வியாழன், 21 ஏப்ரல், 2022

#ஒவ்வொருவரிடமும்_ஒருநல்லகதை_உள்ளது_12


என் சித்தப்பா ஒருவர் சிவில் இன்ஜினியராக திருச்சியில் தனியார் காண்ட்ராக்டரிடம் பணியாற்றி‌ வந்தார்.
பல அருமையான வாய்ப்புகளைப் பெற்றார்..ஆயினும்‌ எதையும் தக்கவைத்துக் கொள்ளவில்லை.

தில்லை நகரில் குடியிருந்தார்.

அப்போதைய தில்லை நகர் பெரும்பாலும் வயல்களும் அங்கொன்று‌ இங்கொன்றாக வீடுகளும் கொண்ட ஒரு வளரும் புறநகர்.

நாங்கள் எங்க வீட்டிலிருந்து மலைவாசல், மெயின்கார்டு கேட் போய் கோட்டை ஸ்டேஷன் வழியாக குறுக்கால பூந்து சில  சாலைகள் வரப்புகள் கட்டப்படும் வீடுகள் வழியே சித்தப்பா வீட்டை அடைந்து விடுவோம்.
பத்மாமணி டாக்கீஸ் எல்லாம் சற்று அருகில் இருக்கும்.
அதில்தான் அம்மாவுடன் அபூர்வராகங்கள் பார்த்தேன்.

சித்தப்பா கலையரங்கம்‌ கட்டும்போது அதில் வேலை பார்த்தவர்.

மரக்கடையில், மேலே தண்ணீர் டாங்கும் கீழே வணிக வளாகமும் இருக்குமாறு புதுமையாக ஒரு‌கட்டிடம்‌‌ கட்டினார்கள்.
தமிழகத்திலேயே அது தான் முதல் என‌ நினைக்கிறேன்.

அதில் இன்ஜினியராக பணியாற்றிய‌ என்‌சித்தப்பா ஒரு தவறு செய்தார்.

ஒருநாள்....
" ஏண்டா வீட்ல லீவுல போரடிக்குதா...? அப்பிடின்னா என்னோட‌ வர்றியா..?"

உடனே அவருடன்‌ ஒர்க் சைட்டுக்கு கிளம்பி விட்டேன்.
ஒர்க் சைட்டில் சிறிய‌ கூரைக் கொட்டாய்..
நான்‌ ஒரு‌ மடக்கு சேரில் உட்கார்ந்தேன்.
அங்கு எந்த ஸ்வாரசியமும் தட்டுப் படவில்லை.

குழந்தை போரடிக்கிறானே என்று பரிதாபப்பட்ட சித்தப்பா இன்னொரு தவறு செய்தார்.
 ஜில்லென்று ஒரு‌நன்னாரி சர்பத் வாங்கித் தந்தார்.

அதன் பிறகும் நான் உம்மென்று இருக்க அவர்‌ மூன்றாவதாக ஒரு தவறு செய்தார்.

பக்கத்துல பிரபாத்துல கூட்டிட்டு போய் தியாகம் சினிமாக்கு டிக்கட் வாங்கித் தந்துவிட்டார். அவருக்கு பிரச்னையில்லாமல் வேலையை கவனிக்க வேண்டிய அவசரம்.

எனக்குள் இருந்த சாத்தான் இளிக்க‌ ஆரம்பித்தான்.

அடுத்த நாள் அவர் காலையில் பணிக்கு கிளம்புமுன் நான் தயாராகி நின்றேன்.

அவருக்கு ஒரே தர்ம‌சங்கடம். அண்ணன் குழந்தையான நாங்களே செல்லம் என்பதால் திட்டுவதில்லை.

ஆனால் கொஞ்சம் கடுகடுத்த முகத்தோடு அழைத்துச் சென்றார். இன்றும்‌ நன்னாரி‌ சர்பத்.
ஜுபிடரில் 'சகோதர சபதம்'.

மூன்றாம்‌ நாளும் காலையில் சினசியராகக் கிளம்பி நின்றேன்.
சித்தப்பா எவ்வளவோ சமாளித்து தடுத்துப் பார்த்தார்... ஊஹூம்!

புன்னகை மன்னன் ஸ்ரீவித்யா சிறுவனுக்கு தந்த ட்ரீட்மெண்ட் அம்மாவால் எனக்கு வழங்கப்பட்டது. 🤣

அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு‌முறை இதே சித்தப்பா ஸ்ரீரங்கம் கோவிலில் கட்டிடப் பணியில் இருந்தார். அப்போது கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் அருகில் இருந்த இடிபாடுகள், மண் மேட்டை அகற்றும் பணியில் இருந்தபோது  ஒரு‌ அற்புதம்‌ வெளிப்பட்டது.

அந்த மண்மேட்டின் அடியில் ஒரு‌ ரதம் போன்ற அமைப்பு வெளிப்பட்டது.
அந்த ரதம் இரண்டு‌யானைகளால் இழுக்கப் பட்வது போலவும், யானைகளை வேல் ஏந்திய வீரர்கள் வழி நடத்துவது போலவும் இந்த அமைப்பு இருந்தது.ஆயிரம் கால் மண்டபம்‌ என்னும் தேரை யானைகள் இழுப்பது போலவும் அழகிய கற்பனையுடன் வடிவமைக்கப்‌ பட்டிருந்தது...,
மண்நீக்கப்பட்டு வெளிவந்தது.

இதில் கவனிக்கவேண்டிய அழகு யானைச் சிற்பங்களின் நெற்றியில் திருமண் பூசவில்லை. திருநீற்றுப் பட்டை செதுக்கப்பட்டிருந்தது!( பெருமாள்‌ கோவிலில்..)

இது ஒரு அதிசயமாகவும், அகழ்வாய்வு ஒரு சுவாரஸ்யமாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்தது. 

அதே காலகட்டத்தில் புதுக்கோட்டை மெய்வழிச்சாலையில் ஆண்டவர் ஆஸ்ரமம் பற்றியும் பரபரப்பாக தினசரிகளில் வெளி வரும்.

வழக்கமாக முத்தங்கி சேவைக்கோ, வேடுபரிக்கோ டி.ஏ.எஸ் ரத்தினம்‌ பட்டணம்‌ பொடி‌ விசிறியுடன் கூட்டத்தில் நசுங்கிப் போகும் நாங்கள் அந்த முறை சித்தப்பா தயவில் வி.ஐ.பி‌ மரியாதை பெற்று கோவிலுக்குப்‌ போனோம்.

கருவறை தங்க விமானம்‌ அருகில் போய் தொட்டு சேவிக்கும் பாக்கியம் எனக்கும்‌ என்‌அண்ணனுக்கும் கிடைத்தது. 

அதன்‌பிறகு இப்போது புதுப்பிக்கப்பட்ட பின்‌ சமீபத்தில் போனமாதம் 21 கோபுரமும் ஒரே வரிசையில் பார்க்கும் பேறு கிட்டியது.

ஏன்‌ ஸ்ரீரங்கம்‌கோவில் நமக்கு ஸ்பெஷலாக இருக்கிறது என்று சுஜாதா எழுதியது நினைவில் வந்தது.
வெள்ளைக் கோபுரம்‌ பார்த்து திருவரங்கன் உலா நினைவு வந்து மனம் கனத்தது.

"எந்தை தந்தை தந்தை-தம் மூத்தப்பன் ஏழ் படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் ..
..........................  ................   ..............
பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்று பாடுதுமே"


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக