பின்தொடரும் குறளின் நிழல்.
ஒரு இலக்கியக் கட்டுரை எழுதலாமே..!என்று நண்பர் இரமணி முருகேஷ் தூண்டினார்.
நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை ரகம். ஆதலால் சற்றே மிரண்டேன்.
சரி! ஆபத் பாந்தவன் ஐயன் திருவள்ளுவர் துணை என்று ஆரம்பித்துவிட்டேன்.
சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக என்று பொருளுரைக்கிறார் திரு.சாலமன் பாப்பையா.
என்னை வழி நடத்தும் ஆச்சர்யகரமான சில திருக்குறள்களை இங்கு பகிர்கிறேன்.
எங்காவது பேருந்தில், வணிக இதழ்களில், கதைகளில், கட்டுரைகளின் ஊடே படித்த குறள்கள் தான் சிந்தையில் சிலாசாஸனமாக அமர்ந்து விடுகிறது. அதற்கு அந்தந்த தருணங்களின் வாழ்வியல் நெருக்கடிகளே காரணம்.
1.அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல் வேந்தர் சேர்ந்தொழுகுவார்.
ஆச்சர்யகரமான திருக்குறள் என்று சுஜாதா இக்குறளை ஒருமுறை சிலாகித்துள்ளார். மன்னரைச் சேர்ந்து ஒழுகுபவருக்குக் கூறப்பட்டதாயினும் நம்முடைய பணக்கார உறவினர், அலுவலக உயரதிகாரி, உள்ளூர் அரசியல்வாதி என்று பலரிடம் பழகுவதற்கும் இந்தக் குறள் தான் கை விளக்கு.
காமத்துப்பாலில் கூட இதே ஜாடையில் இன்னொரு குறளை எழுதியுள்ளார்.
நீங்கின் தெறூஉம்! குறுகுங்கால் தண்ணெனும்!
தீ யாண்டுப் பெற்றாள் இவள்?
(புணர்ச்சி மகிழ்தல்: 1104)
“இவளை நீங்கினால் சுடும் நெருங்கினால் தண்ணென்று குளிரும், இத்தகைய தீயை எங்கே பெற்றாள் இவள்?” என்று வழக்கமான தீக்கு எதிர்மாறாக இருக்கும் காதல்தீயைப் பற்றி கூறுகிறார்.
இங்கும் அகலாது அணுகாது தீக்காய வேண்டுமல்லவா?!
2. நாஞ்சில் நாடன் அவர்களின் ஒரு படைப்பில் திடுமென ஒரு குறள் முகிழ்த்தது. அந்த காலகட்டத்தில் நான் வியாபார சிக்கல்களில் திணறி சமூகத்தின் கண்களில் தோல்வியுற்ற மனிதனாக அறியப்பட்டுக் குமைந்திருந்தேன்.
இருவேறு உலகத்தியற்கை திருவேறு தெள்ளியராதல் வேறு.
இந்த அபார வரிகளைப் படித்ததும் புத்தகத்தை மூடி வைத்து கண்மூடிய நான் மனதில் கற்றளியாய் உறுதியுற்றேன்.
3.இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக்கடை
வாழ்வின் சுக,துக்கங்களில் தயக்க,மயக்கங்களில், குழப்பம், விழுப்பங்களில் காற்றுப் போய்விடாமல் ஆணை காத்து உடன் நிற்கும் யாதுமாகி நின்ற மனைவியின் மாண்பை விளக்கும் இக்குறளே தான், "என் வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்..." என்று கண்ணதாசன் வேறு வரியில் பாடியது .
3.வாழ்வின் உற்சாக இளமைகளில் உலகை விலைபேசி, உயர் மலைச் சிகரத்தை அடைய வேண்டி, உழைப்பையும் ஆசையையும் காலத்தையும் ஹவிஸாக இட்டு அணுகும் போது அடி சறுக்கி அடி வயிற்றிலிருந்து, "ஏன் எனக்கு மட்டும்?" என்று அரற்றுவோமே.. அப்போது தலை வருடி ஆறுதல் சொல்வார்..
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி நூல் தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
4. மீண்டெழுந்து தவறுகளில் பாடம் கற்று, கவனம் கூடி, பலவீனம் அறிந்து
'வல்லான் அறிந்துளன்' என்றுணர்ந்து வழியறிந்து முயலும் போது செவியருகில் வந்து அறிவுறுத்துவார்..
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை
இன்றைய நிர்வாகவியலின் தாரகமந்திரமே..இது தான்.
5. எதிரதாக் காக்கும் அறிவினோர்க்கில்லை அதிர வருவதோர் நோய். தொழிற்சாலைகளில் , preventive maintenance என்ற உத்தியை கடந்த 200 ஆண்டுகளாகத்தான் சொல்கிறோம்.
Prevention is better than cure என்ற வரிகளும் தராத அதிர்ச்சி மதிப்பை 2000 வருட பழையகுரல் ஒன்று ஒலிக்கையில்..சும்மா..அதிருதுல்ல!
6.நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிருந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகிவிடும்.
தன் எல்லை அறிதல் ( understanding limitation) என்பது நடுவயதில் நமக்குத் தேவையான ஒரு தெளிவு. நம் திறன், சூழல், எதிர்காலம் என்று எல்லாவற்றின் எல்லையும் இந்நேரம் அனுபவத்தில் பிடிபட்டிருக்கும். இந்நிலையில் நாம் அடுத்த கட்ட முயற்சியை ஆய்ந்து துவங்க வேண்டும் என்பதையே நுனிக்கொம்பில் ஏறியவர் அங்கிருந்து மேலும் ஏற.முயற்சித்தால் உயிர்க்கு இறுதி ஆகிவிடும் என்று வள்ளுவப் பெருந்தகை எச்சரிக்கிறார்.
7.எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு.
வாழ்வின் இன்பம், லட்சியம் பணம் எல்லாம் அவரவர் தகுதி, வினைப்பயன் படி அடைந்து தெளிந்த காலை உடன் வாழும் சுற்றத்தார்,பிறர் எல்லாம் எவ்வது உறைகிறார்களோ அவ்வது நாமும் உறைதல் ( மிகினும் குறையினும் நோய் செய்யும் ) வாழ்க்கையை உற்றம் உறவோடு உரசலின்றி அமைதியாக வாழ வழிதரும்.
8.யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இல
உதடுகள் ஒட்டாத திருக்குறள் என்பதனால் பள்ளி காலத்தில் இக்குறள் மீது ஆர்வமானேன். ஆனால் என்ன அற்புதம் பாருங்கள்! தகாத பொருள் மீது பற்று என்பது உதட்டளவில் கூட இருக்கக் கூடாது என்று நிறைமொழியாக எழுதி தமிழ் மறை ஆகி நின்ற குறள் இது.
9.கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
சினிமாக் கொட்டகையில் கூட்டம் ஒவ்வொருவராக மெல்லச் சேரும் ஆனால் படம் முடிந்ததும் மொத்த கூட்டமும் உடனடியாக கலைந்து போகும். அதுபோல் தான் செல்வமும் என்கிறார் பாருங்கள். அதனால் தான் செல்வம், "நாம் செல்வம்" ( தன்மை பன்மை வினை முற்று) என்று போய் விடுகிறதோ..??
10.சினத்தைப் பொருள் எனக்கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கை பிழையாதற்று
இந்த அற்புதமான உவமை பயின்ற குறளை பயின்றிருந்தால் ( படித்திருந்தால் அல்ல) கோபம் வரும் போது காப்பாகச் செயல் பட்டு பாரிய இழப்புகளைத் தவிர்க்கலாம்.
ஜெயமோகன் விளக்க உரை எழுதியுள்ளார் இவ்வாறு.
‘சினத்தை தன் வலிமை என்று எண்ணுபவன் நிலத்தில் கையால் அறைந்துகொள்பவன் போன்றவன்’ பாறையின் முட்டிக்கொள்பவன் என்று நம் நாட்டார் வாய்மொழி. எளிமையால் ஒரு பழமொழியின் கவித்துவத்தை அடையும் இக்குறளுக்கு மேலதிக நுண்பொருள் ஒன்றும் உண்டு. நிலம் என்பது பொறுமையின் அடையாளமாகச் சொல்லப்படுவது. அகழ்வாரையும் தாங்குவது, தன்னை அறைபவனையும் கூடத்தான்! சினத்தின் பொறுமையின்மைக்கு எதிராக பொறுமையின் அலகிலா வல்லமையை நிறுத்துகிறது இக்குறள்.
பதினெண் கவனகர் ஐயா கனக சுப்புரத்தினம் கூறுவார், 'ஒவ்வொரு குறளிலும் வெளிப்படையான ஒரு பொருளும், இலக்கியத் தளத்தில் ஒரு பொருளும், ஆன்மீகத் தளத்தில் ஒரு பொருளும் ஆக மூன்று விதமாகப் பொருள் கொள்ள இடம் உள்ளது'என்று.
11.பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார் மற் றாதல் அரிது.
நம்பிக்கையின் உச்ச பட்ச பலத்தை அளித்து இழப்பாலோ, ஆசையாலோ, வறுமையாலோ தவறான பாதைக்குச் செல்லாமல் தடுத்தாட் கொள்ளும் குறள். "அருளற்றார் அற்றார்", என்று சொல்வதோடு நிறுத்தி விட வில்லை..மற்றாதல் அரிது ( மீண்டு எழுவது இயலாது) என்கிறார்.
நம் தொலைக் காட்சி சோப்பு விளம்பரங்களில், "அழுக்கைப் போக்கும் மீண்டும் வராமல் தடுக்கும்" என்று அழுத்தந் திருத்தமாக சொல்லப்படுவது போல மனதில் பதிய வைக்கும் உத்தி! "அருளற்றார் அற்றார், மற்றாதல் அரிது"
12.தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
நம் வாழ்க்கைக்கு பின்னர் மட்டுமல்ல செய்த பணி ஓய்வின் பின்னும் எழுதிய கட்டுரையினைப் படித்து முடித்த பின்னும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக