வெள்ளி, 13 மே, 2022

#எங்கள்கதை_இதுஉங்களின்கதை_3



நாராயண‌மூர்த்தி என்ற‌ மாத்வர் எங்க ஊரில் இருந்தார். எங்கள்‌குடும்ப நண்பராகிய அவர் ஐயப்பன்‌ கோவிலில் பூசாரியாகவும், குருசாமியாகவும் இருந்தார். ஒவ்வொரு தமிழனுக்கும் 70,80 களில் ஐயப்பன்‌ கோவில் பஜனை என்பது ஆன்மிக ஈர்ப்பாக இருந்தது.

70களில் துவங்கி தமிழகத்தில் திராவிட‌ இயக்கங்களின் உள்ளீடற்ற‌ கோஷங்கள் படிப்படியாக நீர்த்துப்‌போக முதன்மையான காரணி ஐயப்பன் கோவில்கள். (பிறகு 80களில் மேல் மருவத்தூர்) இவை வெகு ஜன இயக்கமாக இருந்தது. 

எங்க அரூர்  அய்யப்பன்‌ கோவில் என்‌ மாமாக்கள், சித்தப்பா இன்னும்‌ ஊர் ஐயப்ப‌ பக்தர்கள் அவர்களின் குழுக்களுடன் நிர்மாணிக்கப்பட்டது 70களின்‌ மத்தியில்.

இன்றிருப்பது போல் இல்லாமல் ஐயப்ப‌ன் கோவில் பஜனைகள் அனைத்து விதமான இந்து பக்தி மார்கத்தவரும்/ சில சமயம் இறை‌மறுப்பாளரும் கலந்து கொண்டு பாடும் வாய்ப்பை வழங்கும் மேடையாக இருந்தது. அந்த சிற்றூருக்கு அது தியாகராஜ உற்சவம்.

காலை என் தாயாரும், அண்ணனும், ( சிணுங்கிக் கொண்டே நானும்..!) திருப்பாவை, திருவம்பாவை மைக்கில் சொல்லப் போவார்கள்.

வழக்கத்திற்கு மாறாக 5 மணிக்கு எழுந்து கோவிலுக்கு வருவதால் 6 மணிக்கெல்லாம் பசிக்க துவங்கி விடும்..

ஏதவன்‌ ஊர்‌ ஏதவன்‌பேர்....என்று இவர்கள் மெய்‌மறந்திருக்க..நானோ..பொங்கல் வைத்திருக்கும் இலையால் மூடப்பட்ட பக்கெட்டையே பார்த்திருப்பேன்.

திருப்பாவை, திருவம்பாவை முடிந்து அப்பாடா என்று ஆசுவாசப்பட்டால்..அம்மா..." கதிரவன்‌ குணதிசை சிகரம் வந்தணைந்தான்..." என்று தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி யை ஆரம்பித்து விடுவார்.

அது முடியும் நேரம் ( நான்தான் புத்தகத்தை வெறித்துப்‌ பார்த்துக் கொண்டிருப்பேனே...?!)
என் அண்ணன் ரெம்ப நல்ல பையனாக மாணிக்கவாசகர்‌ பாடிய " கூவின பூங்குயில்..கூவின‌கோழி..." என்ற‌ மாணிக்கவாசகரின் திருப்பள்ளி எழுச்சியை துவங்கி விடுவான்.

இப்படி துவங்கும் தினசரி காலைகள். 

பெரும்பாலும் அரையாண்டுத் தேர்வு நேரமாக இருக்கும்‌ என்பதால் மதியம் கோவிலுக்குப் போய் ( நாராயண‌மூர்த்தி மாமா) வீபூதி போடும்‌ போது புத்தகத்தை பிரிப்பேன். அது எந்தப் பக்கத்தில் வீபூதி விழுகிறதோ அந்த கேள்வி பரிட்சையில் வரும் என்ற நம்பிக்கை.

மாலை கோவில் களை கட்டும்.

ஊரில் யாருக்கெல்லாம்‌பாடத்தெரியுமோ அவர்கள் எல்லாரும் ஆஜராகி விடுவார்கள். ஆண்களும்‌ பெண்களும் தனித்தனி வரிசையில் இருக்க ஒரே மைக் தான் இருக்கும்.

வள்ளலார் பக்தர் ஒருவர்‌ வந்து மனமுருகி திருவருட்பா பாடுவார்,

" ஞானசித்தி புரத்தனே 
   சர்வசக்தி வரத்தனே...
   தாயின்‌மிக்க நல்லவா..
   சர்வ சித்தி வல்லவா..
நீ என்‌அப்பன்‌ அல்லவா..
நினக்கும் இன்னும்‌ சொல்லவா...""
எந்தையே....என் தந்தையே...!"

பெரும்பாலும் 24 மனை தெலுங்கு செட்டியார்‌ சமூகத்தவர் தான் எங்க ஊர்‌ ஐயப்ப‌ பக்தர்களில் அதிகம்‌ பாடுவார்கள்.
ஒரு ஒருவருக்கும் ஒரு‌சில சிக்னேச்சர்‌ பாட்டு இருக்கும்.
ஒருவர் தாஸ் ஸ்டூடியோ என்று போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்தார்.
மற்றவர் நர்சரி‌ வைத்திருந்தார்.
இன்னொருத்தர் எல்
ஐசியில், ஒருவர்‌ கவுண்டர் சேகோ ஃபேக்டரி‌ வைத்திருந்தார்.

மற்றொரு அண்ணன் கனரா‌வங்கி ஊழியர். சிவப்பு சித்தாந்த, கருப்பு கொள்கை உடையவர். ஆனால் பாட்டுப்‌பாடும் திறமை மிக்கவர்‌. அந்த வாய்ப்பை பலர்‌முன் வெளிப்படுத்த வாய்ப்பாக இந்த ஐயப்ப‌ பஜனையை‌ பயன்‌ படுத்துவார்.

பல நேரம் ஊருக்கு புதிதாக வங்கியில், எல்ஐசி என்று மாற்றலாகி வரும் புதுமுகங்கள் தட்டுப் படுவார்கள், பாடுவார்கள்.

கணபதியில் ஆறரை‌ மணிக்குத் துவங்கினால் குரு, சரஸ்வதி, என்று பயணித்து ஐயப்பனில் நிறைந்து ஆஞ்சனேயரில் முடியும்.
பிறகு தீபாராதனை, அன்னதானம் என்று முடிய 10 மணியாகும்.

இந்த பஜனைப் பாடுகையில் டங் ட்விஸ்டரும் உண்டு.

உன்‌ நாமம் என்‌நாவில் என்னாளும் தங்கிட
என்‌நாவில் என்னாளும் உன்‌ நாமம் தங்கிட
என்‌நாவில்  உன்‌ நாமம் என்னாளும் தங்கிட
என்னாளும் என்‌நாவில்  உன்‌ நாமம்  தங்கிட
என்னாளும்   உன்‌ நாமம்  என்‌நாவில் தங்கிட
உன்‌ நாமம்  என்னாளும் என்‌நாவில் தங்கிட

என்று‌பல பெர்முடேஷன் காம்பினேஷனில் வார்த்தைகளை மாற்றி மாற்றி ஆனால் பொருள் மாறாமல் வாய் திக்காமல் ஒருவர்‌ பாட மிகுந்த அவேர்னஸுடன் பாடலைத் தொடர்பவரே பிழையில்லாமல் பின் பாட்டு பாட‌ முடியும். (இல்லா விட்டால் உன்நாவில் என்‌நாமம் என்று இறை‌ நிந்தனையாகி விடும் .)

சம்போ கங்காதரா..கௌரிமனோகரா
கௌரி‌மனோகரா கங்கா ஜடாதரா..
என்று‌ அந்தப் பஜன் பாடல் தொடர்ந்து  போகும்!

இப்படி எங்க ஊர் ஐயப்பன் கோவிலில் ஆர்வமாக இருந்ததால் மேற்‌சொன்ன குடும்ப‌ நண்பர்‌ (குருசாமி) என்‌மீது அன்போடு இருப்பார். எங்க‌ குடும்ப பசங்களை எல்லாம் " மாப்ளே" என்று பலே பாண்டியா‌ ராதா போல அழைப்பார்.( அவருக்கு பெண்பிள்ளை இல்லை என்பது உபரித் தகவல்!)

நான் 10 வது படித்தது ஏற்காடு மான்ட் போர்டு குரூப்பை‌ சார்ந்த மேட்டூர் அருகில் உள்ள கொளத்தூர் நிர்மலா பள்ளி. விடுதி மாணவன்‌ நான்.

ஆண்கள்‌ பள்ளி ஆனாலும் 11,12 ம் வகுப்பு மட்டும்‌ கோ.எட். பத்தாவது 12 வது மாணவர்களை பெரும்பாலும் மைதானத்தில் போய் படிக்க விட்டுவிடுவார்கள். நான் மைதானத்தின்‌மறுகோடியில் அமர்ந்து படிக்கும்‌போது அந்தக் கிறித்துவப் பள்ளியின் சூழலுக்கே பொருந்தாத காவி வேட்டி‌, காவி‌ஜிப்பா நீள்தாடி நீள்‌முடியுடன் ஒரு‌உருவம் கிரவுண்டு நுழைவாயிலில் நுழைந்தது.

எதோ வேலையாக மேட்டூர்‌ வந்த நாராயணமூர்த்தி மாமா ( குருசாமி) என்னைப் பார்க்க கொளத்தூர்‌ பள்ளிக்கு வந்திருக்கிறார்.

என் வீட்டிலிருந்து யாரோ ஒருவரை பார்த்த‌து போன்ற‌ மகிழ்வில் நான் அவரை நோக்கி ஓட, 
என்னைப் பார்த்து விட்ட அவரோ..சந்தோஷம் தாங்காமல் இடம் பொருள்‌ மறந்து நடு கிரவுண்டில் 
" மாப்ளே..." என்று சத்தமாக கூவ..
புட்பால் கோல் போஸ்ட் அருகில் அமர்ந்து  படித்துக் கொண்டிருந்த சுமார்‌ ஆறேழு 12 வது வகுப்பு மாணவிகள் கொல் என்று‌ சிரிக்க...

பத்தாவது படிக்கும்‌ பால்முக மாணவன்
பட்டபாட்டை என்னென்பேன்! ஏதென்பேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக