வியாழன், 27 மே, 2021

செவிடன்

முரளி உண்மையில் வாயடைத்து அசந்து தான் போனான்.. ! 

பொதுவாக சென்னையிலேயே பிறந்து வளர்ந்த சென்னைக் காரர்களுக்கு பிற மாவட்டங்களில் அறிவாளிகள்‌ இருப்பார்கள்‌ என்பதையே நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும்.

 அதிலும் தர்மபுரி‌ மாவட்டத்தில், அரூரில் காது கேட்காத, சட்டையே போட்டறியாத ஒரு நிரட்சரகுட்சியிடம்‌ இத்தனை திறமைகள்‌ இருப்பது சென்னைக்கார முரளியை வாய்விட்டு அதிசயிக்க‌ செய்தது.

முரளி, சுரேஷின்‌ நண்பன். ஒரு எம்.என்.சி யில் எப்.எம்.சி.ஜி பொருட்களை விற்பதில் தன்‌ பேச்சுத் திறத்தைக் காண்பித்து லிஃப்ட், லிஃப்டாக பதவி உயர்வு பெற்ற ( மெதுவா முன்னேறினால் தான் படிப்படியாக...)
நடிகர் மாதவனைப் போல சார்மிங் பர்ஸனாலிட்டி.
( நாங்களும் அதுக்கு கம்மி இல்லை என்பது வேறு விஷயம்!)
சுரேஷ் டெல்லியில்(அப்போது) மத்திய அரசுப்‌பணியில் இருக்கும் என்‌ கஸின்.
பின்னே ஞானும். கூடவே செவிடனும்!

அந்த வாதாம்‌ மரத்தடியில் உட்கார்ந்திருந்தோம்.

ஒரு இளமையான மேடி, 
இளம் அமீர்கான், 
மெலிந்த அமிதாப் (நான்தான் 😂) மற்றும்  காமடியன்‌ ஜார்ஜ் (கைதி படத்துல பயந்த போலீஸா நடிப்பாரே..?!) போன்ற உருவமுள்ள ஒருவர் எ‌ன நால்வரையும் 
பார்த்தவர்கள் என்ன நினைப்பார்களோ தெரியாது; ஆனால் பேச்சைக் கேட்டவர்கள், கறுத்த அந்த மனிதனை கதாநாயகனாக உணர்வார்கள்.

 தெர்ம்பிரி ஸ்லாங்கில் காது கேளாத ஒருவரின் பேச்சு. ஆனால் மூக்கின்‌மேல் விரலை வைக்கச் செய்யும்!

செவிடன் என்று எங்களால் அழைக்கப்படும் அந்த நான்காம் நபர் எங்கள் மூவருக்கும் 'சோஸ்யம்' பார்த்துக் கொண்டிருந்தார். 

காடு..ஊடு..ரோடு..மூணுல ஒண்ணு சொல்லு!
முரளி சொன்னான்,
உடனே அதற்கு ஒரு பலன்‌ சொல்லப்பட்டது.

கல், மரம், கொட்டை ஒண்ணத் தொடு.
தொட்டதும்..சுரேஷுக்கு ஒரு‌பலன்.

வானம், பூமி, காத்து...ஒண்ணு சொல்லு..!
சொன்னதும் எனக்கு ஒரு‌பலன்!

இதெல்லாம் தமாஷாக இருந்தாலும் அதில் எளிய‌ மனிதர்களின் ஒரு லாஜிக் இருந்தது.

செவிடன் என்று எங்கள் குடும்பங்களால் அழைக்கப்பட்ட அம்மனிதர் காது கேளாமல், ஒண்ணரைக் கண்ணாக இருந்தாலும் நாற்பதுக்கு மேல்  உடலில் வயது ஏறாத உழைப்பாளியாக இருந்தார். புளியங்கொட்டை போன்ற‌ நிறம்..மினுமினுப்பு ( வியர்வை)

பூதத்துக்கு வேலை தருவது போல வேலைகளைத் தந்து கொண்டே இருக்க‌வேண்டும். கூலி பேசி விட்டுத்தான்‌ வேலை செய்வார்.

இடையில் சாப்பாடு போடு..என்று‌ இரண்டு வேளை சாப்பிடுவார்.

சோமம் குடு! என்று‌ பழைய வேட்டியை கேட்டு வாங்கிச் செல்வார்.

ஆனால் பேசிய காசில் நாலணா கூட குறையக்கூடாது.

ஏம்பா..அதான் ரெண்டு‌ நேரம்‌ சாப்பிட்ட..?
வேட்டி‌ வேற‌ வாங்கிருக்க? என்று வீட்டுப் பெரியவர்கள் கேட்டால்...,
" அது தருமம்..இது கூலி!"
டாண் என்று‌ பதில் வரும்!

பிறகு இடைவெளி இருந்தால் சிறுவர்களுடன் பேசி‌க் கதை சொல்லி பொழுது போக்குவார்.

நான்‌ கேட்ட‌ ஆரம்ப கால  ராமாயணம் அவர்‌ சொன்னது தான். பிறகு தான் சக்ரவர்த்தி திருமகன் படித்ததெல்லாம்!

...அப்போ ராமர்..நீலத்துல பார்த்தார்...
( நீலம்னா..ஞான திருஷ்டி!) சீதா தேவி கண்ணீரா ஊத்துறா...!

...லப்பணன் ( லக்ஷ்மணன்) கோவமாயி..அம்புவிட்டான்..
கும்பன் அத்தையெல்லாம் பெருமூச்சு விட்டே முறிச்சான்.....

"ஆரு‌ மனிதா காவலாள்...? நான் ராமசாமி ஏவலாள்..." என்று இலங்கை கோட்டைக் காவலனிடம் அனுமாராய்ப்‌ பேசுவார்!

இப்படியே நீண்டு இரண்டு மூன்று‌ நாட்கள்‌ தொடரும்‌ கதை.

கையில் பெருமாள்‌ என்று‌ பச்சை குத்தியிருப்பார். அதுதான்‌ தன்‌ பெயர் என்று சிரிப்புடன்‌ சொல்வார்.
நாங்கள் எல்லாரும் கூட செவிடன்‌ என்றே குறிப்பிடுவோம். அது தெரிந்தாலும் பொருட் படுத்துவதில்லை. 

...ஆரு செத்துட்டாங்க...?

இந்திரா காந்தி என்றோம்..
புரியவில்லை.பிரதமர் என்றோம் விளங்கவில்லை. பிறகு பத்திரிக்கையில் வந்த புகைப்படத்தை காட்டியதும்...
"அட்டடோ! நேரு மக!" என்றார்.

சற்று அமைதியாகச் சில கணங்கள் இருந்தவர்,' ஒர்ரூவான்னா அது பத்துபைசாக்கு சமம். அதுக்கு மேல கெடயாதுன்னிட்டா!' அதான் கொன்னுட்டாங்க!' என்று பண மதிப்பு வீழ்ச்சி‌ பற்றி ஒரு‌பொருளாதாரக் கருத்தை வெளியிட்டார்.

காலிஸ்தான்‌ பிரச்னையைப்‌ பற்றி விளக்க வழி தெரியாமல் நாங்கள் அமைதி காத்தோம்.

ஒரு நாள் இரண்டு வாழை இலையை எடுத்து அதை  நடு நடுவே சன்னல் போல் கீறி ஒன்றுள் ஒன்று சொருகி விட்டார்.
இலையைக் கிழிக்காமல் பிரிக்கச் சொன்னார். அந்தப் பந்தயத்தில் நாங்கள்‌ தோற்றோம். அவர் மறைத்து வைத்து இரு இலைகளையும்‌ பிரித்தார்.

எனக்கு சொல்லித்தரக் கேட்டபோது..
'ஒர்ரூவா குடு' என்றார். என்னிடம் அப்ப பணமில்லாமல் மிஸ்ஸாயிடுச்சி.
இப்ப நூறு‌ரூவா தரவும் நான்‌ரெடி..ஆனா வாய்ப்பில்ல ராசா...வாய்ப்பே இல்ல!

இப்ப அது தெரிந்தால் யூட்யூப்ல போட்டு வ்யூவ்ஸ் அள்ளலாம். யாரிடம்‌கேட்பது.?

விறகு வெட்டுவது, மண் வெட்டுவது, கூரை மேய்வது, காய்கறிச்‌செடி பாத்தி கட்டுவது போன்ற‌ கடின‌ வேலைகளை செய்வார்.

நாங்கள் எல்லாம்‌ சுரைக்காய்‌ புருடையை  இடுப்பில் கட்டிக் கொண்டு நீச்சல் கற்கப் போன போது எதிர்வீட்டு கமால் தீனையும் அவன் அண்ணன் சேட்டுவையும் இரண்டு வடக்கயிறில் கட்டி இரண்டு கையில் பிடித்துக் கொண்டு (பம்பு செட்) கிணற்றில் குதிக்கச் சொல்லி நீச்சல் கற்றுத் தந்தார். 

இரண்டு‌ பையனும் ஆளுக்கு ஒருபுறம் தண்ணீருக்குள் இழுக்க கரையில் காஸாபியாங்கா மாதிரி உறுதியாக நின்று நீச்சல் கற்றுத் தந்தார்.

ஒரு‌ முறை வெட்கச் சிரிப்புடன்‌ தனக்கு இரு‌ மனைவிகள் என்றார். காஸாபியாங்காவா? காஸனோவா வா? என்று அதிசயித்தேன்!

சுளுக்கு ஏற்பட்டால் பாடம் போடுதல், எண்ணை வைத்து நீவுதல் என்று ஆபத் பாந்தவனாய் கை வைத்தியம் பார்க்கவும் தெரியும்.

இன்னும் நானறியாத ரகசியம்‌ பலவும் இருக்குமோ என்னவோ?!

பெருமாள் என்ற‌ பெயர் பொருத்தமானதே. பெரும் ஆள்தான் அவர். நாங்கள் கூட அப்படியே அழைத்திருக்கலாமோ..?!

மெல்ல ஆரோக்யம் குன்ற, உடல் நிலை சரியில்லை என்று அடிக்கடி வந்த போது சொல்வார். வருகை குறைந்து நின்றே போனது.
அவர் நினைவும் மனதில் நிரந்தரமாக நின்று போனது.

ஒவ்வொரு முதியவரோடும் ஒரு லைப்ரரி மறைகிறது!
எதையெதையோ சிறுவயதில் மனப்பாடம்‌ செய்தேன்..அந்த செவிடரின்  ராமாயணத்தை மனப்பாடம் செய்யாமல் விட்டுவிட்டதை இன்றைக்கும் பெரு இழப்பாகவே  உணர்கிறேன்.!

கீழே..காமடியன் திரு.ஜார்ஜ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக