ஞாயிறு, 10 அக்டோபர், 2021

ஜெயங்கொண்டார் கண்ணதாசன்‌ பாலு

ஆரம்ப 70களின் பாலு குரல் என்னை எனது பால்யத்துக்கு டைம்‌மெஷினில் அழைத்துச்‌ செல்லும். அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றான " ராதா காதல் வராதா..." பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

முதல் கோரஸ்...
"கோகுல பாலா...கோமகள்‌ ராதா... ஆயர்கள்‌ பாலா..ஆனந்த ராதா.... " முடிந்ததும்,

 ஹே..ராதா.....ஆ..ஆ...ஆஆ....என்று ஒரு ஹிந்துஸ்தானி ஸ்டைலில் உச்ச ஸ்தாயியில் எடுப்பார். அதைக்கேட்கும் போது ஆறேழு வயது சிறுவனாக சின்னக்கடைத் தெருவில் 
விளையாடிக் கொண்டிருந்த காலத்திற்கு டைம் டிராவல் போய்விடுவேன்❤️

"செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாளை தாலாட்டும்
புல்லாங்குழல்......" 

இந்த வரி‌முடிவில் அந்த 'ல்...' என்ற எழுத்தில் ஒரு லாங் சிக்ஸர் அடிப்பார்.

செந்தூர நதி
ஓடும் செவ்வாயின்
இதழோரம் கண்ணா
உன் காதல் கடல்....அப்படியே நெகிழ்த்தி மயக்கி வருடுவார்...

இடையணி இருக்க 
உடை மட்டும் நழுவும்...
இடையணி இருக்க 
உடை மட்டும் நழுவும்...

சுகம் என்ன
சொல்லடி ராதா ராதா
சுகம் என்ன சொல்லடி
ராதா....என்று சற்றே தயங்கிப்‌ பின்‌ கல கலவெனச்‌ சிரிக்கும் சிறுமி‌ போல....அணையுடைத்து வரிகள்‌ வரும் அழகே தனி...

இவை எல்லாவற்றையும் சிருஷ்டித்த எம்எஸ்வி இருக்குற எடம் தெரியாமல்   ஒவ்வொரு சங்கதியிலும் கண் சிமிட்டுவார்.❤️🙏🙏

மறுபடி அந்த ....
'செம்மாந்த மலர்சூடும் பொன்னார்ந்த குழலாளை..'என்னும்‌ வரிகளைப் பாடிப் பாருங்கள்..!

சொற்சுவை பொருட்சுவை என்று திருவிளையாடலில் சிவாஜி அடுக்குவாரே....அந்த இரண்டும்‌ போட்டியிட்டு புரண்டோடும்‌ வரிகள்!

இந்த பல் உடைக்கும் 'நாமுறுக்கிகளை'( டங் ட்விஸ்டர்ஸ்😁) அனாயாசமாக பாடுவது பாலுவுக்கு ஒரு வீரவிளையாட்டு.

இப்பாடலின்‌ அடுத்த வரிகளான..

"இடையணி இருக்க உடை‌மட்டும்‌ நழுவும்..." என்ற‌வரிகள் எங்கோ பொறி தட்டியது.

அட! ஆமாமுல்ல?❤️ என்று மனம் பொங்கித் ததும்பியது.

❤️கலிங்கத்துப்பரணி:-❤️

காஞ்சி இருக்கக் கலிங்கங் குலைந்த
        கலவி மடவீர் கழற்சென்னி
காஞ்சி இருக்கக் கலிங்கங் குலைந்த
   களப்போர் பாடத் திறமினோ"

இது கலிங்கத்துப் பரணியில்  #செயங்கொண்டார் கடைத்திறப்பு என்ற பகுதியில் அமைத்த பாடலின் வரிகள்.

குலோத்துங்க‌ சோழன் காஞ்சியில் இருக்க ( அவனது தளபதி கருணாகரப் பல்லவனால்) கலிங்கம் குலைந்தது.....என்று ஒரு‌ பொருளிலும்,

 பெண்கள் இடையில் அணியும் காஞ்சி என்னும் அணிகலன் இருக்க கலிங்கம்‌ என்ற ஆடை குலைந்த கதையை என்று இன்னொரு பொருளில் குறும்பாகக் கூறுகிறார்.

இப்படியான ரத்தினங்களைப்‌ படித்தவர்கள் இதை எப்படி வெளிப்படுத்தாமல் எப்படி ஆவலை அடக்க முடியும். 

சினிமாவுக்கேற்ப...
" இடையணி‌இருக்க‌ உடை‌மட்டும்‌ நெகிழும் சுகம் என்ன‌ சொல்லடி‌ ராதா..." என்று தெளித்து விட்டார் கவியரசர்.

பரணிக்கோர் செயங்கொண்டார் எனில் திரைப்பாட்டுக்கோர் கவியரசர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக