை எழுதலாமே..!என்று நண்பர் இரமணி‌ முருகேஷ் தூண்டினார்.
நான்‌ கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை ரகம். ஆதலால் சற்றே மிரண்டேன்.
சரி! ஆபத் பாந்தவன் ஐயன்‌ திருவள்ளுவர் துணை என்று ஆரம்பித்துவிட்டேன்.
சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக‌ என்று‌ பொருளுரைக்கிறார்‌ திரு.சாலமன் பாப்பையா.
என்னை வழி நடத்தும்  ஆச்சர்யகரமான சில திருக்குறள்களை இங்கு பகிர்கிறேன்.

எங்காவது பேருந்தில், வணிக இதழ்களில், கதைகளில், கட்டுரைகளின் ஊடே படித்த குறள்கள் தான் சிந்தையில் சிலாசாஸனமாக அமர்ந்து விடுகிறது. அதற்கு அந்தந்த தருணங்களின் வாழ்வியல் நெருக்கடிகளே காரணம்.

1.அகலாது அணுகாது தீக்காய்வார்‌ போல்க இகல் வேந்தர் சேர்ந்தொழுகுவார்.
ஆச்சர்ய‌கரமான திருக்குறள் என்று சுஜாதா இக்குறளை ஒரு‌முறை சிலாகித்துள்ளார். மன்னரைச் சேர்ந்து ஒழுகுபவருக்குக் கூறப்பட்டதாயினும் நம்முடைய பணக்கார உறவினர், அலுவலக உயரதிகாரி, உள்ளூர் அரசியல்வாதி எ‌ன்று‌ பலரிடம் பழகுவதற்கும் இந்தக் குறள் தான் கை விளக்கு.
காமத்துப்பாலில் கூட இதே ஜாடையில் இன்னொரு‌ குறளை எழுதியுள்ளார்.

நீங்கின் தெறூஉம்! குறுகுங்கால் தண்ணெனும்!
தீ யாண்டுப் பெற்றாள் இவள்?
(புணர்ச்சி மகிழ்தல்: 1104)
“இவளை நீங்கினால் சுடும் நெருங்கினால் தண்ணென்று குளிரும், இத்தகைய தீயை எங்கே பெற்றாள் இவள்?” என்று வழக்கமான தீக்கு எதிர்மாறாக இருக்கும் காதல்தீயைப் பற்றி கூறுகிறார்.
இங்கும் அகலாது அணுகாது தீக்காய வேண்டுமல்லவா?!
2. நாஞ்சில் நாடன் அவர்களின் ஒரு படைப்பில் திடுமென ஒரு குறள் முகிழ்த்தது. அந்த காலகட்டத்தில் நான் வியாபார‌ சிக்கல்களில் திணறி சமூகத்தின் கண்களில் தோல்வியுற்ற மனிதனாக அறியப்பட்டுக் குமைந்திருந்தேன்.
இருவேறு உலகத்தியற்கை திருவேறு தெள்ளியராதல் வேறு.
இந்த அபார வரிகளைப் படித்ததும் புத்தகத்தை மூடி வைத்து கண்மூடிய நான் மனதில் கற்றளியாய் உறுதியுற்றேன்.
3.இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக்கடை 
வாழ்வின் சுக,துக்கங்களில் தயக்க,மயக்கங்களில், குழப்பம், விழுப்பங்களில் காற்றுப் போய்விடாமல் ஆணை காத்து உடன் நிற்கும் யாதுமாகி நின்ற மனைவியின்  மாண்பை விளக்கும் இக்குறளே தான், "என்‌ வேரென‌ நீயிருந்தாய் அதில் நான்‌ வீழ்ந்து விடாதிருந்தேன்..." என்று‌ கண்ணதாசன்‌ வேறு‌‌ வரியில் பாடியது .
3.வாழ்வின் உற்சாக இளமைகளில் உலகை விலைபேசி, உயர் மலைச் சிகரத்தை அடைய வேண்டி, உழைப்பையும் ஆசையையும் காலத்தையும் ஹவிஸாக இட்டு அணுகும் போது அடி சறுக்கி அடி வயிற்றிலிருந்து, "ஏன்‌ எனக்கு மட்டும்?" என்று அரற்றுவோமே.. அப்போது தலை வருடி ஆறுதல் சொல்வார்..
 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி நூல் தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
4. மீண்டெழுந்து தவறுகளில் பாடம் கற்று, கவனம் கூடி, பலவீனம்‌ அறிந்து 
'வல்லான் அறிந்துளன்' என்றுணர்ந்து வழியறிந்து முயலும் போது செவியருகில் வந்து அறிவுறுத்துவார்..
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை
இன்றைய நிர்வாகவியலின் தாரகமந்திரமே..இது தான்.
5. எதிரதாக் காக்கும் அறிவினோர்க்கில்லை அதிர வருவதோர் நோய். தொழிற்சாலைகளில் , preventive maintenance  என்ற உத்தியை கடந்த 200 ஆண்டுகளாகத்தான் சொல்கிறோம்‌.
Prevention is better than cure என்ற வரிகளும் தராத அதிர்ச்சி‌ மதிப்பை 2000 வருட பழைய‌குரல் ஒன்று‌ ஒலிக்கையில்..சும்மா..அதிருதுல்ல!

6.நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிருந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகிவிடும்.
தன் எல்லை அறிதல் ( understanding limitation) என்பது நடுவயதில் நமக்குத் தேவையான ஒரு தெளிவு. நம் திறன், சூழல், எதிர்காலம் என்று எல்லாவற்றின் எல்லையும் இந்நேரம் அனுபவத்தில் பிடிபட்டிருக்கும். இந்நிலையில் நாம்‌ அடுத்த கட்ட‌ முயற்சியை ஆய்ந்து துவங்க வேண்டும் என்பதையே நுனிக்கொம்பில் ஏறியவர் அங்கிருந்து மேலும் ஏற.முயற்சித்தால் உயிர்க்கு இறுதி ஆகிவிடும்‌ என்று‌ வள்ளுவப் பெருந்தகை எச்சரிக்கிறார்.

7.எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு.
வாழ்வின் இன்பம், லட்சியம் பணம் எல்லாம் அவரவர் தகுதி, வினைப்பயன் படி அடைந்து தெளிந்த காலை உடன் வாழும் சுற்றத்தார்,பிறர்‌ எல்லாம் எவ்வது உறைகிறார்களோ அவ்வது நாமும் உறைதல் ( மிகினும்‌ குறையினும்‌ நோய்‌ செய்யும் ) வாழ்க்கையை உற்றம் உறவோடு உரசலின்றி அமைதியாக வாழ வழிதரும்.
8.யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இல
உதடுகள் ஒட்டாத திருக்குறள் என்பதனால் பள்ளி காலத்தில் இக்குறள் மீது ஆர்வமானேன். ஆனால் என்ன அற்புதம்‌ பாருங்கள்! தகாத பொருள் மீது பற்று என்பது உதட்டளவில் கூட‌ இருக்கக் கூடாது என்று நிறைமொழியாக எழுதி தமிழ் மறை ஆகி நின்ற குறள் இது.
9.கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
சினிமாக் கொட்டகையில் கூட்டம் ஒவ்வொருவராக மெல்லச் சேரும் ஆனால் படம்‌ முடிந்ததும் மொத்த கூட்டமும் உடனடியாக கலைந்து போகும். அதுபோல் தான்‌ செல்வமும் என்கிறார் பாருங்கள். அதனால் தான்‌  செல்வம், "நாம் செல்வம்"  ( தன்மை பன்மை வினை‌‌ முற்று) என்று‌ போய் விடுகிறதோ..?? 

10.சினத்தைப் பொருள் எனக்கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கை பிழையாதற்று
இந்த அற்புதமான‌ உவமை பயின்ற குறளை பயின்றிருந்தால் ( படித்திருந்தால் அல்ல) கோபம்‌‌ வரும் போது காப்பாகச் செயல் பட்டு பாரிய‌ இழப்புகளைத் தவிர்க்கலாம்.
ஜெய‌மோகன் விளக்க உரை எழுதியுள்ளார்‌ இவ்வாறு.
‘சினத்தை தன் வலிமை என்று எண்ணுபவன் நிலத்தில் கையால் அறைந்துகொள்பவன் போன்றவன்’ பாறையின் முட்டிக்கொள்பவன் என்று நம் நாட்டார் வாய்மொழி. எளிமையால் ஒரு பழமொழியின் கவித்துவத்தை அடையும் இக்குறளுக்கு மேலதிக நுண்பொருள் ஒன்றும் உண்டு. நிலம் என்பது பொறுமையின் அடையாளமாகச் சொல்லப்படுவது. அகழ்வாரையும் தாங்குவது, தன்னை அறைபவனையும் கூடத்தான்! சினத்தின் பொறுமையின்மைக்கு எதிராக பொறுமையின் அலகிலா வல்லமையை நிறுத்துகிறது இக்குறள். 
பதினெண் கவனகர் ஐயா கனக சுப்பு‌ரத்தினம் கூறுவார்‌, 'ஒவ்வொரு‌ குறளிலும் வெளிப்படையான‌ ஒரு‌ பொருளும், இலக்கிய‌த் தளத்தில் ஒரு‌ பொருளும், ஆன்மீகத் தளத்தில் ஒரு‌ பொருளும்‌ ஆக மூன்று‌ விதமாகப் பொருள் கொள்ள இடம் உள்ளது'என்று.

11.பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார் மற் றாதல் அரிது.
நம்பிக்கையின் உச்ச பட்ச பலத்தை அளித்து இழப்பாலோ, ஆசையாலோ, வறுமையாலோ தவறான பாதைக்குச்‌‌ செல்லாமல் தடுத்தாட் கொள்ளும்‌ குறள். "அருளற்றார்‌ அற்றார்", என்று‌ சொல்வதோடு நிறுத்தி விட வில்லை..மற்றாதல் அரிது ( மீண்டு‌ எழுவது இயலாது) என்கிறார்.
நம்‌ தொலைக் காட்சி சோப்பு விளம்பரங்களில், "அழுக்கைப்‌ போக்கும்‌ மீண்டும் வராமல் தடுக்கும்" என்று‌ அழுத்தந் திருத்தமாக‌ சொல்லப்படுவது போல மனதில் பதிய வைக்கும் உத்தி! "அருளற்றார்‌ அற்றார், மற்றாதல் அரிது" 

12.தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
நம் வாழ்க்கைக்கு பின்னர் மட்டுமல்ல  செய்த பணி ஓய்வின்‌ பின்னும் எழுதிய‌ கட்டுரையினைப் படித்து முடித்த பின்னும்!

சனி, 3 ஜூலை, 2021

துன்பம்‌ துய்த்தல்

" இப்போது எனக்கிருக்கும் துன்பங்களை எல்லாம் நீக்கிவிடு; இனி‌ நான் என்வாழ்வை சரியாக அமைத்துக் கொள்கிறேன்‌" என்பதே பலரின்‌ பிரார்த்தனையாக இருக்கிறது என்பார்‌ சுந்தர ராமசாமி.

" இன்பமும் துன்பமும் பூமியின்‌ மிசை‌ யார்க்கும்‌ வருவது கண்டனம்..." என்ற‌ பாரதி தான்.."துன்பக் கேணி" என்ற ஒரு சொல்லை தமிழுக்குத் தந்தவன்.

" துன்பம்‌ நேர்கையில யாழெடுத்து நீ
 இன்பம்‌ சேர்க்க மாட்டாயா....." என்று‌ இறைஞ்சுகிறார்‌ பாரதி தாசன்.

"துன்புளதெனின் அன்றோ சுகமுளது?"
என்று‌ கம்பநாட்டாழ்வார் கேட்கிறார்..

"கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது" என்றார்‌ வள்ளுவப் பெருந்தகை.

அதுபோல மனம் கலங்க வைக்கும்  துன்பம் வாழ்க்கையில் செம்பாகம் அன்று பெரிது...என்று உணர்கிறோம்‌ நாம்.
துன்பங்கள்‌ வாழ்வின் ஒரு செம்பாதி.

நிகழ் காலத்தை யாருமே பொற்காலம் என்று சொல்வதில்லை..
இது வரலாற்றுக் காலத்திற்கும் முந்திய உண்மை.

" நாம சந்தோஷமா இருக்கும்‌போது அது நமக்குத் தெரியறதில்லை.." என்று விருமாண்டியில் ஒரு வசனம் வரும்.

யோசித்தால் நாம் சந்தோஷமாக இருந்த தருணங்களை நினைவில் வைக்கத் தவறி விடுகிறோம்.

அதனால் தான்‌ பலர் வாழ்வில் பெரும் கஷ்டங்கள் வந்த போது முன்பு மகிழ்ச்சியாக வாழ்ந்த வீட்டிற்கோ..ஊருக்கோ..தெருவுக்கோ திரும்பக் குடி‌போகிறார்கள்.

ஆனால் அதன் பயனின்மையை பிறகு உணர்கிறார்கள்.
டைவர்ஸ் செய்த இணையுடன் திரும்ப இணைந்து கொள்வதும் பல இடங்களில் நடக்கிறது.

ஆசையே துன்பத்திறாகு காரணம் என்பதெல்லாம் சரிதான்..
" ஆசை பற்றி அறையலுற்ற..' தால் தான்‌ ஒரு‌ கம்ப ராமாயணம் தமிழுக்கு அணிகலனாகக் கிடைத்தது.

மகிழ்வின்‌போது 'மனம்' அங்கு இருப்பதில்லை..
துயரத்தில் மனம் அவ்விடத்தை விட்டு விலகுவதில்லை.

நரகம்‌ என்றால் என்ன ? என்று‌கேட்டதற்கு ஒரு‌ ஞானி‌ கூறினாராம்....
" துன்பம்‌, முடிந்து விடுவது போல போக்கு காட்டி விட்டுத் தொடர்வது..." என்று.

ஒரு‌ முறை‌ நான் மிகுந்த வியாபார, வழக்கு, பண கஷ்டங்களில் இருந்த போது..தினம் தினம் புதுப்புது பிரச்னைகளாக வரும்.

ஆவை எதுவும் புதியது அல்ல முன்பே நிகழ்ந்த பிரச்னைகள் வெளி‌வரும். இந்த துன்பத்தினை துய்த்து கர்மாவைக் கரைப்போம் என்று‌ மனதுக்கு ஊக்கம்‌ சொல்லித் தாஜா செய்து நாட்களை கடத்தி வந்தேன்.
துன்பங்கள்‌ நேர்வது மலையிலிருந்து பாறை உருண்டு கீழே விழுவது போல. அதனை சரி செய்வது விழுந்த பாறையை மீண்டும் மலைக்கு ஏற்றுவது போல.

இந்த அனுபவங்களில் நான்‌ கற்ற பாடம்.

எல்லா துன்பங்களும் ஒரே நாளில்/ முயற்சியில்  தீராது.
எல்லா துன்பங்களும் முற்றாகத் தீராது.
தொடர்‌ முயற்சி பிரார்த்தனை தேவை.

இந்த கஷ்டங்கள் துயரங்கள் இல்லாத மனிதனே இல்லை என்று உணர்.
ஏனெனில்,

நெஞ்சே.... துன்பத்தின் தாயல்லவா.. ?
( அதை விட்டு எங்கும் தப்பிக்க முடியாது.)
(கவியரசர்.)

வெள்ளி, 2 ஜூலை, 2021

சீன‌யுத்தம்- காமடி

எங்கள் தாத்தா அனுமார் ஸ்லோகம் சொன்னபோது கிணற்றில் சரசர வென்று 
இறங்கிய பேய்களும், 
நள்ளிரவில் போகும் நபர்களிடம் சுண்ணாம்பு கேட்ட 
பனையடி கருப்பும்,
சைக்கிள் பின்னால் ஏறி 
கனத்தை அதிகரித்து 
ரத்தம் கக்கப் பண்ணும் 
வாய்க்கால் முனியும்,
எருக்கம் புதரினின்று வெளிப்பட்டு 
இரத்தம் கேட்கும்
காட்டேரியும்,
மரம் வெட்டி,மேடுறுத்தி 
துண்டம் போட்ட சைட்டை விட்டு ...
பஞ்சம் பிழைக்க எங்கே போச்சோ?

கவிதை

எங்கள் தாத்தா அனுமார் ஸ்லோகம் சொன்னபோது கிணற்றில் சரசர வென்று 
இறங்கிய பேய்களும், 
நள்ளிரவில் போகும் நபர்களிடம் சுண்ணாம்பு கேட்ட 
பனையடி கருப்பும்,
சைக்கிள் பின்னால் ஏறி 
கனத்தை அதிகரித்து 
ரத்தம் கக்கப் பண்ணும் 
வாய்க்கால் முனியும்,
எருக்கம் புதரினின்று வெளிப்பட்டு 
இரத்தம் கேட்கும்
காட்டேரியும்,
மரம் வெட்டி,மேடுறுத்தி 
துண்டம் போட்ட சைட்டை விட்டு ...
பஞ்சம் பிழைக்க எங்கே போச்சோ?