வெள்ளி, 18 நவம்பர், 2022

நினைப்பும், மறப்பும்.

#கந்தர்_அனுபூதி

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
- வள்ளுவப்பெருந்தகை. 

ஒளி பொருந்திய கண்களை உடைய இவளின் குணத்தை நான் நினைப்பதே இல்லை...ஏனெனில் மறந்தும் கூட‌ மறப்பதில்லை...என்கிறான் தலைவன்.

கங்கை அமரன் இதையே எழுதுகிறார்..," மறந்தால் தானே நினைக்கணும் மாமா நினைவில் நீங்காமல் நீதானே..." என்று.

நினைப்பு, மறப்பென்னும் மனதின் ஆதாரமான இருசெயல்கள் ஒன்றை ஒன்று‌ சார்ந்துள்ளது. மனம்‌ என்பதே எண்ணங்களின்‌ தொகுப்பு தானே..? இவ்விரு‌ பைனரி நிலைகளும் மனித வாழ்வின் அலைகழிப்புக்கு ஆதார‌ காரணம்.

அதனால்தான் கவியரசர், "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா....!" என்று இறைஞ்சுகிறார்.
நினைப்பும் மறப்புமே மனத்தின் வரமும் அதுவே சாபமும் அதுவே!

நினைப்பும்‌ மறப்பும் கடந்து ஒரு நித்ய நிலை அடைவதே மனித தேடல்களின் உச்சமாக இருக்கும் போல.

"நின் போதத்தாலே நினைப்பும் மறப்புமென்றால் என்போதம் எங்கே இயம்பாய் பராபரமே..." - தாயுமானவ ஸ்வாமி. 
நினைப்பும்‌,மறப்பும் என் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிறார்.

"மறப்பும், நினைப்புமற்று மாண்டிருப்பது எக்காலம்..?" என்கிறது பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல்!

இதைத்தான் " ......பரமானந்தத்தில்
தேங்கார் நினைப்பும் மறப்பும் அற்றுத் தூங்கார் ஓங்காரத்துள்ளொளியில் ஒடுங்கார்...." என்றும் திருமறை பேசுகிறது.

"கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா, முருகா, மயில் வாகனனே
விரதா, சுர சூர விபாடணனே."

என்று கந்தர் அனுபூதி பாடுகிறது.

கருதா மறவா நெறி என்பதை லௌகீகமாக தீயதைக் கருதா..அவனடியை மறவா நெறி என்று‌ கொள்ளலாம்.

நினைப்பு மறப்பென்னும் இருநிலை கடந்த ஓங்காரத்தொடுங்கும் உள்ளொளி நிலையாகவும் கொள்ளலாம்.

ஓம் முருகா!

புதன், 2 நவம்பர், 2022

கைம்மை சடங்கு‌ சம்பிரதாயம்

சடங்குகளும் சம்பிரதாயங்களும்.

நமது வாழ்வில் நாம் பிறந்து மனமாற சிந்திக்கத் துவங்கும் பால்ய வயதுக்கு முன்னதாகவே நம் குடும்பத்தினரைப் பார்த்து சில செயல்களை இமிடேட் செய்யத் துவங்குகிறோம்.

பள்ளி‌ப் பருவத்தில் விபூதி வைத்துக் கொள்வது, பேப்பரை மிதித்தால் கன்னத்தில் போட்டுக் கொள்வது, குடும்ப பெரியவர்களைப் பார்த்தால் காலில் விழுவது, வீட்டு விலக்கான‌ பெண்களிடம் மேலே பட்டுவிடாமல் நடப்பதும், காப்பி, தண்ணீரை வாயில் படாமல் குடிப்பது, கோழி சாப்பிட்டாலும் சேவல்கறி தின்னாதது, செவ்வாய், சனி சைவம், இறந்தோரை புதைப்பது, எரிப்பது அதில் பல வகை புதைப்பு, பலவகை எரிப்பு என.

இவற்றுக்கெல்லாம் காலப்போக்கில் நியாய, அநியாய காரணங்கள் உணர்ந்தாலும் அனிச்சையாய் சிலது( ரு)ம், பயத்தில் சிலது( ரு)ம், பெருமையாய் சிலது( ரு)ம், அடையாளத்துக்காக சிலது( ரு)ம், பின்பற்றுகின்றதை நாம்‌பார்க்கிறோம்.

பகுத்தறிவு முற்போக்கு பேசும் பலரே இறந்தால் எளிதாக எலக்ட்ரிக் இடுகாட்டில் எரிக்காமல் சம்பிரதாயத்திற்காக சமாதிகட்டுவதும், கட்சி/ அரசு இடத்தை ஆக்ரமிக்க புதைப்பதும் கண்கூடு.

ஓட்டுக்காகவும், குறுங்குழுவில் கெத்துகாட்டவும் முற்போக்கு நாத்திகம் பகுத்தறிவு பேசுவதும் சொந்த அக்கா செத்துவிட்டா படையல் போட்டு திருநீற்றுடன் சாவுவிருந்து சாப்பிடுவதும் நாம் கண்ட நடிப்புச் சுதேசிகள்.

குறிப்பிட்ட கோவிலுக்குள்‌சென்றால் ஆட்சி போய்விடும் என்று பட்டுக்கு தோஷம் தாக்காது என‌ அதிசயமாக பட்டு வேட்டி கட்டி கோவிலுக்கு போன பகுத்தறிவு பகலவன்கள் தான் ஊரை சனாதனி என்று சாடுவது.

காலமெல்லாம் பகுத்தறிவு எனப் பேசி கடைசி காலத்தில் தேவாரம்/ திருப்புகழ் பிரசங்கம் செய்த ராசா ராமர்கள் உண்டிங்கு.

ஒரு சமயத்தில் தொப்பி போட்டு கஞ்சி குடித்து உறவு பேணுவது இன்னொரு‌ சமயத்தில் திருநீறை‌ மறுப்பது என பகுத்தறிவு தளத்தில் இயங்கும் போலிகள் தான்‌ இங்கு சடங்குகள் பற்றி வாய்கிழிய பேசுகிறார்கள்.

சமாதிகளில் போய் தயிர் வடைகளும், ஜண்டை‌ மேளங்களும், பால் ஊற்றுதலும் தூள் பறக்க சாமானியனது நம்பிக்கையை ஏளனம் செய்து தகர்த்து ஆதாயம்‌ பார்ப்பார்கள்.

சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஒரு குடியின்‌, இனத்தின் , சமூகத்தின் அடையாளம். உணவைப் போல் மொழியைப் போல் மற்றொரு‌ அடையாளம்.

உடன்கட்டை ஏறுதல் இளகி கைம்மை நோன்பாகியது. கைம்மையும் எளிமைப்பட்டு தாலி, குங்குமம் தவிர்த்லாகியது. வரும் காலங்களில் அவசியமானால் மறுமணமும் ஏற்கப்படலாம்.

நாம் வாழும்‌ காலத்து துயரங்கள் கடந்த காலங்களில் சாதாரணமாகத் தோன்றியது போல இக்கால பிரச்னைகள் வருங்காலத்தில் பூதாகாரமானதாக உணரப் படலாம்.

"பழையன கழிதலும் புதியன‌ புகுதலும் வழுவல; காலவகையினானே!" என்று மரபை மாறுதலுக்குட்பட அனுமதிப்பதை எந்த நூலில் கூறியிருக்கிறார் தெரியுமா? கடுமையான‌ மரபை விளக்கும் இலக்கண நூலாகிய‌ நன்னூலில் என்பதே நம்‌முன்னோர்‌ வாழ்வைப் புரிந்து கொண்டதின் ஆச்சர்யமான அளவு கோல்!

சங்க காலத்திலேயே கணவனை இழந்து கைம்மை நோன்பு வாழும் பெண்களை தொடி கழி மகளிர், ஆளில் பெண்டிர், உயவல் பெண்டிர், கழிகலமகளிர், கழிகல முகடூ, பருத்திப்பெண்டிர், என்று குறிப்பிடுகிற நிலையும் வழக்கில் இருந்திருக்கின்றது.

புறநானூற்றிலேயே..வண்டிச் சக்கரத்தில் அமர்ந்த பல்லிபோல வாழ்க்கையை அவரே உலகமென கழித்துவிட்டேன். அவருடைய ஈமத்தாழியில் எனக்கும் இடம் இருக்குமாறு‌பெரிதாக வனைவாயாக.. கலம் செய் கோவே! என்ற பாடல் நெகிழ வைப்பது.


சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்
829 views
Subscribe 
Mani Manivannan's profile photo
Mani Manivannan
unread,
3/18/14
to tamilmanram


puthu.thinnai.comhttp://puthu.thinnai.com/?p=17458
சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள் | திண்ணை

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar...@gmail.com

கைம்பெண்

சங்ககாலப் பெண்கள் திருமணத்திற்குப்பின்  பிறந்த வீட்டில் பெற்றோருடன் உடனுறைந்து வாழவில்லை. கணவனுடன் இணைந்து இன்ப வாழ்வு வாழ்ந்தனர். பழங்காலத்தில் வாழ்ந்த பெண்கள் கணவரைப் பேணும் பண்புடையவர்களாக விளங்கினர்.  கணவனை இழந்த பெண்களைக் கைம்பெண்கள் என்று வழங்கினர். கணவன் இறந்த பின்னர் பெண்கள் கணவனுடன் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொண்டனர். அதைவிடப் பெண்கள் கைமை நோன்பு நோற்று தமது வாழ்க்கையைக் கழித்தனர் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

கைம்மைக் கோலம்

வளையல்களைக் களைதல்

பெண்களின் ஒப்பனை கணவன் இறந்த நிலையில் சிதைவு பெற்று கைம்மைக்குரிய தோற்றத்தை உருவாக்குகிறது. கணவனை இழந்து வாழும் பெண்கள் மங்கலப் பொருள்களை நீக்கி வாழ வேண்டும். வளையல் அணிதல் கூடாது என்று சமுதாயம் வலியுறுத்தியது. இதனை,

‘‘வாழைப் பூவின் வளைமுறி சிதற’’ (புறம்., 237.10-12)

‘‘தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடி’’ (புறம்.,238.5-7)

என்ற புறநானூற்றுப் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன. வெளிமான் என்ற மன்னன் இறக்க அவனுடைய உரிமை மகளிர் தங்கள் கைகளில் அணிந்திருந்த வளையல்களை உடைத்தெறிந்தனர். இதனால் அவர்களது கைகளின் கவின் குறைந்து பார்ப்பதற்கு வெறுமையாகக் காட்சியளித்தன என்று பெருஞ்சித்திரனார் குறிப்பிடுகின்றார்.

அணிகலன்களைக் களைதல்

கணவனுடன் வாழ்கின்ற பெண்களே பல்வேறு அணிகலன்களை அணிந்திருப்பர். கணவனை இழந்த பெண்கள் எந்தவிதமான அணிகலன்களையும் அணிதல் கூடாது. கரிகாற் பெருவளத்தான் மறைந்தான். அவனால் ஆதரிக்கப்பெற்ற அனைவரும் வருந்தினர். அவனது உரிமை மகளிர் தாங்கள் அணிந்திருந்த அனைத்து அணிகலன்களையும் களைந்து பெருந் துயருற்றனர். இதனை அவனது இறப்பினைக் கண்டு கலங்கிய கருங்குழலாதனார் எனும் புலவர்,

‘‘பூ வாட் கோவலர் பூவுடன் உதிரக்

கொய்து கட்டுஅழித்த வேங்கையின்

மெல்லியல் மகளிரும் இழை களைந்தனரே’’’ (புறம்.,224,15-17)

என்று துயருற்றுப் பாடுகின்றார்.

கூந்தல் களைதல்

பெண்களுக்கு அழகு தருவது கூந்தல். அக்கூந்தலிலேதான் பெண்கள் மலரணிந்து மகிழ்ந்தனர். கணவன் இறந்து படவே தமக்கு அழகு தந்த கூந்தலைப் பெண்கள் களைந்தார்கள். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியபோது,

‘‘மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல்

ஒள்நுதல் மகளிர் கைம்மைகூர

அவிர் அறல் கடுக்கும் அம்மென்

குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே’’ (புறம்.25:10-14)

என்று பாடுகின்றார். நெடுஞ்செழியனே நீ படையெடுத்துப் பகைவரை அழிப்பதால், பகைவர்களது மனைவியர் கைம்மையை மேற்கொள்ள வேண்டி விளங்கித் தோன்றும் ஆற்றின் கரிய தலைமுடியினைக் களைந்தார்கள் என்று கைம்பெண்கள் கூந்தலைக் களைந்ததை எடுத்துரைக்கின்றார்.

கைம்பெண்களின் உணவும் அவர்களது நிலையும்

கணவனை இழந்த பெண்கள் மிகவும் துன்பச் சூழலில் வாழ்ந்தனர். அவர்கள் தங்களை அழகுறுத்திக் கொள்வதும் நல்லுணவு உண்பதும் சமுதாயத்தால் மறுக்கப்பட்டது. அவர்கள் மிகுந்த இழிந்த வாழ்வு வாழ்ந்தனர். தமது கணவன் இருந்தபோது மகிழ்வுடன் வாழ்ந்த மகளிர் கணவன் இறந்த பின்னர் அனைத்து இன்பங்களையும் துறந்து வாழ்ந்தனர். இதனை,

‘‘குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்

இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்

கண்ணீர்த் தடுத்த தண்நறும் பந்தர்

கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி

அல்லி உணவின் மனவைியொடு இனியே

புல்லென்றனையால் வளம் கெழுதிருநகர்

வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்

முனிந்தலைப் புதல்வர் தந்தை

தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே’’ (புறம்.250:3-4)

என்ற தாயங்கண்ணியாரின் பாடல் தெளிவுறுத்துகின்றது.

தலைவனை இழந்து, பொலிவிழந்து காணப்பட்ட இல்லத்தைப் பார்த்த புலவர், மாளிகையே, புதல்வருடைய தந்தை தனியிடத்தையுடைய புறங்காட்டை அடைந்தான். தாளிக்கும் ஓசை மிகுந்த திரண்ட துவையலுடன் கூடிய உணவு இரவலரை மேற்செல்லாது தடுத்துத் தன்னிடம் வருமாறு செய்யும் வாயிலினையும் தன்னால் காக்கப்பெறுவோரின் கண்ணீரைத் தடுத்து மாற்றிய குளிர்ந்த மணமுடைய பந்தலையும் உடையதாய் முன் விளங்கினை. அத்தகைய இடத்தில் மயிரைக் களைந்தும் சிறிய வளையலை நீக்கியும் அல்லியரிசியாகிய உணவுண்ணும் மனயைிவியுடன் நீ இருந்து பொலிவழிந்தாய் என்று வருந்திப் பாடுகின்றார். இதில் கைம்பெண்களின் நிலைசித்திரிக்கப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

கைம்பெண்களின் அழகிழந்த நிலை

கணவனை இழந்த பெண்கள் கூந்தல், வளையல், அணிகள் ஆகியவற்றை இழந்து பொலிவிழந்து காணப்பட்டனர். அவர்களின் அழகற்ற நிலையானது அழகற்ற இல்லம்போன்று காணப்பட்டன. இத்தகைய கைம்பெண்களின் அவல நிலையை,

‘‘நிரை இவன் தந்து, நடுகல் ஆகிய

வென்வேல் விடலை இன்மையின் புலம்பி

கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய

கழிகல மகடூஉப் போலப்

புல்லென்றனையால் பல்லணி இழந்தே’’(புறம். 262)

என்று வாள்போரில் வீழ்ந்தவனைப் பார்த்து யாழ்ப்பாணர் வருந்தி ஆவூர் மூலங்கிழார் பாடுகின்றார். இப்பாடல் கைம்பெண்களின் வாழ்க்கைநிலையை தெளிவுறுத்தும் பாடலாக அமைந்துள்ளது.

கைம்மைத் துயர்

பூதப்பாண்டியன் இறந்தான். அவனது மனைவி பெருங்கோப்பெண்டு பெருந்துயருற்றாள். தன் கணவன் இறந்த பின்னர் உயிர்வாழ்வதா? என்று கருதி தீப்பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள். அப்போது கைம்மைத் துயர் எத்தன்மையது என்பதை,

//‘‘அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட

காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது

அடைஇடைக் கிடந்த கைபிழி பண்டம்

வெள்எட் சாந்தொடு புளிப்பெய்து அட்ட

வேளை வெந்தை வல்சி ஆக

பரற் பெய்பள்ளிப் பாய்இன்று வதியும்

உயவல் பெண்டிரேம் அல்லேம்மாதோ

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்

நுமக்கு அரிதாகுகதில்ல. எமக்கு எம்

பெருந்தோட் கணவன் மாய்ந்தென’’ (புறம்.,246)

என்று எடுத்துரைக்கின்றாள்.//

உயிர்களுக்கு மட்டுமல்ல சடங்கு சம்பிரதாயங்களுக்கும் ஃபிட்டஸ்ட் ஆஃப் தி ஸர்வைவல் பொருந்தும்.









சனி, 29 அக்டோபர், 2022

கவிதை: மழை

உலர்ந்த மண்ணுக்கும் 
உணர்ந்த மனசுக்கும்
ஒத்தடமாய் இறங்கியது மழை.

கவிதை: பகுத்தறிவு

தமிழ்ச் சூழலில்.... பகுத்தறிவு பேசுவோர் வேறு, பகுத்தறிவுடன் வாழ்வோர் வேறு!

வெள்ளி, 28 அக்டோபர், 2022

ஒரு‌மகள் தன்னை உடையேன்....

ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான்

பெருமக ளாய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை

மருமக ளைக்கண்டு கந்து மணாட்டுப்பு றம்செய்யுங் கொலோ.
- பெரியாழ்வார் பாசுரம். (300)

ஒத்தைக்கொரு பெண்ணாக பெற்றேன். அவளை உலகமே புகழும் வண்ணம் இலக்குமி போல வளர்த்தேன்.

செங்கண்மால் ஆகிய பெருமாள் கொண்டு போய் விட்டான்.

இது பெற்றவளின் கவலை. அடுத்து போன இடத்துல மாமியார்க்காரி என்ன செய்வாளோ என்பது கவலையின் தொடர்ச்சி. மாமியாரை மகிழ்விக்க அவளை முதலில் பாராட்டி விட வேண்டுமல்லவா? பெண்ணைக் கொடுத்த பெற்றோரெல்லாம் சம்மந்தியம்மாவை கொஞ்சம் அதிகமாகப் புகழ்வது உண்டே!

"பெருமகளாய்க் குடி வாழ்ந்து....."

அதாவது பெருமகளாய் + குடி‌வாழ்ந்து எனப் பிரித்தால் 
முதன்மையான தலைவியாக குடியில் வாழ்ந்தவள்..என்றும்,

 பெரு மகள்+ ஆய்க்குடி வாழ்ந்து எனப் பிரித்தால் இடைச்சேரிக்குத் தலைவியாக  வாழ்ந்த யசோதை என்றும் பொருள்‌படும்.

இத்தகு யசோதை... பெரும் பிள்ளை பெற்றவள்...தன் மருமகளைக் கண்டு..
ஏற்பாளோ..? சீர் செய்வாளோ? 
( மருமகளுக்கு மாமியார்‌ செய்யும் சீருக்கு மணாட்டுப்புறம் என்ற‌ பெயரோ!)
எனகவலை கொள்கிறார்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இங்கொரு நயவுரை எழுதுகிறார்.

என்மகளை எவ்வாறு கொண்டு போகலாம் எனத்திட்டமிட்டே இரவெல்லாம் கண்விழித்து அவன் 'செங்கண்மால்' ஆகிவிட்டான் என ஆழ்வார் குறிப்பிடுவதாக!

சும்மாவா சொல்லி வைத்தார்கள்...
"திவ்ய" பிரபந்தம் என!

சனி, 8 அக்டோபர், 2022

கழைதின்‌யானையார் - ஈகை

கழைதின்‌ யானையாரும்...
கார் ஏசியும்.

பல லட்சம் பெறுமதியுள்ள காரில் அமர்ந்து, நிறுத்திய காரிலும் ஏசி போட்டு வெயில் தாக்காதபடி செல் பேசிக் கொண்டிருந்தேன்.

வெளியில், வெயிலில் ஒரு பேரிளம் பெண், அவர்தம் பெண்,பேத்தி என்று அனுமானிக்கத் தக்க நான்கு உழைக்கும் வர்கப் பெண்கள் கார் கண்ணாடியைத் தட்டி கையேந்தினர்.

கோவையில் சில ஆண்டுகள் முன்பு வரை இவ்வளவு இரப்போரைக் காண முடியாது.

திருநங்கையர், ஊனமுற்றோர் என ஓரிருவர் எதிர்படுவர். சில ஆண்டுகளாக வடநாட்டு ஏழைப் பெண்டிர் குழந்தைகளுடன் இரத்தல் வழமையான‌ நடப்பாக இருக்கிறது.

ஆனால் தமிழ் முகத்துடன் கூடிய உழைக்கும் வர்கத்தவர் கையேந்த கொரானா காரணமா?!

கோவிட் பாதுகாப்பால், டிமோ காரணத்தால் காசு பணம் கையில் வைத்திருப்பது அரிதாகி விட்டது.

எதற்கும் ஜிபே தான்! கார்டு தான்!

நாள் முழுதும் வெயிலில் நின்று கார் எடுக்கும்‌ போது ரிவர்ஸ் பார்க்கும் ஓட்டல், பார்க்கிங் செக்யூரிட்டி நபர்களுக்கு கூட ஐந்து ரூ, பத்து ரூ தருவதும் சமயங்களில் சில்லறை இல்லாததால் வெட்கி விரைதலும் நடக்கும்.

ஆனால் ஒரு குடும்பமே கையேந்தும்‌ போது சுத்தமாக சில்லரை இல்லாத தர்மசங்கடம்.

கூலிவேலை முடிந்து வீடுசெல்லும் சில நகர்ப்புற ஏழைமக்கள் உபரிக்காக இவ்வாறு இரந்தாலும் சரி...,
உண்மையாகவே வருமானமின்றி உணவுக்காக இரந்தாலும் சரி,
பாக்கட்டில் உள்ள பணத்தில் மிகக்குறைந்த டினாமினேசனோ ரூ.50/-🙄

இப்போது இருதலைக் கொள்ளி எறும்பாக நான்.😟

ஹாம்லட் போல டுகிவ்? ஆர் நாட் டுகிவ்?! என்று ஷேக்ஸ்பியர்‌ லெவல் குழப்பம்.

அதை உணர்ந்தது போலவே அந்த நான்கு பேரும் காருக்கு வெளியே கையேந்தியபடி.

ஏசியில் கூட எனக்கோ கூச்சத்திலும், குழப்பத்திலும் வியர்த்தது.

அம்பது ரூபாய் பிச்சை போட நான் மைடியர்‌ மார்த்தாண்டன் பிரபு அல்லவே..?!

முடிவு எடுக்காமல் இருப்பதும் ஒரு‌ முடிவுதான் என்று‌ PV.Narasimha Rao பாணியில் அமைதி காத்தேன்.

 There Is No Alternative  என்ற TINA factor அவர்களுக்குத் தெரிந்திருக்கும் போலும்.
Stand on the deck என்ற‌ கட்டளைக்கு கீழ்ப்‌படிந்து எரியும் கப்பலில் நின்ற casabianca போல அசையாமல் எரியும் வெயிலில் நின்றார்கள்.

நானும் கண்ணை அவர்கள் பக்கம் திருப்பாமல் டஃப் குடுக்க முயன்றேன்.

மண்டையில் 'ணங்' என்று அடிவிழும் ஒலி.

"ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று ..."

என்ற வரிகள் மனதில் மின்னலிட்டது.

வறுமையால் பொருளை இரப்பது இழிவு தான்...ஆனால் அதைவிடவும் வறியோருக்குத் தன்னிடமுள்ள‌ பொருளைத் தரமாட்டேன் என்று மறுப்பது அதைவிட இழிவு!

உடனே சட்டைப் பையிலிருந்த ஐம்பது ரூபாயை கண்ணாடியைக் கீழிறக்கி நீட்டிவிட்டேன்.

"இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்" என்று பிற்கால ஔவையார் சொற்கான உந்துதலாக..

புறநானூறு 204ம் பாடலில்...
புலவர் "கழைதின்‌ யானையார்" எழுதுகிறார்....

ஈ என இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே
ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச்
சேற்றொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர் பல ஆகும்
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர்ப் பழியலர் அதனால்
புலவேன் வாழிய ஓரி விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே.

கொல்லியாண்ட வல்வில் ஓரியிடம் பாடிப் பரிசில் பெற்றாரோ தெரியாது
இப்பாடல் தமிழர்களுக்கு தாத்தன்  கழைதின் யானையார் தந்த பரிசில் மட்டுமல்ல பூர்விகச் சொத்து.

இந்த‌வரிகளைப் பாருங்கள்....!

//தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே
ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச்
சேற்றொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர் பல ஆகும்//

கடலில் தெளிவான நீர் மிகுதியாக இருந்தாலும் தாகம் உள்ளவர் அதனை உண்பதில்லை. ஆனிரைகளும் அவற்றைக் கொன்று தின்னும் விலங்கினங்களும் சென்று உண்ணும் கலங்கிய நீராயினும் அதனை உண்ணச் செல்வோரின் எண்ணிக்கை மிகுதியாதலால் அதற்கு அமைந்த நடைபாதைகள் பல.

இவ்வரிகளில் சூசகமாக ஓரியை குறுநில மன்னனாக இருப்பினும் நன்னீர் நிலை என்கிறார்.

இவ்வரிகளில் அவர்‌காட்டும் சித்திரம்   அனிமல் பிளனட்‌ போன்ற சானல்களில் ஆப்பிரிக்க பாலை/காடுகளில் கலங்கிய நீர் நிலைகளை சுற்றி சுற்றி வரும் விலங்கினங்களை படம்‌பிடித்தது போல உள்ளது.

ஐம்பது ரூபாய் யாசித்துப் பெற்றும் எனக்கு 2500 ஆண்டு மூத்த "கழைதின் யானையார்‌" பாடலை அசைபோட வைத்த அப்பெண்களுக்கு நன்றி.

வெள்ளி, 20 மே, 2022

தலையாய கதை

அவனிடம் சொன்னேன் என் 
அஞ்சுதலை, அந்த 
அண்ணலே தந்து வைத்தான்‌ 
ஆறுதலை....என்று பாடிக்கொண்டே ரூம் சர்வீஸ் சாத்தன் டீயுடன் நுழைந்தான்.

கட்டிலில் இருந்த மனிதன் பக்கத்து இருக்கையில் இருந்த தலையுடன் பேசிக் கொண்டிருந்தான்.😮

தலை என்றால் அஜீத் இல்லை.
இது வெறும் தலை.😯

டேய் முண்டம்..!

சாத்தன்‌ திடுக்கிட்டான் பேசியது வெறும் தலை..வெறும் தலைன்னா முடியில்லாத தலை இல்லை, முண்டம் இல்லாத தலை!

கட்டிலில் இருந்த உடலுடன் கூடிய மனிதன் ,
" என்னடா ?" என்றான்.

"ரெண்டு டீ போடு, ஒண்ணு வித்தவுட், ஒண்ணு டபுள்‌சுகர்!" 
எந்த தறுதலை சொன்னதோ தெரியவில்லை. தலைக்குத் தலை அவனை நாட்டாமை செய்தனர்.

உன் பேரென்னப்பா..?

' சீத்தலை சாத்தனுங்க!"
கைகால் நடுங்க ஆரம்பித்தது.

எந்த ஊருப்பா..?
" குளித்தலை"

'எனக்கு பேட்டவாய்த்தலை' 

என்னாங்கடா தலை கொழுத்து ஆடுறீங்க..! என்னா நடக்குது இங்க?!😲

'எனக்கு வித்தவுட்' என்றது வெறும் தலை.
நீயே வித்தவுட் பாடி என்று நினைத்தான் சீத்தலை.

'டீய சரியாக் குடுப்பா மாத்திறாதே..'
மாத்தலை சார்!

இரண்டு பேர் வாய்க்குள்ளும் டீ போனது.
உடம்பு தலைக்காவது வயிறு‌ இருக்கு
வெறுந்தலைக்கு டீயா? ம்ஹ்ம்! பொருந்தலை!

உள்ளே போன‌டீ வயிறு இல்லாட்டியும் கீழே வரவில்லை!🤯

சீத்தலைக்கு வயிறு கலக்கி கீழே வந்துடும் போல இருந்தது.☹️

டின்னர்க்கு  என்ன வேணும் சார்?
'தலைக்கறி..'

உனக்குத் தெரியுமா? எல்லாரும் வயித்துக்காக பொய் பேசுறாங்க எனக்கு வயிறே  இல்லாததால பிரச்னை இல்லை..! தலையாய தத்துவம் பேசியது தலை.

அது என்..என்..என்னங்க வாயெல்லாம்‌ ரத்தம்?
ரத்தமில்ல வெத்தலை!

அதுவும் தலையா..?! அவ்வ்..!

'சுகர்‌ பத்தலை' 
சரிங்க‌ சார்..போடறேன்.
அப்படியே ஃபேன் சுத்தலை பாரு!

வாய் அசைவதும், குரல் வருவதும் 
சீத்தலைக்கு தலை சுத்தலை தந்தது.
வாய்விட்டுக் கத்தலை அவ்வளவே.

காலி கப் எடுத்துக் கொண்டு தலை போகிற அவசரமாக வெளியேறினான்..

சீத்தலை..கதவை சாத்தலை..! என்றது எதோ ஒரு தலை உள்ளிருந்து.

தலை தெறிக்க  ரிசப்ஷனுக்கு ஓடி வந்து 
அந்த அறையில் நடத்ததை கூறினான்.

' சீத்தலை அதுல இருக்கறவரு ஒரு வென்ட்ரிலாக்விஸ்ட்' (ventriloquist) என்றாள் வரவேற்பாளினி.

தலை சுத்துது மேடம்..என்ன வென்ட்ரு லோகாஸ்டோ! இதை எல்லாம் தாங்கணும்னு என் தலை யெழுத்து.

வெள்ளி, 13 மே, 2022

#எங்கள்கதை_இதுஉங்களின்கதை_3



நாராயண‌மூர்த்தி என்ற‌ மாத்வர் எங்க ஊரில் இருந்தார். எங்கள்‌குடும்ப நண்பராகிய அவர் ஐயப்பன்‌ கோவிலில் பூசாரியாகவும், குருசாமியாகவும் இருந்தார். ஒவ்வொரு தமிழனுக்கும் 70,80 களில் ஐயப்பன்‌ கோவில் பஜனை என்பது ஆன்மிக ஈர்ப்பாக இருந்தது.

70களில் துவங்கி தமிழகத்தில் திராவிட‌ இயக்கங்களின் உள்ளீடற்ற‌ கோஷங்கள் படிப்படியாக நீர்த்துப்‌போக முதன்மையான காரணி ஐயப்பன் கோவில்கள். (பிறகு 80களில் மேல் மருவத்தூர்) இவை வெகு ஜன இயக்கமாக இருந்தது. 

எங்க அரூர்  அய்யப்பன்‌ கோவில் என்‌ மாமாக்கள், சித்தப்பா இன்னும்‌ ஊர் ஐயப்ப‌ பக்தர்கள் அவர்களின் குழுக்களுடன் நிர்மாணிக்கப்பட்டது 70களின்‌ மத்தியில்.

இன்றிருப்பது போல் இல்லாமல் ஐயப்ப‌ன் கோவில் பஜனைகள் அனைத்து விதமான இந்து பக்தி மார்கத்தவரும்/ சில சமயம் இறை‌மறுப்பாளரும் கலந்து கொண்டு பாடும் வாய்ப்பை வழங்கும் மேடையாக இருந்தது. அந்த சிற்றூருக்கு அது தியாகராஜ உற்சவம்.

காலை என் தாயாரும், அண்ணனும், ( சிணுங்கிக் கொண்டே நானும்..!) திருப்பாவை, திருவம்பாவை மைக்கில் சொல்லப் போவார்கள்.

வழக்கத்திற்கு மாறாக 5 மணிக்கு எழுந்து கோவிலுக்கு வருவதால் 6 மணிக்கெல்லாம் பசிக்க துவங்கி விடும்..

ஏதவன்‌ ஊர்‌ ஏதவன்‌பேர்....என்று இவர்கள் மெய்‌மறந்திருக்க..நானோ..பொங்கல் வைத்திருக்கும் இலையால் மூடப்பட்ட பக்கெட்டையே பார்த்திருப்பேன்.

திருப்பாவை, திருவம்பாவை முடிந்து அப்பாடா என்று ஆசுவாசப்பட்டால்..அம்மா..." கதிரவன்‌ குணதிசை சிகரம் வந்தணைந்தான்..." என்று தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி யை ஆரம்பித்து விடுவார்.

அது முடியும் நேரம் ( நான்தான் புத்தகத்தை வெறித்துப்‌ பார்த்துக் கொண்டிருப்பேனே...?!)
என் அண்ணன் ரெம்ப நல்ல பையனாக மாணிக்கவாசகர்‌ பாடிய " கூவின பூங்குயில்..கூவின‌கோழி..." என்ற‌ மாணிக்கவாசகரின் திருப்பள்ளி எழுச்சியை துவங்கி விடுவான்.

இப்படி துவங்கும் தினசரி காலைகள். 

பெரும்பாலும் அரையாண்டுத் தேர்வு நேரமாக இருக்கும்‌ என்பதால் மதியம் கோவிலுக்குப் போய் ( நாராயண‌மூர்த்தி மாமா) வீபூதி போடும்‌ போது புத்தகத்தை பிரிப்பேன். அது எந்தப் பக்கத்தில் வீபூதி விழுகிறதோ அந்த கேள்வி பரிட்சையில் வரும் என்ற நம்பிக்கை.

மாலை கோவில் களை கட்டும்.

ஊரில் யாருக்கெல்லாம்‌பாடத்தெரியுமோ அவர்கள் எல்லாரும் ஆஜராகி விடுவார்கள். ஆண்களும்‌ பெண்களும் தனித்தனி வரிசையில் இருக்க ஒரே மைக் தான் இருக்கும்.

வள்ளலார் பக்தர் ஒருவர்‌ வந்து மனமுருகி திருவருட்பா பாடுவார்,

" ஞானசித்தி புரத்தனே 
   சர்வசக்தி வரத்தனே...
   தாயின்‌மிக்க நல்லவா..
   சர்வ சித்தி வல்லவா..
நீ என்‌அப்பன்‌ அல்லவா..
நினக்கும் இன்னும்‌ சொல்லவா...""
எந்தையே....என் தந்தையே...!"

பெரும்பாலும் 24 மனை தெலுங்கு செட்டியார்‌ சமூகத்தவர் தான் எங்க ஊர்‌ ஐயப்ப‌ பக்தர்களில் அதிகம்‌ பாடுவார்கள்.
ஒரு ஒருவருக்கும் ஒரு‌சில சிக்னேச்சர்‌ பாட்டு இருக்கும்.
ஒருவர் தாஸ் ஸ்டூடியோ என்று போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்தார்.
மற்றவர் நர்சரி‌ வைத்திருந்தார்.
இன்னொருத்தர் எல்
ஐசியில், ஒருவர்‌ கவுண்டர் சேகோ ஃபேக்டரி‌ வைத்திருந்தார்.

மற்றொரு அண்ணன் கனரா‌வங்கி ஊழியர். சிவப்பு சித்தாந்த, கருப்பு கொள்கை உடையவர். ஆனால் பாட்டுப்‌பாடும் திறமை மிக்கவர்‌. அந்த வாய்ப்பை பலர்‌முன் வெளிப்படுத்த வாய்ப்பாக இந்த ஐயப்ப‌ பஜனையை‌ பயன்‌ படுத்துவார்.

பல நேரம் ஊருக்கு புதிதாக வங்கியில், எல்ஐசி என்று மாற்றலாகி வரும் புதுமுகங்கள் தட்டுப் படுவார்கள், பாடுவார்கள்.

கணபதியில் ஆறரை‌ மணிக்குத் துவங்கினால் குரு, சரஸ்வதி, என்று பயணித்து ஐயப்பனில் நிறைந்து ஆஞ்சனேயரில் முடியும்.
பிறகு தீபாராதனை, அன்னதானம் என்று முடிய 10 மணியாகும்.

இந்த பஜனைப் பாடுகையில் டங் ட்விஸ்டரும் உண்டு.

உன்‌ நாமம் என்‌நாவில் என்னாளும் தங்கிட
என்‌நாவில் என்னாளும் உன்‌ நாமம் தங்கிட
என்‌நாவில்  உன்‌ நாமம் என்னாளும் தங்கிட
என்னாளும் என்‌நாவில்  உன்‌ நாமம்  தங்கிட
என்னாளும்   உன்‌ நாமம்  என்‌நாவில் தங்கிட
உன்‌ நாமம்  என்னாளும் என்‌நாவில் தங்கிட

என்று‌பல பெர்முடேஷன் காம்பினேஷனில் வார்த்தைகளை மாற்றி மாற்றி ஆனால் பொருள் மாறாமல் வாய் திக்காமல் ஒருவர்‌ பாட மிகுந்த அவேர்னஸுடன் பாடலைத் தொடர்பவரே பிழையில்லாமல் பின் பாட்டு பாட‌ முடியும். (இல்லா விட்டால் உன்நாவில் என்‌நாமம் என்று இறை‌ நிந்தனையாகி விடும் .)

சம்போ கங்காதரா..கௌரிமனோகரா
கௌரி‌மனோகரா கங்கா ஜடாதரா..
என்று‌ அந்தப் பஜன் பாடல் தொடர்ந்து  போகும்!

இப்படி எங்க ஊர் ஐயப்பன் கோவிலில் ஆர்வமாக இருந்ததால் மேற்‌சொன்ன குடும்ப‌ நண்பர்‌ (குருசாமி) என்‌மீது அன்போடு இருப்பார். எங்க‌ குடும்ப பசங்களை எல்லாம் " மாப்ளே" என்று பலே பாண்டியா‌ ராதா போல அழைப்பார்.( அவருக்கு பெண்பிள்ளை இல்லை என்பது உபரித் தகவல்!)

நான் 10 வது படித்தது ஏற்காடு மான்ட் போர்டு குரூப்பை‌ சார்ந்த மேட்டூர் அருகில் உள்ள கொளத்தூர் நிர்மலா பள்ளி. விடுதி மாணவன்‌ நான்.

ஆண்கள்‌ பள்ளி ஆனாலும் 11,12 ம் வகுப்பு மட்டும்‌ கோ.எட். பத்தாவது 12 வது மாணவர்களை பெரும்பாலும் மைதானத்தில் போய் படிக்க விட்டுவிடுவார்கள். நான் மைதானத்தின்‌மறுகோடியில் அமர்ந்து படிக்கும்‌போது அந்தக் கிறித்துவப் பள்ளியின் சூழலுக்கே பொருந்தாத காவி வேட்டி‌, காவி‌ஜிப்பா நீள்தாடி நீள்‌முடியுடன் ஒரு‌உருவம் கிரவுண்டு நுழைவாயிலில் நுழைந்தது.

எதோ வேலையாக மேட்டூர்‌ வந்த நாராயணமூர்த்தி மாமா ( குருசாமி) என்னைப் பார்க்க கொளத்தூர்‌ பள்ளிக்கு வந்திருக்கிறார்.

என் வீட்டிலிருந்து யாரோ ஒருவரை பார்த்த‌து போன்ற‌ மகிழ்வில் நான் அவரை நோக்கி ஓட, 
என்னைப் பார்த்து விட்ட அவரோ..சந்தோஷம் தாங்காமல் இடம் பொருள்‌ மறந்து நடு கிரவுண்டில் 
" மாப்ளே..." என்று சத்தமாக கூவ..
புட்பால் கோல் போஸ்ட் அருகில் அமர்ந்து  படித்துக் கொண்டிருந்த சுமார்‌ ஆறேழு 12 வது வகுப்பு மாணவிகள் கொல் என்று‌ சிரிக்க...

பத்தாவது படிக்கும்‌ பால்முக மாணவன்
பட்டபாட்டை என்னென்பேன்! ஏதென்பேன்!

வியாழன், 21 ஏப்ரல், 2022

#ஒவ்வொருவரிடமும்_ஒருநல்லகதை_உள்ளது_12


என் சித்தப்பா ஒருவர் சிவில் இன்ஜினியராக திருச்சியில் தனியார் காண்ட்ராக்டரிடம் பணியாற்றி‌ வந்தார்.
பல அருமையான வாய்ப்புகளைப் பெற்றார்..ஆயினும்‌ எதையும் தக்கவைத்துக் கொள்ளவில்லை.

தில்லை நகரில் குடியிருந்தார்.

அப்போதைய தில்லை நகர் பெரும்பாலும் வயல்களும் அங்கொன்று‌ இங்கொன்றாக வீடுகளும் கொண்ட ஒரு வளரும் புறநகர்.

நாங்கள் எங்க வீட்டிலிருந்து மலைவாசல், மெயின்கார்டு கேட் போய் கோட்டை ஸ்டேஷன் வழியாக குறுக்கால பூந்து சில  சாலைகள் வரப்புகள் கட்டப்படும் வீடுகள் வழியே சித்தப்பா வீட்டை அடைந்து விடுவோம்.
பத்மாமணி டாக்கீஸ் எல்லாம் சற்று அருகில் இருக்கும்.
அதில்தான் அம்மாவுடன் அபூர்வராகங்கள் பார்த்தேன்.

சித்தப்பா கலையரங்கம்‌ கட்டும்போது அதில் வேலை பார்த்தவர்.

மரக்கடையில், மேலே தண்ணீர் டாங்கும் கீழே வணிக வளாகமும் இருக்குமாறு புதுமையாக ஒரு‌கட்டிடம்‌‌ கட்டினார்கள்.
தமிழகத்திலேயே அது தான் முதல் என‌ நினைக்கிறேன்.

அதில் இன்ஜினியராக பணியாற்றிய‌ என்‌சித்தப்பா ஒரு தவறு செய்தார்.

ஒருநாள்....
" ஏண்டா வீட்ல லீவுல போரடிக்குதா...? அப்பிடின்னா என்னோட‌ வர்றியா..?"

உடனே அவருடன்‌ ஒர்க் சைட்டுக்கு கிளம்பி விட்டேன்.
ஒர்க் சைட்டில் சிறிய‌ கூரைக் கொட்டாய்..
நான்‌ ஒரு‌ மடக்கு சேரில் உட்கார்ந்தேன்.
அங்கு எந்த ஸ்வாரசியமும் தட்டுப் படவில்லை.

குழந்தை போரடிக்கிறானே என்று பரிதாபப்பட்ட சித்தப்பா இன்னொரு தவறு செய்தார்.
 ஜில்லென்று ஒரு‌நன்னாரி சர்பத் வாங்கித் தந்தார்.

அதன் பிறகும் நான் உம்மென்று இருக்க அவர்‌ மூன்றாவதாக ஒரு தவறு செய்தார்.

பக்கத்துல பிரபாத்துல கூட்டிட்டு போய் தியாகம் சினிமாக்கு டிக்கட் வாங்கித் தந்துவிட்டார். அவருக்கு பிரச்னையில்லாமல் வேலையை கவனிக்க வேண்டிய அவசரம்.

எனக்குள் இருந்த சாத்தான் இளிக்க‌ ஆரம்பித்தான்.

அடுத்த நாள் அவர் காலையில் பணிக்கு கிளம்புமுன் நான் தயாராகி நின்றேன்.

அவருக்கு ஒரே தர்ம‌சங்கடம். அண்ணன் குழந்தையான நாங்களே செல்லம் என்பதால் திட்டுவதில்லை.

ஆனால் கொஞ்சம் கடுகடுத்த முகத்தோடு அழைத்துச் சென்றார். இன்றும்‌ நன்னாரி‌ சர்பத்.
ஜுபிடரில் 'சகோதர சபதம்'.

மூன்றாம்‌ நாளும் காலையில் சினசியராகக் கிளம்பி நின்றேன்.
சித்தப்பா எவ்வளவோ சமாளித்து தடுத்துப் பார்த்தார்... ஊஹூம்!

புன்னகை மன்னன் ஸ்ரீவித்யா சிறுவனுக்கு தந்த ட்ரீட்மெண்ட் அம்மாவால் எனக்கு வழங்கப்பட்டது. 🤣

அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு‌முறை இதே சித்தப்பா ஸ்ரீரங்கம் கோவிலில் கட்டிடப் பணியில் இருந்தார். அப்போது கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் அருகில் இருந்த இடிபாடுகள், மண் மேட்டை அகற்றும் பணியில் இருந்தபோது  ஒரு‌ அற்புதம்‌ வெளிப்பட்டது.

அந்த மண்மேட்டின் அடியில் ஒரு‌ ரதம் போன்ற அமைப்பு வெளிப்பட்டது.
அந்த ரதம் இரண்டு‌யானைகளால் இழுக்கப் பட்வது போலவும், யானைகளை வேல் ஏந்திய வீரர்கள் வழி நடத்துவது போலவும் இந்த அமைப்பு இருந்தது.ஆயிரம் கால் மண்டபம்‌ என்னும் தேரை யானைகள் இழுப்பது போலவும் அழகிய கற்பனையுடன் வடிவமைக்கப்‌ பட்டிருந்தது...,
மண்நீக்கப்பட்டு வெளிவந்தது.

இதில் கவனிக்கவேண்டிய அழகு யானைச் சிற்பங்களின் நெற்றியில் திருமண் பூசவில்லை. திருநீற்றுப் பட்டை செதுக்கப்பட்டிருந்தது!( பெருமாள்‌ கோவிலில்..)

இது ஒரு அதிசயமாகவும், அகழ்வாய்வு ஒரு சுவாரஸ்யமாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்தது. 

அதே காலகட்டத்தில் புதுக்கோட்டை மெய்வழிச்சாலையில் ஆண்டவர் ஆஸ்ரமம் பற்றியும் பரபரப்பாக தினசரிகளில் வெளி வரும்.

வழக்கமாக முத்தங்கி சேவைக்கோ, வேடுபரிக்கோ டி.ஏ.எஸ் ரத்தினம்‌ பட்டணம்‌ பொடி‌ விசிறியுடன் கூட்டத்தில் நசுங்கிப் போகும் நாங்கள் அந்த முறை சித்தப்பா தயவில் வி.ஐ.பி‌ மரியாதை பெற்று கோவிலுக்குப்‌ போனோம்.

கருவறை தங்க விமானம்‌ அருகில் போய் தொட்டு சேவிக்கும் பாக்கியம் எனக்கும்‌ என்‌அண்ணனுக்கும் கிடைத்தது. 

அதன்‌பிறகு இப்போது புதுப்பிக்கப்பட்ட பின்‌ சமீபத்தில் போனமாதம் 21 கோபுரமும் ஒரே வரிசையில் பார்க்கும் பேறு கிட்டியது.

ஏன்‌ ஸ்ரீரங்கம்‌கோவில் நமக்கு ஸ்பெஷலாக இருக்கிறது என்று சுஜாதா எழுதியது நினைவில் வந்தது.
வெள்ளைக் கோபுரம்‌ பார்த்து திருவரங்கன் உலா நினைவு வந்து மனம் கனத்தது.

"எந்தை தந்தை தந்தை-தம் மூத்தப்பன் ஏழ் படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் ..
..........................  ................   ..............
பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்று பாடுதுமே"


புதன், 20 ஏப்ரல், 2022

இலங்கை வன்முறை வெறுப்பு..

முன்பெல்லாம்‌ 80 களில் பஞ்சாப் கலவர‌பூமி. 
பாகிஸ்தான் ஆதரவுடன் அங்கே தீவிரவாதம் நடந்தது. 'சீக் முஸ்லீம் ஏக் ஹை' என்ற முழக்கத்தால் பெரும்பாலும் இந்துக்கள் இறப்பார்கள். 
பதிலுக்கு டெல்லியில் சீக்கியர்கள் தாக்கப்படுவர்.

இது தொடர்கதையானது.
பிறகு ஒரு வாக்கியம் பிரபலமானது...
"பஞ்சாப் கலவரங்களுக்கு தீர்வு டெல்லி தெருக்களில் அல்ல" என்று.

வி.பி.சிங் வந்தபின் சீக்கியர்‌ கோபம் தணிந்தது. சீக்கிய தீவிரவாதிகளின்‌ மறுசீரமைப்பு பலன் தந்தது.

ஐஎஸ்ஐ கவனம் அதை விட‌ வாகான‌ கஷ்மீர்‌ பக்கம் திரும்பியது. கஷ்மீர் குல்மொஹர் கருகத் துவங்கியது.

பயங்கர வாதங்களில் அரசியல் சித்தாந்தங்களும் பன்னாட்டு‌ கைகளும்‌ இருக்கும். 

குண்டு வெடித்தவர், குண்டில் வெடித்தவர் யார் நம்மவராயினும்‌ தனிமனிதர்கள்( அவர்களிடம்‌ உள்ள தகவல்கள் மிகக் குறைவே!)  பதிலடி/ வெறுப்பு என‌ப் போகாமல் அரசிடம் நம்பிக்கை வைத்து பொறுப்பை ஒப்படைப்பதே நல்லது.

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட சமயம் அதை நேரடியாக காட்டிய அமெரிக்க‌ டிவிக்கள்‌.. எந்த குழப்பத்தையும்‌ மக்களிடம்‌ தூபம்‌ போடாமல்.." Dont allow the hatred to win us!" என்று ஸ்க்ரோல் ஓடவிட்டனர்.

உள்நாட்டில் உயர்‌ விழுமியங்களைப் பேணும் அமெரிக்க‌ மக்கள் தம்‌ அரசின்‌ மீது நம்பிக்கை வைக்கின்றனர்.

தெனாலியில் கமல் சொல்வதாக‌ ஒருவசனம் வரும்...,"அப்போ நான் சின்னப்‌பிள்ள இந்த பிரச்னை விளங்கேல..இப்பவும்...விளங்கேல!"
என்று கண்ணைத் துடைத்துக் கொள்வார்.
'நியூசிலாந்து துயரத்திற்கு பதிலடி 
கொழும்பு சர்ச்சில் அல்ல"...என உறுதி கொள்வோம்.
"நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்‌ வாய்நாடி வாய்ப்பச் செயல்..."
இலங்கை அரசின் கடமை.

இழப்பை எதிரபாராமல் சந்திக்கும் இலங்கைக்கு நம் ஆழ்ந்த வருத்தங்கள்.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

kavithai

வயிறக்கட்டி வளத்தேன்,
வைரக்கட்டி ஒன்ன...
வையுற கட்டி தந்த பின்ன!
-ந.த.து.

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

அரசியல் 2 ஜி.

In high places is an interesting novel by Arthur hailey about the top brasses of Canadian political system.

அந்த இன்ஸ்பிரேஷனில்....

அந்த தலைவர் மீது அளவுக்கு அதிகமான சொத்து சேர்ந்த வழக்கில் வீட்டிலிருந்த ஏராளம் நகைகளை கைப்பற்றி அன்றைய‌ மாநில அரசு அமலாக்கத்துறை கஸ்டடியில் வைத்திருந்தது.

அநத நகைகளைப் பற்றி ஏராள கதைகள/ வதந்திகள்/ வியப்புகள் தமிழகமே வாய் பிளந்து பேசிக்கொண்டிருந்தது..புலனாய்வுப் பத்திரிகைகள் புண்ணியத்தில்.

அப்போது உச்ச பதவியில் இருந்தவரின் செகண்ட் சானல் அந்த நகைகளை பார்க்கும் தன் ஆசையை அதிகாரிகளிடம் வெளியிட்டார்.

அதிகாரத்தின் செகன்ட்‌சேனல் ஆச்சே..அதிகாரிகள் நகைகளை பார்க்க ஏற்பாடு செய்தனர்.

அவங்க என்ன சும்மா வேடிக்கை பார்க்கவா வந்தனர்? அதில் பல பெரிய‌நகைகளை கிலோக்கணக்கில் தங்களுக்கு வேண்டும் என்று கட்டளை இட்டனர்.

சிஐடியாக இருந்தாலும் சிஐடிக்கு ஏவலர் தானே..? அந்த நகைகள் கணக்கில் விசாரணை வளையத்தில் இருக்கிறது என்று தயங்கியும் தப்ப முடியவில்லை.

அதனால் மேற்படி‌ நகைகளுக்கு பதிலாக கவரிங்கில் டூப்ளிகேட் செய்து அங்கே வைத்து விட்டு ஒரிஜினலை 'தர்மம்' செய்தனர்.

இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று துள்ளிக் குதித்த குற்றம் சாட்டப்‌பட்டிருந்த தலைவர்... நகைகள் மதிப்பீடு தவறு.. அவை எல்லாம் கவரிங் என்று வாதிட்டு ஒரு வழக்கில் வென்றார்.

செகன்ட் சேனல் போக்கில் விட்டிருந்தால் இதுபோல எல்லா வழக்கிலும் எதிரி வெல்ல உதவிவிடுவார் என்று பயந்த உச்ச அதிகாரர் வடக்கே கடையிலிருந்து பஜ்ஜி+ சொஜ்ஜி என்ற 2 ஜியைத் தந்து அவரின் பசியை ஆற்றினார்.

#in_high_places

வியாழன், 20 ஜனவரி, 2022

கவிதை

பிஸியான சிக்னலில் கையேந்திய ஊனமுற்ற ஒருவருக்காக - காரில் சில்லறை  தேடிக் கண்ணாடி இறக்கி கையளிக்கும் கணம் வரை 
பச்சை விழுந்தும் பதறி ஹாரன் அடிக்காது பொறுமை காத்த 
பின் நின்ற கார் ஓட்டுனர் அழகாக்கினார் இன்று காலையை🙏