செவ்வாய், 27 ஜூலை, 2021

வேதாந்த வாகயேஷு....

பாலு மகனிடம் கேட்டான், படிப்பு மேல மரியாதை வேணும். கிளாஸ்க்கு சட்டயை மட்டும்‌ மாத்திகிட்டு குளிக்காம போய் உக்காருவியா..?
ஏன்‌ அது ஆன்லைன் கிளாஸ்தானே..?

இருக்கட்டுமே. இதுவே உனக்கு பழக்கமா தொத்திக்கும். அப்புறம் விட‌முடியாது.இது என்ன அடம்?

கொரானா முடிஞ்சப்புறம் பழகிடுச்சி அதுனால ஆன்லைன்ல தான்‌ படிப்பேன் அப்பிடின்னு அடம் புடிப்பேனா..? அதுமாதிரி குளிக்காமல் கிளாஸ்க்கு போற பழக்கமும் விட்டுடுவேன்.

ஐ நோ வாட் ஐம்‌டூயிங்.

( ஷட் அப் அன்டு‌ மைண்ட் யுவர்‌ பிஸினஸ்!) இது அவன்‌ மைண்டு வாய்ஸ்.

கர்மயோகம் பேசுகிறது...(சுலோ.12,13,19)

"தன் பொருட்டு செயல் செய்யும்‌ மனிதர் அந்தச் செயலின் வினைப்பயனால் கட்டுண்டவராகிறார். பொது நலனுக்காக செயல் புரிபவர் அதன் வினைப்பயனால் பாதிக்கப் படுவதில்லை."

இதனால் தான் உணவு சமைத்தலைக்கூட இறைவனுக்கான நைவேத்தியமாக வைத்தும், அதிதிகளுக்கான, காக்கை, குருவிகளுக்காக வைத்தும் பகிர்ந்து உண்கிறார்‌ நம்‌மக்கள்.
அதில் கூட வினைப் பயன்‌ பந்தப்‌படுத்தி விட‌லாகாது என்று.

இதை என்‌மனதில் வாலிப காலத்திலேயே திண்டுக்கல்லில் கல்வெட்டாகச் செதுக்கிய‌ சிற்பி... தவத்திரு.ஸ்வாமி தத்வானந்த சரஸ்வதி அவர்கள்.

அதெப்படி‌ ஸ்வாமிஜி சுயநலனுக்காக செய்யும் கர்மபலன் நம்மை பீடிக்கும்...பொது நலனுக்காக செய்யப்படும்‌கர்ம‌பலன்‌நம்மை பீடிக்காது..? இதுக்கு என்ன ப்ரூஃப்?

மை டியர்..! பல்பீர் சிங் என்பவர் இந்திய‌ ராணுவத்துல 18 வயசுல வேலைக்குச் சேர்ந்தார்..டிரைனிங் முடிந்து காஷ்மீர் எல்லைல போஸ்டிங்..தினம் ரோந்து போனார் எதிரியை கண்ணில் பட்டபோது சுட்டார். டூட்டி‌ முடிந்து டென்டுக்கு வந்தால் குளிர்‌போக அசதிக்காக கொஞ்சம்‌ மது அருந்தினார். 
இப்படியாக பல வருடங்கள் சிறப்பாகப் பணி புரிந்தார். 
அவர் ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்தவுடன்..." எனக்கு ராணுவத்துல இருக்கும்‌போது பழகிப்போச்சுங்க" என்று தினம் துப்பாக்கியை எடுத்து கிட்டு பழனி‌ரோடுல போய் பத்து பேரைச்‌ சுடுவதில்லை. 
ஆனால் ராணுவத்துல இருக்கும் போது பழகிப்‌போச்சுங்க என்று தினம் மாலை மது அருந்துகிறார்.

ஏனெனில் துப்பாக்கியால் சுடுவது பொது நலனுக்காக செய்தது..மதுப்பழக்கம் சுய வசதிக்கா பழகியது.

இது போலத்தான்....ஆன்லைன் கிளாஸ்/ ஒர்க் ப்ரம் ஹோம் எல்லாம்‌பொது நலனுக்கான செயல். குளிக்காம கிளாஸ்ல உக்காருவது, பல் விளக்காம லாகின்‌ பண்ணுவது எல்லாம் சுயவசதிக்கான‌ செயல். முன்னது கர்ம‌பந்தம் ஏற்படுத்தாது. பின்னது ஒட்டிகிட்டால் விடாது.

ஹரி ஓம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக