எனக்குப் பிடித்தமான அகத்திக்கீரை வாங்கிவந்தேன்.
'இன்று அமாவாசை எனவே பசுவிற்கு தந்துவிடுங்கள்!' என மனைவியார் உத்திரவு.
( சோணமுத்தா போச்சா..!)
சரி சாசனத்தை செயல் படுத்துவோம் என்று அகத்திக் கீரையை கையில் எடுத்துக் கொண்டு தருமமிகு கோவையில் 'ஆகாத்தோம்பி ஆப்பயன் அளிக்கும்' கோவளர்ப்போர் வீடு சென்று தந்தால், 'இதெல்லாம் தர்ரதில்லீங்..எஸ்கேஎம் தீவனம் தானுங்..' என அன்புடன் மறுத்து விட்டனர்.
இப்ப இந்த அகத்திக்கீரை என்னிடம்...
வெள்ளிவீதியார் குறுந்தொகையில் சொல்வது போல," கன்றுமுண்ணாது, கலத்திலும் படாது..."
இப்ப இந்த அகத்திக் கீரைய என்ன செய்யலாம் பிரண்ட்ச்?!
இது வரை நான்...
இனி பாடலும், உரைகளும்.
27.பாலை – தலைவி கூற்று
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே
[வெள்ளிவீதியார்]
யாருக்கும் பயனில்லை
கன்றும் உண்ணாமல் கறக்வும் கறக்காமல்
நிலத்தில் வழியும் பசுவின் பால் போல
எனக்கும் இல்லாமல்
என் தலைவனுக்கும் உதவாமல்
என் அழகு வீணாகிறது.
நன்றி : எழுத்தாளர் சுஜாதா (Book : 401 காதல் கவிதைகள் -குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்,உயிர்மை பதிப்பகம்)
எனது சுதந்திர மொழி பெயர்ப்பின் வழியே,
கன்றும் உண்ணாமல், கலத்திலும் சேராமல் ,
நற்பசுவின் தீம்பாலை [ கன்று ஈன்ற உடனே, பசு உகுக்கும் முதல் பாலை என் ஊரில் தீம்பால், அல்லது சீம்பால் என்கின்றனர்] நிலம் உண்பது போல,
எனக்கும் ஆகாமல், என் ஐ க்கும் உதவாமல்,
பசலை உண்டு அழிக்கிறது,
திதலை அல்குல் கொண்ட என் மேனி எழிலை.
கடலூர் சீனு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக