ஞாயிறு, 25 ஜூலை, 2021

திட்டு இலக்கியம்

வைதாலும் வைகைத் தமிழ்
கடிந்தாலும் காவிரித்தமிழ்
திட்டினாலும் தாமிரபரணித்தமிழ்.

திமுகவிலிருந்து மனக்கசப்போடு வெளியேறிய‌ கண்ணதாசன் அண்ணாத்துரை‌‌ மேல் தான் கொண்ட கோபத்தை 'படித்தால் மட்டும்‌போதுமா?' படத்தில் ஒரு வாய்ப்பு வந்த போது தீர்த்துக் கொண்டார்..

அண்ணன் காட்டிய வழியம்மா - இது
அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா - என்
கையே என்னை அடித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்
அண்ணன் காட்டிய வழியம்மா

அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்துவிட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகளை முறித்து விட்டான்
அண்ணன் காட்டிய வழியம்மா

அவனை நினைத்தே நானிருந்தேன் - அவன்
தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான்
இன்னும் அவனை மறக்கவில்லை - அவன்
இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை  ..........( அண்ணன்)                                                                                          

உடனே 'சிலர்' இந்தப் பாடலை அண்ணாத்துரை அவர்களிடம் காட்டி 
வத்தி வைத்தனராம்

" திட்டினாலும் நல்ல தமிழில் தானடா திட்டியிருக்கிறான்‌ தம்பி" என்று கூறினாராம் அண்ணா.

இதைப்போல தமிழ் இலக்கியங்களில் 
திட்டு இலக்கியம் என்றே வகைப் படுத்தத்தக்க அளவில் பல பாடல்கள்‌ உண்டு.

வைணவ இலக்கியங்களில் வல்லுநர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்! 

அஷ்ட பிரபந்தங்களான திருவரங்கத்தந்தாதி, திருவரங்கத்துமாலை, திவரங்கக்கலம்பகம், திருவரங்கநாதர் ஊசல் திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி நூற்றியெட்டுத் திருப்பதி அந்தாதி எனும் பாசுரங்களைத் தமிழுக்கு அளித்தவர். 

திருவரங்கநாதன் மேல் தீராத பக்தி கொண்டவர். பாடியே திட்டினாலும் தித்திக்கும் செந்தமிழ்ப்பாடல்கள் இவை:

திரு அரங்கநாதரின் ஆசியால் அவதரித்த மறவர் குலத்தில் பெண் கேட்டு ஓர் அரசன் “திருமுகம்’ (தூதுஓலை) அனுப்புகிறான். 

வந்த தூதுவனிடம் “என்ன துணிச்சல் இருந்தால், எம் குல மங்கையைப் பெண் கேட்டுத் திருமுகம் (ஓலை) அனுப்புவான்?’ என வெகுண்டு....

"கொற்றவன் தன் திருமுகத்தைக் கொணர்ந்த தூதா!
குறை உடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்!
(அற்றவர்சேர் திருஅரங்கப் பெருமாள் தோழன்அவதரித்த திருக்குலம் என்றறியாய் போலும்!)
மற்றதுதான் திருமுகமே ஆனால் அந்தவாய், செவி, கண், மூக்கு எங்கே? மன்னர் மன்னன் பெற்ற இளவரசு ஆனால் ஆலின் கொம்பைப் பிறந்த குலத்தினுக்கு ஏற்பப் பேசுவாயே!

பொருள்:
தூதுவனே! கொற்றவனின் “திருமுகம்’ இங்கே கொண்டு வந்துவிட்டாயே! மீதியுள்ளது குறையுடல்தானே?தலையில்லாத முண்டம்தானே அங்கே இருக்கும்? அதற்கா மறக்குலக் கொம்பைப் பெண் கேட்டு வந்துள்ளாய்? 

 ஆசையற்றவர் சென்று சேரும் திருவரங்கப் பெருமாளின் தோழன் அவதரித்த குலம் இது. 
 இதை நீ அறியவில்லை போலும்.

சரி! சரி வந்துட்டே! இது இளவரசன் திருமுகம் என்றால் முகத்திலிருக்க வேண்டிய உறுப்புகளான வாயைச் செவிகளைக் கண்களை, மூக்கு எதையும் காணோமே! ஆனாலும் மன்னாதி மன்னன் பெற்ற இளவரசுதான்! ஆனால் அரசுக்கேற்றபடி ஆலமரத்தின் கொம்பைத் குலக்கொழுந்தைப் பெண் கேட்கப்போ! என அலட்சியமாகப் பதில் கூறுவதாகப் பாடல்! 

அரசும் ஆலும் கோவில்களில் இருக்குமல்லவா? அது போல என்றார். 

அரங்கபக்தனுக்கு அரசன் தூசி போன்றவன்.
விட்டாரா தூதர்? துறவிக்கு வேந்தன் துரும்பு! என்பது பழமொழியன்றோ? திருமணத் தூதராக வருவோர் சாமர்த்தியசாலிகளாகவே இருப்பதுண்டு. காரியம் ஆகணுமே! அப்படியே நின்றார்! வந்த வேளை சரியில்லையோ? நொந்த நெஞ்சோடு திரும்பலாமோ? கெஞ்சுவதுபோலத் தன் பார்வையைச் செலுத்தினார். 

“என்ன நிற்கிறாய்! வா! வா! வந்து பார்த்துச் செல்! பார்த்ததை உங்கள் அரசனிடம் சேர்த்துச் சொல்! எங்கள் குலக்கொழுந்தைப் பெண் கேட்டு வந்தவங்க நிலைமையினை மாளிகை முழுவதிலும் வந்து பார்த்துச் செல்!’ என அழைத்துக் கூறிய காட்சி:

பேசவந்த தூத! செல்லரித்த ஓலை செல்லுமோ?
பெருவரங்கள் அருள்அரங்கர் பிள்ளைகேள்வர் தாளியே
பாசம் வைத்த மறவர் பெண்ணை நேசம்வைத்து முன்னமே
பட்டமன்னர் பட்டதெங்கள் பதிபுகுந்து பாரடா!
வாசலுக்கு இடும்படல் கவித்து வந்த கவிகையே!
மகுடகோடி தினை அளக்க வைத்த காலும்நாழியும்
வீசுசாமரம் குடில் தொடுத்த கற்றை சுற்றிலும்
வேலிஇட்டது அவர்கள்இட்ட வில்லும் வாளும் வேலுமே!

பொருள்: திருமணம் பேச வந்துள்ள தூதுவனே! ஓலைச் சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதுவது அஞ்சல்! அது செல்லரித்து போல் புள்ளிப்புள்ளியாகத் தோன்றும்! கேலி பேசுவது போல இந்த செல்லரித்த ஓலையைக் கொண்டு வந்திருக்கிறாயே? இது செல்லுமோ? செல்லாத ஓலையாச்சுதேயடா? பெரிய பெரிய வரங்களை எல்லாம் வழங்கி அருள் தரும் திரு அரங்கநாதர் மேல் பக்தி மிகுந்த பாசம் கொண்ட குலப் பெண்ணை விரும்பி முன்பு வந்து பெண்கேட்ட பட்டத்து இளவரசர்கள், பட்டபாட்டை எங்கள் மாளிகையில் புகுந்து வந்த பாரடா! அங்கே நுழைவாசலுக்குப் படல்வேலியாக இட்டிருப்பது வந்தவர்களின் மகுடங்களே! நாட்டுப்புறங்களில் வேலிகளில் பானைகளைக் கவிழ்த்து வைப்பதுண்டு! அது போலவே நாங்கள் மகுடங்களைக் கவிழ்த்து வைத்துள்ளோம் அவர்கள் சூடியிருந்த கிரீடங்களை, விளைந்து வந்துள்ள தினைகளை அளக்க உதவும் மரக்கால்களாகவும், நாழியாகவும் பயன்படுத்துகிறோம். அவர்களின் கிரீடங்களில் சூடி இருந்த கற்றை முடிகளைக் கைப்பற்றி எங்களின் சாமரமாக்கியுள்ளோம், விசிறிபோல் வீசுவதற்கு! மாளிகையைச் சுற்றிலும் வேலிபோல ஊன்றி வைத்திருப்பது அவர்கள் கொண்டு வந்து வில்லும், வாளும் வேலும்தான்! ஆழ்ந்த பக்தியால் அடைந்த வீரம் இது!

திட்டினாலும் தித்திக்கின்றதல்லவா? அதுதான் தமிழ் இலக்கியங்களின் பெருமை!

பி.கு: கடிதத்துக்கு வடமொழியில் ஸ்ரீமுகம் என்பர். அது தற்பவமாக திருமுகம்‌ என்று தமிழில் வரும்.

இந்தப்பாடல் எனக்கு எட்டாம் வகுப்பு தமிழில் செய்யுள்‌பகுதியில் வரும். ஆனால் மேலே அடைப்பபுக்குள் இருக்கும் வரிகள் ஏனோ பாட‌ புத்தகத்தில்  வெட்டியிருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக