வியாழன், 27 மே, 2021

காப்பிய‌ மௌனம்

காப்பிய மௌனம்...

ஒரு பெரும் எழுத்தாளர் ( யாரென நினைவில்லை..) காப்பிய மௌனம் பற்றி ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். ராமாயணத்தில் வரும் ஊர்மிளாவைப் பற்றியது. ராமனையும்,இலக்குவனையும் விதந்தோதும் காப்பியம் இலக்குவன் மனைவி ஊர்மிளையின் இடியோசை மௌனத்தை பதிவு செய்யவில்லை. 
14 ஆண்டுகள் காட்டுக்குப் போவதென முடிவு செய்த இளையோன் தன் மனைவி ஊர்மிளாவின் கருத்தை அறிய நினைக்கவில்லை. பின் அயோத்தி திரும்ப வந்து 14 ஆண்டுகள் சேர்த்து வைத்து தூங்கினான் என்றும் அப்போதும் ஊர்மிளா தனிமையில் வாடினாள் எனவும் கூறுவர்.

இங்கு ஊர்மிளாவின் பெருமை காப்பியத்தில் மௌனமாக ஜ்வலிக்கிறது.

நடைமுறை வாழ்வில் கூட இது போல் மௌனங்கள் உள்ளதை உணர்கிறோம்.

1.சகாயம் ஐ.ஏ.எஸ்:

தன் ஐஏஎஸ் நேர்காணலில் ஏன் இந்தி தெரியாதா என்று கேட்கப்பட்டதற்கு அதைவிட சிறப்பான தமிழ் தெரியும் என்றாராம். இத்தகைய பதிலால் உங்களை தேர்ந்தெடுப்பது தடைபடும் என்ற பயம் இல்லையா என்று கேட்கப்பட்ட போது...ஐஏஎஸ் என்பதை விட தமிழன் என சொல்லிக் கொள்வதே பெருமை என்றாராம். 
 
இதற்கு கை தட்டிப் பெருமைப் படுகையில் இத்தகு பதிலுக்காக சுணங்காமல் அவரை தேர்வு செய்த அந்த இந்திஅதிகாரி மௌனமாக ஜொலிக்கிறார்.

2. ஜெ : கருணா.

கருணாநிதி முதல் வராக இருந்த ஒரு நாளில் திடும் என வாராது வந்தது போல் ஜெ சட்டசபையில் பிரசன்னமானார். திமுக அரசை எதிர்த்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக நெடு நேரம் வாசித்தார், பதிலுக்குக்கூட காத்திராமல் வெளியறினார். அதிமுக உறுப்பினர்கள் மேசைகளை தெறிக்க விட்டனர். இன்று வரை ர.ரக்கள் இதனை சிலாகித்துப் பேசுவார்கள். 

ஆனால் அவ்வாறு சடசடவென குற்றச்சாட்டைப் பேச அனுமதித்து அவரை எதிர்க்கட்சித்தலைவராக ஸ்கோர் செய்யவிட்ட திமுக/ கருணாநிதியின் மௌனம் ஜொலிக்கிறது.

3. பாகப்பிரிவினை படத்தில் கோவிலுக்குச் செல்லும் கைவிளங்காத சிவாஜியைப் பார்த்து இப்படிப் போய் எப்பிடி சாமி கும்பிடுவ? சல்யூட் அடிப்பியா என எம்.ஆர்.ராதா கேட்டு கைதட்டு பெறுவார். இங்கு சிவாஜியை கிண்டல் செய்து ராதா ஸ்கோர் பண்ணினாலும், காட்சியின் சிறப்பு கருதி சிவாஜி மௌனம் காத்தார்.

உயர் விழுமியங்களைக் காக்க மனித குல மாண்பை, சட்டத்தை, மரபை, நீதியைக் காக்க தன் அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு மௌனம் காப்பவன் காப்பியத்தில்/ காலத்தால் போற்றப் படுகிறான்.

நண்பர்களுக்கும் தெரிந்த உதாரணங்கள் கூறினால் நன்றியுடையவனாவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக