வெள்ளி, 29 அக்டோபர், 2021

சங்கராபரணம்.

சங்கராபரணம் என்றால் எஞ்சோட்டு ஆட்களுக்கு மெகா ஹிட் அடித்த தெலுங்கு சினிமா தான் தெரியும். அது ஒரு மேளகர்த்தா ராகத்தின் பெயர் என்று  நீங்கள் சொன்னால்
 'எனக்குத் தெரியாது, நான் வெளியூரூங்க" என்று சொல்வோம்.

அதற்கு முன்பு வரை தெலுங்குப் படம் என்றால் இடுப்பைக் காட்டியபடி ஜெயமாலினி டான்ஸ் ஆடும், குட்டிப் பேய் காமடி பண்ணும் விட்டலாச்சாரியா படம் தான் என்று  எங்க ஊரில் ஐதீகம். டப்பிங் என்றாலே தெலுங்கு டப்பிங் என்று தமிழ் கூறு நல்லுலகம் நம்பிய‌காலமது. (கோனார் என்றால் நோட்ஸ் என்று நம்பியது போல)

இன்றும் நன்கு நினைவு இருக்கிறது விகடன் விமரிசனத்தில் 'இப்படத்திற்கு காமிரா நம்மூர் பாலுமகேந்திரா' என்று சிலாகித்திருந்தார்கள்.

சோமயாஜுலுவுக்கு திருச்சி கலையரங்கத்தில் கட் அவுட் இருந்ததைப் பார்த்த ஞாபகம்.

ஜனம் ஓஹோ என்று‌ புகழ்கிறதே என்று பார்த்தால் எனக்கு அந்த வயதில் ஸ்ரீப்ரியா நடித்து வந்த தெலுங்கு டப்பிங் படமான தாசரி நாராயணராவ் இயக்கிய நட்சத்திரம் மிகப் பிடித்தது என்று சொல்ல நான் வெக்கப்படல, வேதனைப்படல, வருத்தப் படறேண்டா கண்ணா..!
வருத்தப் படறேன்!

ஆனால் சிறுவயதில் கர்நாடக சங்கீதம் கற்காமல் அதைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் மாமாக்கள் எல்லாம் புரோசேவாரெவருரா...என்று ஆலாபனை செய்து கொண்டு கெத்து காட்டிக் கொண்டிருந்தார்கள்.

எனக்கோ ப்ரோ..சே..வா..ரெவருரா..சச்சச்சச்சா
நினுவினா..சச்சச்சச்சா..
ரகுவரா..சச்சச்சச்சா..என்று‌ பாடுவதே பிடித்தமாய்‌ இருந்தது.

"எப்படியோ பாடு சுண்டல் வேணும்னா‌ பாடணும்' என்ற நவராத்திரி கொலு 
இக்கட்டுக்கு இந்த 'சச்சச்சச்சா' தான் கை கொடுத்தது..ஸாரி சுண்டல் கொடுத்தது. 

இது பக்திப் பாடல் என்றால்
பக்கத்து வீட்டு சேட்டு சந்தேகமாக ..ஸச்? என்றார்..
நான் ஜுட் விட்டேன்!

இந்தப் பட தெலுங்கு கீர்த்தனைப் பாடல் எவ்வளவு தரை லோக்கலாக ஃபேமஸ் என்றால்.....
ஒரு‌முறை என் அண்ணன் என்னிடம்,
" டேய் மோகா..முதலியார் வீட்டு  குணாவிடம் ஒரு‌பாட்டு மட்டும் பாடாதே..உன்னை தர்ம அடி போட்ருவான்!"

என்ன‌பாட்டு?

'தொர குணா'...இதுவன்டி‌சேவா...!

இன்று வரை குணாவைப்‌ பார்க்கையில் சங்கராபரணத்தின் காலம் கடந்த தன்மையை உணர்கிறேன்.

உள்ளபடியே தென்னிந்திய‌சினிமாக்களை இந்து பாரம்பரிய உயர்வை விழுமியஙக்ளை நோக்கித் திருப்பியதில் சங்கராபரணத்திற்கும்
கே.விஸ்வநாத்திற்கும் பெரும் பங்கு உண்டு.

தமிழ் திரையலகில், ஒரு கிராமத்துக்கு ஒரு வாத்யார், டாக்டர், என டவுன்காரர் வருவார் என்ற‌ ஃபார்முலாவை மாற்றி ஹீரோ ஒரு‌ சங்கீத கலைஞர்ங்க என்று கதை சொல்லிகளை கட்சி மாற்றிய பெருமை சங்கரா‌பரணத்திற்கு உரியது.

இந்தப் படத்தில் எஸ்.பி.பி செய்திருப்பது அதகளம். ஷெங்கரா....நாத சரீராபரா...என்று அவருக்கு ஒரு மாஸ்டர்‌பீஸ் பாடலும்,
ஓம்கார‌நாதானு சந்தான...என்றும்.
ஸாமஜவரகமனா..என்று எஸ்.ஜானகி      அசால்ட்டாகப் பாடிய பாடலை சமீபத்தில் எஸ்.பி.ஷைலஜா ஒரு‌மேடையில் பாடுகையில் மூச்சு கண்ட்ரோல் பண்ண அதீத முயற்சி எடுப்பது கண்டு ஜானகி அம்மாவை பிரமித்தேன். இந்தப்படத்தில் எஸ்.பி.பி க்கும் வாணி அம்மாவிற்கும் தேசீய விருது👍

தமிழ் நாட்டில் புகழேந்தி என்ற‌பெயரில் யாரைத் தெரியும் என்றால் நள‌வெண்பா எழுதியவர் என்று சிலரும், எதாவது இளம் சினிமா டைரக்டரா என்றுசிலரும் கேடகலாம்.
ஆனால் இன்றும் ஆந்திராவில் சினிமா‌ ரசிகர்களுக்கு அறிமுகமானபுகழேந்தி என்னும் பெயருக்கு உரியவர் கே.வி
மகா தேவனின் உதவியாளர் டி.கே.புகழேந்தி  தான்.
தன்னை சங்கராபரணம்‌ போன்ற‌ கர்நாடக சங்கீத சினிமாவில் பாடல்களைப் பாட இழுத்து வந்தவர் டி.கே.புகழேந்தி என்று பலமுறை எஸ்.பி.பி கூறியுள்ளார்.

கே.விஸ்வநாத் - கே.வி.எம்
கே.விஸ்வநாத் - இளையராஜா 
எது பெஸ்ட் என்ற‌கேள்விக்கு பின்னாளில் அரசு‌ பதில் முதல் ஜோடிதான் என்று தீர்ப்பு வழங்கியது.

மாமன்‌ வூடு மச்சி‌வூடு பரிசம் போட்டது குச்சி வூடு ...என்ற‌ இளையராஜா இசைத்த அன்றைய கானா பாடலில் "சங்கராபரணம்‌ மார்ரீ ரீஜன்ட்டா..அடிங்கடா.." என்று குப்பத்து கமல் வசனம்‌ பேசுவார்.

அந்த அளவு அடித்தட்டு வரை தமிழகத்திலும் சங்கராபரணம் ரீச் ஆகியிருந்தது.

சங்கராபரணம் பாட்டுப்புத்தகம் வாங்கி தெலுங்கு வரிகளை மனப்பாடம்‌ செய்தேன். ( ஷோலே பாட்டு புத்தகம் வாங்கி இந்தியைக் கொலை பண்ணான்‌ இப்ப தெலுங்குக்கு போறாத வேளை - என் அம்மாவின் இந்தக் குரல் இன்னும் காதுகளில்)

ஒரு கலைப்படைப்பை பாமர‌ மக்கள் வரை கொண்டு சென்ற நுட்பம் கே.விஸ்வநாத் அவர்களுக்கே உரியது. மேற்குலக கதைக்களத்தை அடியொற்றிப் பயணித்த தென்னிந்திய‌ சினிமாவை இந்திய வேர்களில் சிலகாலமேனும் நிற்கச் செய்த பெருமை சங்கராபரணம் திரைப்படத்திற்கு நிச்சயம் உண்டு.

https://youtu.be/RzpY7yMWwyI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக