சனி, 19 ஜூன், 2021

அப்பாவின் கிச்சன்.

அப்பாவின் கிச்சன்.

அப்பாக்களின் சமையல் என்பதே குழந்தைகளுக்கு என்றும் அலர்ஜியாக இருக்கும்.
ஏதோ ஒரு காரணத்தால் அம்மா வீட்டில் இல்லை என்றால்..அன்றைய‌ போது விடியாமல் இருந்திருக்லாம் என்று தோன்றும்.

அம்மா வீட்டில் இல்லாத ஜிஎஸ்டிக்கு  சர்சார்ஜாக அப்பா சமையல் செய்வதையும் சாப்பிட வேண்டும்.

அலுவலகம் போகும் அவசரத்தில் திடீரென‌ வந்த அடிஷனல் சார்ஜ் தரும் பணி அழுத்தத்திலும் அவர் இயல்பைவிட அதிக கடுமையாக இருப்பதாகப் படும்.
பிள்ளைகளின் மார்னிங் சிக்னஸை அப்பா என்றுமே உணர்வதில்லை.
அதனை அஃபீஷியலாக டீல் செய்வதில் பிள்ளைகள் மேலும் மனச்சோர்வு அடையும்.

அம்மா வீட்டில் இல்லாததே பள்ளிக்கு லீவு போட போதுமான‌ காரணமாயிருக்கும். "அடிபட்டதோடு அவமானமும் பட்டது போல" அன்றையதினம் வகுப்பில் தேர்வும்‌ இருந்தால்..?  சுத்தம்!

இந்த இரட்டை பளுவைத் தன்னிடமிருந்து மிருதுவாகத் தாங்கும் மனநிலையில் அப்பா இருக்க மாட்டார்.
கலியாண வீட்டிலேயே கதறி அழுபவன் எழவு வீட்டுக்கு வந்தால்...கதையாக, அம்மாவின் அருமையான‌ சமையலையே அழுது கொண்டு சாப்பிடும் குழந்தைகள் அப்பாவின்‌ சமையலை..?
பீமனும்‌ நளனும் 
பெண்களைப்‌ போலே 
சமையல் செய்து பேரெடுத்தார்.. பானையும் பிடித்து 
வாளையும் பிடிக்கும்‌ 
சாதிக்கு இணையோ பெண்குலத்தார்?
என்று எம்ஜிஆர் பாடிட்டு‌ போய்விட்டார்.
இங்கு பானையை வாள்போலப் பிடித்தால் ரசத்தில் ரத்தம் தான்‌ வரும்.
ஒரு வழியாக கிளம்பி பள்ளிக்கு சென்றுவிட்டு அங்கு மதியம் டிபன்பாக்ஸை மறைத்து மறைத்து திறந்தாலும் கருகிப் போன‌ கத்தரிக்காய் பொரியல் படக்கூடாத எனிமியின்‌ கண்ணில் கரெக்டாகப் பட்டு மானமே போய்விடும்.
(அப்பாவுக்கும் சட்டையில் மஞ்சள் தூள கறை‌பட்டு அலுவலகத்தில்  கிண்டல்கள் தாங்கியிருப்பார் )
மாலை வீடு திரும்பும்‌ போதாவது அம்மா இருப்பார் அருமையான‌காப்பி கிடைக்கும் என்று வந்தால் ஏமாற்றமே.
அம்மா ஊரிலிருந்து வந்திருக்க‌ மாட்டார்.
கோபமும்‌ அழுகையும் கலந்து வரும்.
ஆனால் அம்மா எதற்காக வெளியூர்‌ போனார்..அது எந்த அளவு அவருக்கு அத்தியாவசியமான பயணம் என்பதைப் பற்றி அன்று கவலை இருந்ததில்லை. நமது வசதிக் குறைவே பிரச்னையாகத் தெரிந்தது.
அதனை அன்பு‌என்று தவறாக புரிந்து கொண்டோம் ..இரு தரப்பிலும்.!
அம்மா வந்து சமைத்தவுடன்‌ அப்பாடா! இப்பதான் ரசம் சாப்பிடற‌ மாதிரி‌ இருக்கு என்று அப்பாவை கலாய்ப்பதில் சின்னப் புன்னகையுடன்  அம்மாவும்‌ இணைந்து குழந்தைகளை விட்டுவிட்டு வெளியூர்‌‌ போய் வந்த பதற்றத்தையும் குறைத்துக் கொள்வார்.

பின்பொரு காலம் ஹாஸ்டல்களில் மெஸ்களில் ஓட்டல்களில் (சுய சமையலும் தான்) சாப்பிடும்‌ போது அப்பாவின் சமையலை வெறுத்த பாவம்தான் அனுபவிக்கிறேன் என்று எண்ணினேன்.( அந்த உருளை‌ காரப் பொறியல், தோசை வெங்காய‌ சட்னி)

இன்று என்றாவது அதிசயமாய்‌  சமையல் கட்டில் நான் பணிபுரிந்தால் 
மகளோ மனைவியோ அந்த கிச்சனை சுத்தம் செய்ய பயந்து கொண்டே என்னை நாடு கடத்தி விடுகிறார்கள்.
எவ்வளவு சுத்தமாக வைத்துவிட‌ முயற்சித்தாலும் ஒரு தேர்ந்த ஃபாரன்சிக் டெக்னீஷியனுக்கே உரிய 
நுண்ணறிவுடன் பால் பொங்கி வழிந்ததையோ, கொத்தவரங்காய் அடிப்பிடித்தையோ.., இட்லி குக்கருக்கு விசில் போட்டு விட்டதையோ கண்டுபிடித்து விடுகிறார்கள்.

ஒரு நாள் வெஜிடபிள் ரைஸ் செய்ய குக்கரில் எல்லா காய்களையும் வெட்டிப்‌ போட்டேன். ஆனால் சாதம் என்னவோ அம்மன் கோயில் கூழ் வடிவில் வந்தது. காரணம் அதில் நான்‌போட்ட சிலபல வெண்டைக்காய்கள்!
வெஜிடபில் ரைஸ்ல வெண்டைக்காய் போடக்கூடாதாமே..?!
அன்று தொடக்கம் போனவாரம் வரை 'தலையாலங்கானத்து செரு வென்ற‌ பாண்டிய‌ நெடுஞ்செழியன்‌' ரேஞ்சுக்கு 'வெண்டைக்காயை வெஜிடபில் ரைஸில் போட்ட சத்தியநாராயணன்‌ ராமசாமி' என்று எங்கள்‌‌ குடும்பத்தில் புகழப் பெற்றேன்.

போன வாரம்தான் ஹரன்‌பிரசன்னா ஒரு‌ பதிவில் அவியலில் வெண்டைக்காய்‌ போடுவது நாரோயில், குமரி மாவட்டப் பழக்கம் என்று‌ எழுதி இருந்தார். அப்பாடா..ஃபிரைடு ரைசில் வெண்டைக்காய்‌ போடுவது தெரும்பிரி மாவட்டப் பழக்கம் என்று சொல்லிவிட‌ வேண்டியது தான்.
ஆகையால் மக்களே... 
அப்பாக்களின் அவதியை ஆயிரம்‌ நாவுகள்‌ கொண்ட அந்த ஆதிசேஷனால் கூட சொல்லிவிட‌ முடியாதென்றால் கேவலம்..நானென்ன கூறிவிடமுடியும்.
-- தந்தையர் தின‌ போஸ்ட் போன்டு போஸ்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக